விக்கிரமாதித்த மகாராஜா கிளியான கதை-பகுதி-2 – சவாலில் தோற்றுப்போன ரூப சுந்தரி..

0
975
[முதல் பகுதியை படிக்கவும்] 
       வியாபாரம் மட்டுமல்லாமல் பஞ்சாயத்துக்கு வரும் வழக்குகள் பலவற்றிற்கும் சரியான தீர்வினை கூறி பாராட்டு பெற்றது விக்ரமாதித்தன் கிளி. இப்படி இருக்கையில் வினோதமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. 
         வழக்கு என்னவென்றால் அப்பாசி என்ற இளைஞன் ஒருவன் ரூப சுந்தரி என்ற தாசி, தனது முந்தைய நாள் கனவில் வந்ததாக நண்பனிடம் கூறிக்கொண்டிருந்திருக்கிறான். இதை கவனித்த ரூப சுந்தரியின் பணிப்பெண், ரூப சுந்தரியிடம் நடந்ததை வந்து கூற, அவள் பஞ்சாயத்தை கூட்டி, தன்னை கனவில் கண்ட அதற்காக அப்பாசி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் அபராதமாக தர வேண்டும் என்று முறையிட்டாள். 
       கூடியிருந்த பெரியவர்கள் அனைவரும் ரூப சுந்தரியின் மிரட்டலுக்கு பயந்து என்ன சொல்வது என பயந்து விக்கிரமாதித்தன் கிளியிடம் வழக்கைக் கொண்டு வந்திருந்தனர். 
         வழக்கை விசாரித்த பார்த்த விக்ரமாதித்தன் கிளி ஒரு தீர்வை சொன்னது. அதாவது சபைக்கு ஆயிரம் பொற்காசுகளை கொண்டுவரச் சொல்லி அதனை ஒரு துணியில் கட்டி ஒரு கம்பத்தின் உச்சியில் அதை தொங்கவிட வைத்தது. அதனது பிம்பம் தெளிவாக தெரியும்படி கம்பத்தின் கீழே ஒரு கண்ணாடி வைக்க சொல்லியது. 
     அதன்பின்னர் விக்ரமாதித்தன் கிளி, ரூப சுந்தரியை அழைத்து, கண்ணாடியில் தெரியும் பொற்காசு முடிச்சினை எடுத்துக்கொள்ள சொல்லியது. இதைக் கேட்டதும் ரூப சுந்தரிக்கு கோபம் பீறிட்டு வந்தது . “கண்ணாடியில் தெரியும் மாயையை எப்படி எடுக்க முடியும்..? என பொங்கி எழுந்தாள். 
    அதைக்கேட்டு சிரித்தபடியே விக்ரமாதித்தன் கிளியானது, “கனவும் மாயையே; கண்ணாடியும் மாயையே; மாயைக்கு மாயை சரியாகப் போய்விட்டது” என பதில் உரைத்தது. இதை கேட்ட மக்கள் அனைவரும், ‘மிக சரியான தீர்ப்பு’ எனக் கூறி விக்ரமாதித்தன் கிளியை பாராட்டி சென்றனர். 
         இதைப்பார்த்து வெகுண்டெழுந்த ரூப சுந்தரி, விக்கிரமாதித்தன் கிளியைப் பார்த்து, “உன்னை விரைவில் கொன்று தலை வேறு கால் வேறாக சூப் வைத்து சாப்பிடுவேன்” என்று சபதம் இட்டாள். 
            இதைக் கேட்டதும் விக்ரமாதித்தன் கிளியானது, “கர்வமும் அகங்காரமும் கொண்ட உன்னை மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி, தக்க புத்தி புகட்டுவேன்” என சூளுரைத்து. 
       அடுத்தநாள் ரூப சுந்தரியின் தொடர் மிரட்டலாலும், வற்புறுத்ததாலும் செட்டியார் கிளியை ரூப சுந்தரியிடம் ஒப்படைத்தார். விக்கிரமாதித்தன் கிளியைப் பார்த்து சிரித்தபடியே, “நான் சவாலில் ஜெயிக்க போகிறேன் உன்னால் என்னை என்ன செய்ய முடியும்” எனக் கூறி விக்கிரமாதித்த கிளியை பணிப் பெண்ணிடம் கொடுத்து சூப் தயார் செய்யும்படி சொல்லிவிட்டு குளிக்க தயாரானாள். 
          பணிப்பெண் கிளியை கூண்டில் அடைத்து விட்டு மசாலா தயார் செய்தாள். அந்த நேரத்தில் விக்ரமாதித்தன் கிளி, தப்பிக்க ஒரு வழியினை யோசித்துக் கொண்டிருந்தது. 
           பணிப்பெண் வந்து பார்க்கும் பொழுது இறந்த நிலையில் விக்ரமாதித்தன் கிளி கிடக்க, பணிப்பெண், கூண்டை அலட்சியமாக திறந்து லேசாக கையில் எடுத்தாள். 
          இதுவே சரியான தருணம் என்று விக்ரமாதித்தன் கிளி, பணிப்பெண்ணின் கையில் நகங்களால் காயப்படுத்தி விட்டு தப்பித்து விட்டது. 
         ரூப சுந்தரிக்கு என்ன பதில் சொல்வது என பயந்த பணிப்பெண், கிளி தப்பித்ததை மறைத்துவிட்டு, ஒரு கவுதாரி வாங்கி சூப் தயார் செய்து வைத்தாள். ‘சவால் விட்ட கிளியை சூப் செய்து சாப்பிடுகிறோம்’ என்ற கர்வத்தில் ரூப சுந்தரி ரசித்து ருசித்து சூப் சாப்பிட்டாள். 
    
      அங்கிருந்து தப்பித்த விக்ரமாதித்தன் கிளி, அருகிலிருந்த கோவிலின் கோபுரத்தில் அமர்ந்திருந்தது. அடுத்த நாள் கோவிலுக்கு ரூப சுந்தரி வருவதை கண்டதும் அவள் கண்ணை மூடி வேண்டிக் கொண்டிருந்த பொழுது, விக்ரமாதித்தன் கிளி சிலைக்கு மறைவாக போய் நின்றுகொண்டு ரூப சுந்தரியின் வேண்டுதலைக் கேட்க தொடங்கியது. 
         ரூப சுந்தரி கடவுளிடம் தான் உயிருடன் வைகுண்டம் வர வேண்டுமென வேண்டிக் கொண்டிருந்தாள். இதைக்கேட்ட விக்கிரமாதித்தன் கிளி, சவாலில் ஜெயிக்க இதுவே சரியான நேரம் என உணர்ந்து சிலைக்கு பின்னாடி இருந்து கடவுள் போல் பேசத் தொடங்கியது. 
       “ரூப சுந்தரி..! நான் சொல்வதை போல் கேட்டால் நீ வைகுண்டம் செல்லலாம்” எனக் கூறியது. இதைக் கேட்டதும் கடவுள் தான் பேசுகிறது என ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும், “தான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டாள். 
          அதற்கு விக்கிரமாதித்தன் கிளி, “உன் சொத்துக்களை ஏழைகளுக்கு தானம் செய்துவிட்டு, வரும் வெள்ளியன்று பகல் 12 மணிக்கு தலைமுடியை அகற்றிவிட்டு, கருப்புமையையும் குங்குமத்தையும் உடலில் பூசிக்கொண்டு, அதிர்ஷ்ட தேவதையின் வாகனமான கழுதையின் மீது ஏறி கோவிலை 3 முறை சுற்றி வந்தால், நான் உன் முன் தோன்றி, புஷ்ப விமானம் மூலம் வைகுண்டம் அழைத்துச் செல்வேன்” என்றது. 
         இதைக் கேட்ட ரூப சுந்தரி மகிழ்ச்சியோடு, “அப்படியே செய்கிறேன்” என்று கூறி வீடு திரும்பினாள். நாடு முழுவதும் இச்செய்தி காட்டுத்தீ போல் பரவியது. 
         ரூப சுந்தரி தன் செல்வங்களை தானம் செய்துவிட்டு, தனது தலைமுடியை எடுத்துவிட்டு, கிளி சொன்னபடியே கருப்பு மை, குங்குமத்தை உடலில் பூசி, கழுதை மீது ஏறி கோவிலை வலம் வந்து கோவிலின் முன் வந்து நின்றாள். 
       அந்த நேரத்தில் விக்ரமாதித்தன் கிளி பறந்து வந்து அவள் முன்பு நின்றது. கிளியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரூப சுந்தரி குழப்பத்தோடு ஏறிட்டு பார்த்தாள். 
        அந்த நேரத்தில் விக்கிரமாதித்தன் கிளி, “சரியான நீதி வழங்கிய என்னை அழிக்க நினைத்தாய். ஆனால் தர்மம் வென்று விட்டது. நான் சொன்னபடியே சவாலில் ஜெயித்து விட்டேன்.” என விக்கிரமாதித்தன் கிளி கூற, இதைக்கேட்ட ரூப சுந்தரி அந்த இடத்திலேயே கீழே விழுந்து மூர்ச்சை அடைந்தாள். 
  
         அகங்காரம் பிடித்த பெண்ணிற்கு சரியான புத்தி புகட்டியதாக அனைவரும் விக்கிரமாதித்தன் கிளியை பாராட்டினர்.