பயமா… எனக்கா….! – ஒரு தன்னம்பிக்கை கதை..

2
7007
              ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒருவராகக் கருதப்பட்டவர் நெப்போலியன். தான் வாழ்ந்த காலத்தில் ஏராளமான வெற்றிகளை தன் நாட்டிற்கு தேடித் தந்தவர். தனது வலிமையாலும் புத்திசாலித்தனத்தாலும் ஐரோப்பிய கண்டத்தையே ஆட்டி படைத்தவர். எதற்கும் துணிந்தவர். “அஞ்சாநெஞ்சன்” என்று போற்றப்படும் இவர், ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பது போல இளம் வயதிலேயே பயம் அறியாதவராய் இருந்தார். அதற்குச் சான்றாகக் கீழ்வரும் சம்பவத்தினை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
           நெப்போலியன் பிரெஞ்சு மாகாணத்தின் பிரபலமான பள்ளி ஒன்றில் படித்துக்கொண்டிருந்தார். போதுமான அளவு கல்வியறிவு எட்டவில்லை என்றாலும் ஒழுக்கத்தில் சிறந்தவனாக இருந்து வந்தான். அப்படி இருக்கையில் ஒரு நாள் அவனருகில் இருப்பவனின் பொருள் ஒன்று காணாமல் போய்விட்டது. அதை நெப்போலியனை தவிர வேறு யாரும் எடுத்திருக்க முடியாது என்று யூகித்த அந்த மாணவன், உடனடியாக ஆசிரியரிடம் நெப்போலியன் திருடியதாக கூறினான்.
           இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த அந்த ஆசிரியர், நெப்போலியனை தனி அறைக்கு அழைத்துச் சென்று, பிரம்பால் எவ்வளவு அடிக்க முடியுமோ அந்த அளவுக்கு அவனை அடித்து விட்டார். நெப்போலியன், ஆசிரியர் அடித்த அடிகளை தாங்கிக் கொண்டு அமைதியாக வெளியே வந்தான். அடுத்த நாளில் அந்த மாணவனின் பொருள் அவனுக்கு கிடைத்துவிட, நெப்போலியன் திருடவில்லை என்பதை அந்த ஆசிரியரிடம் வந்து அந்த மாணவன் கூறினார்.
         உடனே அந்த ஆசிரியர் நெப்போலியனை அழைத்து, “நீ திருடவில்லை என்பதை நான் அடிக்கும் போது என்னிடம் கூறியிருக்கலாம் அல்லவா..?தேவையில்லாமல் அடிவாங்கி இருக்க மாட்டாய்..” என்று சற்று வருத்தத்தோடு கூறினார்.
         அதற்கு நெப்போலியன், “நீங்கள் அடிப்பதற்கு முன்னரே என்னிடம் அதை பற்றி கேட்டிருந்தால், நான் எடுக்கவில்லை என்று கூறியிருப்பேன். ஆனால் நீங்கள் அடிக்கும் பொழுது கேட்டதால் நான் ஒன்றும் சொல்லவில்லை. ஒருவேளை நீங்கள் அடிக்கும் பொழுது நான் திருடவில்லை என்று கூறியிருந்தால் நான் பயந்துபோய் பொய் சொல்கிறேன் என்று நினைத்திருப்பீர்கள். நான் பயந்து விட்டேன் என்று கூட யாரும் நினைக்கக் கூடாது. அதுதான் எனக்கு வலிக்குமே தவிர, நீங்கள் அடிப்பது ஒன்றும் எனக்கு வலிக்காது” என்று பட்டென்று கூறினான் நெப்போலியன். இந்த அஞ்சாத குணம் தான் அவனை ஐரோப்பியாவினை ஆள வைத்தது.