அற்புதமான நீதிக்கதை – மாட்டிற்கு நீதி கிடைத்தது..

0
1526
       ஆரம்ப காலத்தில் மனிதன் மாட்டினை தன் தேவைக்காக பயன்படுத்த தொடங்கினான்.
       ஒரு நாள் மனிதன் உழுது கொண்டிருக்கும் பொழுது மாட்டிடம், பார்த்தியா..! நீ முன்னால் செல்கிறாய்… நான் பின்னால் வருகிறேன்.. விவசாய தொழிலில் எப்பொழுதும் நீ முன்னால.. நான் பின்னால… இதுதான் என் விதி.. என்று ஐஸ் மழையை பொழிய தொடங்கினான். இப்படி ஒவ்வொரு தடவையும், மாட்டிடம் பக்குவமாக பேசிப்பேசி, அதனிடம் வேலை வாங்க ஆரம்பித்தான் மனிதன். 
        மாடு, மனிதனிடம் “நீ என்ன பயிர் செய்யப் போகிறாய்?” என்று கேட்டதற்கு மனிதன், “நான் நெல் பயிரிட இருக்கிறேன்” என்றான். அனைத்து வேலைகளிலும் நீ முன்னிலையில் இருப்பதால். இந்த விளைச்சலில் முன்னால் வருவதை எல்லாம் உனக்கு அளிக்கப் போகிறேன்; பின்னால் வருவதை எல்லாம் நான் வைத்துக்கொள்ள இருக்கிறேன் என்று கூறினான். இதைக் கேட்டதும் மாடு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது.
         தொடக்கத்தில் பச்சை பசேலென்று இருந்த பயிர்களை எல்லாம் மாடு பார்த்த பொழுது, இவை அனைத்தும் நமக்குத்தான் என்று நினைத்துக் மகிழ்ச்சி கொண்டது.
        அப்பொழுது மாட்டை பார்த்த மனிதன், “அவசரப்படாதே.. முன்னால் விளைகின்ற அனைத்தும் உனக்குத்தான் என்பதால் இப்பயிர்கள் அனைத்தும் உனக்குத்தான்” என்றான்.
      அறுவடை முடிந்தது. முன்னால் வந்த வைக்கோலை மாட்டுக்கு கொடுத்துவிட்டு பின்னால் வந்த நெல்லை மனிதன் வைத்துக்கொண்டான். 
         “இது சரியான நீதி இல்லை” என்று மனிதனிடம் மாடு கேட்டபொழுது, “சரி நெல்லிலும் நாம் பங்கிட்டுக் கொள்வோம்” என்றான். முதலில் போட்ட ஒப்பந்தத்தின்படி, இதிலும் “முன்னால் வருவது உனக்கு.. பின்னால் வருவது எனக்கு…” என்றான். அதன்படியே முன்னால் வந்த உமி, தவிடு மாட்டிற்கும், அரிசி மனிதனுக்கும் கிடைத்தது.
         “இதிலும் சரியான நீதி இல்லை” என்று மனிதனிடம் கேட்ட பொழுது. “சரி .. அரிசியை பங்கிட்டுக் கொள்வோம்.. உணவாக சமைக்கும் பொழுது முன்னால் வருவது உனக்கு.. பின்னால் வருவது எனக்கு..” என்றான். அதன்படி அரிசி வடித்த வடி நீர் மாட்டுக்கும், சோறு மனிதனுக்கும் கிடைத்தது.
         அனைத்திலும் ஏமாந்து போன மாடு, “ஒப்பந்தத்தை மாற்றிக் கொள்வோம் ” என்றது. “சரி… இனி முன்னால் வருவது எனக்கு… பின்னால் வருவது உனக்கு…” என்று மனிதன் கூறிக் கொண்டான். அடுத்த மாதம் பொங்கல் வந்தது. மனிதன் பொங்கல் தினத்தை மனிதனுக்கு என்று எடுத்துக்கொண்டான். அதற்கு அடுத்த நாளை மாட்டிற்காக மாட்டு பொங்கலை கொண்டாட வைத்தான்.
        அனைத்திலும் மனிதனின் சுயநலத்தால் ஏமாற்றப் பட்டோம் என்று மாடு நீதி தேவதையை பார்த்த பொழுது, நார்ச்சத்துள்ள வைக்கோலை தின்றதால் மலச்சிக்கலே வராத வரத்தை மாடு பெற்றுக்கொண்டது. மனிதன் மலச்சிக்கலில் மாட்டிக்கொண்டான்.
     சத்து குறைந்த அரிசியை மனிதன் தின்று தொப்பையை வளர்த்துக்கொண்டான். ஆனால் விட்டமின்களும் எண்ணெய் சத்துக்களும் கொண்ட தவிட்டை மாடு தின்று அதிக வலு பெற்றது.
        சக்தி மிகுந்த அரிசி கஞ்சி மாட்டுக்கு கிடைத்தது. அதில் சக்கையாக கிடைத்த சோறு மனிதனுக்கு கிடைத்தது.
சுயநலமிக்க மனித ஜாதியின் அநீதியில் நீதிதேவதை குறுக்கிட்டு திருத்தம் செய்து மாட்டிற்கு சரியான நீதியை வழங்கியது.