தன்னம்பிக்கை கதை – அப்பா மகளுக்கு கூறிய அறிவுரை…

1
11867
         கமலா, எதற்கெடுத்தாலும் நினைத்தது நடக்கவில்லை என்று தன் அப்பாவிடம் புலம்பிக் கொண்டே இருப்பாள். “நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது..? ஒரு அடி எடுத்துவைத்தால் மூன்றடிச் சறுக்குகின்றது. எனக்கு ராசியே இல்லை.” என்று எதையாவது சொல்லி கொண்டே இருப்பாள்.
            அவளுக்கு தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும் என்று நினைத்த அவளது அப்பா, அவளை அழைத்து சமையல் அறைக்கு சென்றார். மூன்று பாத்திரங்களில் நீரை நிரப்பி கொதிக்க வைத்தார். முதல் பாத்திரத்தில் உருளைக்கிழங்கு நறுக்கிப் போட்டார். இரண்டாவது பாத்திரத்தில் முட்டை ஒன்றினை போட்டு வேக வைத்தார். மூன்றாவது பாத்திரத்தில் சிறிது அளவு காப்பி தூளை போட்டார்.
            சிறிது நேரத்திற்கு பின், மூன்று பாத்திரங்களையும் கீழே இறக்கி வைத்து விட்டு, கமலாவை அழைத்து “இந்த மூன்று பாத்திரங்களிலும் இருப்பதை பார்க்கும் போது உனக்கு ஏதாவது புரிகின்றதா..?” என்று கேட்டார்.
     ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தாள் கமலா. சிரித்தபடியே கமலாவின் அப்பா அவளிடம், முதல் பாத்திரத்தை காட்டி இதில் உள்ள உருளைக்கிழங்கு திண்மமானது. ஆனால் கொதிக்க வைத்ததும் மென்மை ஆகிவிட்டது. அடுத்து இரண்டாவது பாத்திரத்தை காட்டி, இதில் திரவத் தன்மை உடைய முட்டையானது, தற்பொழுது கொதிக்க வைத்ததும் திண்மமாகி இருக்கிறது. மூன்றாவது பாத்திரத்தை காட்டி, இதில் இருந்த காப்பித்தூள் தற்பொழுது நீருடன் கலந்து விட்டது..
         மூன்று பாத்திரங்களிலும் சம அளவு வெப்பம் அளிக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொன்றும் தன் இயல்புக்கு ஏற்றவாறு மாறி கொண்டது.
       நம் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் ஒரேவிதமான சவால்கள், பிரச்சனைகள் எதிர்கொண்டு வருகின்றன. அதை நாம் உருளைக்கிழங்கு போல் மென்மையாகி துவண்டு போகிறோமா….! இல்லை… முட்டை போல் மென்மையாக இருந்த நாம் வலு பெறுகிறோமா….! இல்லை… காப்பி தூளை ப் போல பிரச்சினையோடு கலந்து மடிய போகிறோமா..! என்பதை நாம் தான் நிர்ணயிக்க வேண்டும் என்றார்.
       இதைக்கேட்டதும் கமலா, “இனிமேல் புலம்பாமல் தன்னம்பிக்கையோடு தன் பிரச்சனைகளை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவேன்” என்று கூறி தன் தந்தையை அணைத்துக் கொண்டாள்.