தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூல் நிலையம் வந்த கதை தெரியுமா..?

0
586
      தஞ்சாவூரை, சரபோஜி மன்னர் ஆண்டு கொண்டிருந்தார். ஒரு சமயம் அவர் காசி நகருக்கு யாத்திரை செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து பயணத்தை மேற்கொண்டார். அந்த நேரத்தில் கல்கத்தாவில் ஆங்கில ராஜபிரதிநிதியாக இருந்த அதிகாரி, சரபோஜி மன்னரை சந்திக்க முடிவு எடுத்தார். 
      அந்த ஆங்கிலேய ராஜ பிரதிநிதி, தமிழ் நூல்கள் பலவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பினை படித்துப் பார்த்து, வியந்து போய் தமிழ் மொழி மீது பற்று அதிகமாக கொண்டிருந்தார். அதனால் கல்கத்தா வரும் தமிழ் மன்னரை சந்தித்து, திருக்குறள் உள்ளிட்ட பல தமிழ் நூல்களின் பெருமையைப் பற்றி கேட்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். அதனாலேயே சரபோஜி மன்னரை சந்திக்க அவர் முடிவெடுத்திருந்தார்.
       அதன்படியே சரபோஜி மன்னரும் ஆங்கிலேய ராஜ பிரதிநிதியும் சந்தித்துக் கொண்டார்கள். சந்திப்பின் போது ஆங்கிலேய பிரதிநிதி, சரபோஜி மன்னரிடம் தமிழ் நூல்களைப் பற்றி கேட்க ஆரம்பித்தார். “திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பே இவ்வளவு இனிதாக இருக்கும் பொழுது, அதன் மூலம் எப்படி இருக்கும் என்று சிந்திக்கிறேன். ஆதலால் திருக்குறள் உள்ளிட்ட பல தமிழ் நூல்களின் மூல நூல்களை பற்றி நான் உங்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன். அதைப்பற்றி சொல்லுங்கள்” என்று ஆங்கிலப் பிரதிநிதி கேட்டார்.
      சரபோஜி மன்னர் மராட்டிய வழிமரபினர். அதாவது சரபோஜி மன்னரின் தாய் மொழி மராத்தி. ஆதலால் தமிழ் மொழியைப் பற்றி அந்த அளவிற்கு தெரியாது.
       அந்த இடத்தில் சற்று சுதாரித்துக் கொண்ட சரபோஜி மன்னர், “நான் நிறைய நூல்கள் வாசித்து உள்ளதால், நீங்கள் கேட்கும் குறிப்பிட்ட நூல்களை மட்டும் என்னால் எடுத்துச் சொல்ல முடியாது. ஆதலால் நான் தஞ்சாவூருக்கு சென்றதும், அங்குள்ள மூல நூல்களின் பெயர் பட்டியலையும், அதனோடு மூல நூல்களையும் நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்” என்றார் சரபோஜி மன்னர். அதற்கு அந்த ஆங்கில ராஜ பிரதிநிதி சம்மதித்து வழியனுப்பி வைத்தார்.
       தமிழ் மண்ணில் வாழ்ந்து கொண்டே தமிழ் நூல்களைப் பற்றி இவ்வளவு நாள் தெரியாமல் வாழ்ந்தது பெரும் வெட்கக்கேடு என்று நொந்து போனார் சரபோஜி மன்னர். அதைத் தொடர்ந்து அந்த ஆங்கிலேய ராஜ பிரதிநிதிக்கு தேவையான நூல்களின் பட்டியலையும், அதன் மூல நூல்களையும் அனுப்பி வைத்தார் சரபோஜி மன்னர்.
     அதன்பின்னர் பல வருடங்கள் தேடித்தேடி, தமிழ் நூல்களைப் பற்றிய பெரும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட சரபோஜி மன்னர், கிடைத்த ஆயிரக்கணக்கான நூல்களை கொண்டு உருவாக்கியதே தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூல்நிலையம்.