ஒரு குட்டி கதை- கிளியின் சாமர்த்தியம்..!

0
1520
        அடர்ந்த காட்டிற்குள் சென்று திரும்பிய ஒருவர், அங்கிருந்து ஓர் அழகான கிளி ஒன்றினை தன் மனைவிக்காக பிடித்து வந்திருந்தார். அந்த கிளியின் அழகில் அவரும், அவரது மனைவியும் சொக்கிப்போய், அந்த கிளியினை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர். 
        ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் அந்தக் காட்டிற்குள் செல்ல இருந்த அந்த நபர், அந்த கிளியிடம், “நான் காட்டிற்குள் செல்ல இருக்கிறேன்; அங்கு உன் உறவினர்கள் இருந்தால் அவர்களிடம் எதுவும் சொல்ல வேண்டுமா..?சொல்.. என்று அந்த கிளியிடம் கேட்டார். அதற்கு அந்த கிளி, அந்த நபரிடம் நான் இங்கு நலமாக இருக்கிறேன். எனக்கு நேரத்திற்கு நேரம் சரியான உணவு கிடைக்கிறது என்று அங்கு கூறிவிடுங்கள் என்று பதிலளித்தது. 
       காட்டிற்குள் சென்ற அந்த நபர், ஒரு மரத்தின் அடியில் நின்று மரத்திலிருந்து கிளி கூட்டத்திடம் வீட்டில் இருந்த கிளி சொன்னதை அப்படியே சொன்னார். ஆனால் அந்த கிளிகள் எதையும் கண்டுகொள்ளவில்லை. இப்படி அடுத்த மரத்திற்கும் சென்று கூற அங்கிருந்த கிளிகளும் எதையும் கண்டுகொள்ளவில்லை. 
     அதற்கு அடுத்தபடியாக மூன்றாவது மரத்திற்கு அடியில் சென்று சொன்னபொழுது, அந்த மரத்தில் தனியாக இருந்த ஒரு கிளி கண்ணீர் விட்டு கதறி அழுது மரத்திலிருந்து கீழே விழுந்து துடிதுடித்து இறந்து போனது. இதைப்பார்த்து கவலை அடைந்தார் அந்த நபர். அங்கு நடந்த இந்த சம்பவத்தை வீட்டிற்கு வந்து கிளியிடம் கூறினார். 
        இதைக் கேட்ட வீட்டுக்கிளி, அந்த கிளியை போலவே கண்ணீர் விட்டு கதறி அப்படியே கீழே விழுந்து துடிதுடித்து இறந்து போனது. இந்தக் கிளியும் இறந்து போனதை எண்ணி கவலை கொண்ட அந்த நபர், கூண்டிற்குள் இருந்து அந்த கிளியை வெளியே எடுத்து வீட்டிற்கு பின்னால் தூக்கி எறிந்தார். 
     கீழே விழுந்த அந்தக் கிளி சிறகு தட்டி வானை நோக்கி பறக்கத் தொடங்கியது. இதைப் பார்த்த அவருக்கு இந்த கிளியின் செயல் விசித்திரமாக இருந்தது காட்டில் இருந்த கிளி வீட்டில் இருந்த இந்த கிளிக்கு தப்பிப்பதற்கு அழகான ஒரு வழியை சொல்லிக் கொடுத்திருக்கிறது. தப்பித்துச் சென்ற வீட்டுக்கிளி காட்டிற்குள் சென்று அந்த கிளியோடு மீண்டும் ஜோடி சேர்ந்து கொண்டது. 
       நண்பர்களே… இயற்கை, பல விதங்களில் எதையாவது ஒன்றினை நமக்கு கற்று கொடுத்து கொண்டு இருக்கின்றது. நம்மை சுற்றி நடக்கும் பல நிகழ்வுகள் மூலமாக நாமும் பல விஷயங்களை இந்த கிளி போலவே கற்றுக் கொண்டால் வாழ்வில் வெற்றி அடையலாம்.