ஒரு குட்டி கதை – நபிகள் நாயகமும் சிறுவனும்…

0
1752
      ஒருநாள் நபிகள் நாயகத்தினை சந்திக்க, ஒரு பெண் ஒருத்தி தன் 7 வயது மகனை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். நபிகள் நாயகத்திடம் அவள் தன் மகனை காட்டி, “இவன் தினமும் அதிகமாக இனிப்பு சாப்பிடுகிறான்; இனிப்பு சாப்பிட்டால் உடலுக்கு நல்லதல்ல என்று நான் எவ்வளவோ சொல்லி பார்த்து விட்டேன்; ஆனால் இவன் சொல்வதை கேட்பதில்லை; ஆதலால் நீங்கள் சொன்னால் இவன் கேட்பான்; நீங்கள் ஒரு வார்த்தை இவனை இனிப்பு சாப்பிடாதே என்று கூறுங்கள்;” என்றாள். 
           நபிகள் நாயகம் அந்தப் பெண்ணை ஏறிட்டுப் பார்த்து, “இப்பொழுது நீ உன் மகனை அழைத்துக் கொண்டு போ. அடுத்த வாரம் உன் மகனை அழைத்துக் கொண்டு இங்கு வா” என்று கூறி அனுப்பி வைத்தார். 
          “என்ன இவர்…! ‘இனிப்பு சாப்பிடாதே’ என்று ஒரு வார்த்தை சொல்வதற்கு அடுத்த வாரம் வர சொல்கிறார் என்று முணுமுணுத்தபடியே மகனை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள் அந்தப் பெண். 
        அடுத்த வாரம் தன் மகனை அழைத்துக்கொண்டு மீண்டும் நபிகள் நாயகத்தினை சந்திக்க சென்றிருந்தாள். நபிகள் நாயகம், அவளது மகனை அழைத்து மடியில் அமர வைத்து, “தம்பி இனிப்பு சாப்பிடக்கூடாது; அடிக்கடி இனிப்பு சாப்பிட்டால் உடல் நலக்குறைவு ஏற்படும்; ஆதலால் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்துவது நல்லது” என்று அறிவுரை கூறினார். நபிகள் நாயகம் சொன்னதை கேட்ட அந்தபையன் சரி என்று தலையசைத்தான். 
        ஆனால் அந்தப் பெண், “‘இனிப்பு சாப்பிடக்கூடாது’ என்று சொல்வதை கடந்த வாரம் அழைத்து வந்திருந்த பொழுதே சொல்லியிருக்கலாம். இந்த ஒரு வார்த்தையை சொல்வதற்கு எதற்கு ஒரு வாரம் கழித்து வரச் சொன்னார்” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். 
         மனதுக்குள் நினைத்ததை நபிகள் நாயகத்திடம் சட்டென்று கேட்டுவிட்டாள். “அய்யா…! இனிப்பு சாப்பிடக்கூடாது என்று நீங்கள் கடந்த வாரம் வந்திருந்த போதே சொல்லியிருக்கலாம் அல்லவா..! அதை ஒரு வாரம் கழித்து இப்பொழுது சொல்வதற்கு ஏதேனும் காரணம் உண்டா..? என்று கேட்டாள். 
        அதற்கு நபிகள் நாயகம் சிரித்தபடியே, “அம்மா..! கடந்த வாரம் உன் மகனை அழைத்து வந்திருந்த பொழுது என் மேசையின் மீது இனிப்பு பலகாரங்கள் இருந்தன. அதைத்தான் நானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். நான் சாப்பிட்டுக் கொண்டு, உன் மகனை சாப்பிடாதே என்று கூறினால் நியாயம் ஆகுமா.அப்படிக் கூறுவதற்கு எனக்கு தகுதியும் இல்லை அல்லவா..! அதனால்தான் ஒரு வாரம் நான் இனிப்புகளை சாப்பிடாமல் தவிர்த்து விட்டு இன்று அவனிடம் இனிப்பு சாப்பிடக் கூடாது என்று கூறுவதற்கு நான் தகுதி பெற்றவன் ஆனேன். இனி நான் சொல்வதை அவன் கேட்பான் என்று கூறி இருவரையும் அனுப்பி வைத்தார். 
கதை உணர்த்தும் நீதி 
நாம் அறிவுரை கூறுவதற்கு தகுதி உடையவனாக இருந்துகொண்டு அறிவுரை கூற வேண்டும்.