ஒரு குட்டி கதை – கணவனும் மனைவியும் இப்படித்தான் இருக்க வேண்டும்..!

0
1326
     மகான் கபீர்தாசர், தன்னிடம் வருபவர்களின் கவலையை நீக்கும் வழியை கற்று கொடுத்து, ஆன்மீக அமைதியை மனதில் நிலைநாட்டி அவர்களை அனுப்பிவைப்பார். அதனால் அவரைக் காண தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். 
     அப்படி இருக்கையில் ஒரு நாள் மகான் கபீர்தாசர், தன்னைத் தேடி வந்தவர்கள் அனைவருக்கும் உபதேசம் அளித்துவிட்டு அறைக்கு திரும்பும் பொழுது, நெடு நேரமாய் மரத்தடியிலேயே இருந்தபடி கபீர்தாசரை சந்திக்கவா? வேண்டாமா? என்று குழப்பத்தோடு நின்றுகொண்டிருந்த ஒருவனைக் கண்டார். அவரை கைகாட்டி வருமாறு அழைத்தார். வாடிப் போயிருந்த அவனது முகத்தை பார்த்த கபீர்தாசர், “உனக்கும் உன் மனைவிக்கும் ஏதோ பிரச்சனை போல் தெரிகிறது” என்றார்.
        வந்திருந்தவரும் தன் துன்பத்தை சொல்லாமல் புரிந்து கொண்ட கபீர்தாசரை பார்த்து கலங்கிய படியே ‘ஆமாம்’ என்றார். மேலும் “நான் மகிழ்ச்சியாய் வாழ வழி கூறுங்கள்” என்றான். உடனே கபீர்தாசர் அவரை அருகில் அமர வைத்துவிட்டு அவர் முன்பாக அவரும் அமர்ந்தார்.
       அமர்ந்த கபீர்தாசர், அருகில் கிடந்த சிக்குண்டிருந்த நூல்கண்டு ஒன்றினை எடுத்து பிரிக்க ஆரம்பித்தார். வந்திருந்தவர் கபீர்தாசர் ஏதாவது ஒரு வழி சொல்வார் என்று பொறுமையாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் கபீர்தாசர் வீட்டுக்குள் இருந்த தன் மனைவியிடம், ஒரு விளக்கு ஒன்றினை எடுத்து வரச் சொன்னார்.
       அது பகல் வேலை என்பதால் போதுமான வெளிச்சம் இருந்தும் கபீர்தாசர் எதற்காக விளக்கை கேட்கிறார் என்று வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை . அவர் மனைவியும் எதுவும் சொல்லாததை கண்டு ஆச்சரியமாக பார்த்தார். விளக்கை வைத்துவிட்டு உள்ளே சென்றார் கபீர்தாசரின் மனைவி.
     கொஞ்ச நேரத்தில் கபீர்தாசரின் மனைவி இருவருக்கும் தேநீர் அருந்துவதற்காக கொண்டு வந்தாள். தேநீரை குடித்ததும் வந்தவர் தேநீரில் சர்க்கரைக்கு பதிலாக உப்பினை பயன்படுத்தி இருக்கிறார் என்பதை கண்டு கொண்டார். அதனால் வந்தவர் தேநீர் அருந்தாமல் பக்கத்தில் அப்படியே வைத்துவிட்டார். ஆனால் கபீர்தாசர் ரசித்து குடித்து விட்டார். உள்ளே இருந்து மனைவி, “இனிப்பு போதுமா” என்று கபீர்தாசரிடம் கேட்க, கபீர்தாசரும் “போதும்… சரியாகத்தான் இருக்கிறது” என்று கூறினார். நடப்பவற்றை வந்தவர் குழப்பத்தோடு பார்த்தபடியே இருந்தார்.
       அமர்ந்திருந்த கபீர்தாசர் எழுந்து வந்த வரை நீங்க கிளம்பலாம் என்றார். அதற்கு வந்தவர், தனக்கு பிரச்சனைகளை தீர்க்க வழி சொல்லுகிறேன் என்றீர்கள்; ஒன்றும் சொல்லவில்லையே; என்று கேட்டார்.
      அதற்கு கபீர்தாசர், இங்கு நடந்த சம்பவமே, இப்பிரச்சினைக்கான தீர்வு என்றார். வந்தவர் கபீர்தாசர் சொல்வதை புரிந்து கொள்ள முடியாமல் விழி பிதுங்கி நின்றார்.
       அவரை பார்த்து சிரித்தபடியே கபீர்தாசர், “பகலிலே விளக்கு கேட்ட என்னிடம் ,என் மனைவியை எதுவும் சொல்லாமல் விளக்கை கொண்டு வந்து வைத்தாள். அவள் எதையும் கண்டு கொள்ளவில்லை. தேநீரில் சர்க்கரைக்கு பதிலாக உப்பினை பயன்படுத்தி இருந்தால் நானும் அதை கண்டுகொள்ளவில்லை..
         யஜுர் வேதம் என்ன சொல்கிறது என்றால், எவன் ஒருவன் தன் துணையிடம் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இருக்கிறானோ அவனே சொர்க்கத்தில் வாழ்வது போல் வாழ்வான் என்கிறது.
      ஆதலால் சிறிய பிரச்சினைகளிலும் குற்றம் காணாமல், குற்றங்களை கண்டும் காணாமல் இருந்து கொண்டால் இல்லறம் தித்திக்கும்” என்றார் கபீர்தாசர்.