கந்தன் என்பவன் இரண்டு கழுதைகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்தான். ஒரு நாள் அக்கழுதைகளில் ஓன்று தவறுதலாக, பாழடைந்த கிணறு ஒன்றில் விழுந்தது. ஒரு சொட்டு நீர் கூட இல்லாத அந்தக் கிணற்றில் எப்படியோ சிறிய காயங்களுடன் அந்த கழுதை தப்பித்துக் கொண்டது . ஆனால் கழுதையை மேலே தூக்கும் அளவிற்கு கந்தனுக்கு எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை.
மற்ற விலங்குகளைப் போல் உடம்பு கால்களை கட்டி மேலே தூக்க முடியாது. கால் பக்கத்தில் கட்டினால் கழுதையின் உதை எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியும். ஆதலால் கால் உடம்புகளை கட்டி மேலே தூக்குவது கடினம். ஆதலால் கழுதையை தூக்குவதற்கு யாரும் முன்வரவில்லை. இரண்டு நாட்களாக கத்திக்கொண்டே பட்டினியோடு கிடந்தது அந்த கழுதை.
இதை பார்ப்பதற்கு கந்தனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. உடனே பக்கத்தில் இருந்தவர்கள் கழுதையை இப்படி பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆதலால் இதனை அப்படியே மூடி விடுவோம் . இப்படி பார்ப்பதைவிட அதை மூடுவதே சிறந்தது என்று கூறத் தொடங்கினர். கந்தனுக்கும் அது சரி என்று பட்டது. வேறு வழியில்லாமல் கந்தனும், மற்றவர்களும் மண்ணை அள்ளி அள்ளிக் கொட்ட ஆரம்பித்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாக கழுதையின் மீது மண் விழ விழ கழுதை மண்ணை உதறி விட்டு அதன் மீது ஏறி நின்றது. கழுதை மண்ணில் மூழ்கி விடும் என்று எல்லோரும் எதிர்பார்த்த பொழுது, தன் மீது பட்ட மண்ணை உதறி உதறி அதன் மீது மிதித்து, கடைசியில் கிணற்றை விட்டு மேலே வந்தது.
இக்கதையை போலவே, நம் மீது எத்தனை விமர்சனங்கள் விழுந்தாலும் அதை, கழுதை மண்ணை உதறியதுபோல் உதறிவிட்டு, அந்த விமர்சனங்களை நம் காலுக்கு உரமாக்கி விமர்சனங்களை ஏணி ஆக்கி நாம் முன்னுக்கு வரவேண்டும்.