இன்றைய காலகட்டத்தில் முற்காலத்தில் பின்பற்றி வந்த பல்வேறு பழக்க வழக்கங்கள் நாகரிகத்துக்கு ஏற்றாற்போல் மாறிவிட்டன. அவற்றில் ஜோதிடமும் ஒன்று.
ஜோதிடக்கலை, ஆன்மீகத்தோடு இணைந்த அற்புத கலையாகும். ஆனால் ஒரு சிலரால் அதன் மேன்மை குன்றிக் கொண்டே வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. ஒரு காலகட்டத்தில் சிறிய அளவில் ஏமாற்றியவர்கள், இன்றைய காலத்தில் நாகரிகத்தோடு சேர்ந்து தொலைக்காட்சியில் வந்து நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று ஜோதிடர்களை பார்த்து குறை சொல்பவர்களும் உண்டு. ஜோதிடத்தை நம்பி சீரழிந்த வர்களும் உண்டு. அப்படி என்றால் ஜோதிடம் என்பது உண்மையானதா..? இல்லை.. ஏமாற்று வேலையா..?
ஜோதிடம் என்பது நம் வாழ்க்கையை கணிக்கும் உன்னத கலையாகும் . இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு, எப்பொழுது சூரியன் உதிக்கும்..? எப்பொழுது சூரியன் மறையும்..? எந்தெந்த நாட்களில் பவுர்ணமி, அமாவாசை, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் வருகின்றது..? என்பதை எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சாங்கம் என்று எழுதி வைத்து விட்டார்கள் என்றால் அவர்களின் ஞானத்தைப் பார்த்து வியப்பில் ஆழ்வதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. பஞ்சாங்கதோடு இணைந்ததை இந்த ஜோதிடக் கலையாகும். அப்படி என்றால் பஞ்சாங்கம் துல்லியமாக இருக்கும் பொழுது ஜோதிடம் ஏன் துல்லியமாக அமைவதில்லை என்று கேட்கலாம்.
இன்றைய காலகட்டங்களில் இயற்கையான சுகப் பிரசவங்கள் குறைந்து கொண்டே வருகின்றது. பெற்றோர்களும் டாக்டர்களும் நேரத்தை குறித்து வைத்துக்கொண்டு பிள்ளைகளை பெற்றெடுக்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அப்படி இருக்கையில் சரியான நேரத்தை கொடுத்தால் மட்டுமே நாம் துல்லியமான ஜோதிட பலனை அறிந்து கொள்ள முடியும். மேலும் நமது ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும்.
நமக்கு உடல் நலம் சரியில்லாத போது ஏதோ ஒரு மருத்துவமனையில் ஒரு டாக்டரை அணுகி சிகிச்சை பெறுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். சிகிச்சை சில நேரங்களில் நமக்கு பயணிப்பதில்லை. உடனே நாம் மருத்துவமே பொய்யானது என்று வாதிட்டுக் கொண்டு வீட்டிலேயே இருப்பதில்லை. உடனடியாக மற்றொரு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்கிறோம்.
அதைப்போலவே இன்றைய காலகட்டத்தில் போலியான ஜோதிடர்கள் பெருத்து விட்டார்கள். அவர்களால் சரியான ஜோதிட பலனை கணித்துக் கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. ஜோதிடர்களை குறை சொல்லலாமே ஒழிய, எக்காரணத்தைக் கொண்டும் ஜோதிடத்தை குறை சொல்ல வழி இல்லை என்பதே என்னுடைய கருத்து.