ஒரு குட்டி கதை – எது சிறந்த கல்..?

0
1037
      ஒரு அரசன், பக்கத்து நாட்டு அரசனோடு, விலை மிகுந்த வைரக்கல் ஒன்றினை பெறுவதற்காக போரிட்டான். இந்தப் போரில் அந்த அரசன் வெற்றி பெற்று அந்த வைரக்கல்லை தன் நாட்டிற்கு கொண்டு வந்து, பல காவலாளிகளை அந்த வைரக் கல்லுக்கு பாதுகாப்பாக நிற்க வைத்தான். 
      இந்த நேரத்தில், அந்த நாட்டிற்கு புத்த பிட்சு ஒருவர் வந்திருந்தார். இன்முகத்தோடு அந்த புத்த பிட்சுவையை வரவேற்ற அரசன், புத்த பிட்சுக்கு அந்த வைரக்கல்லினை காட்டினார். அந்த வைரக்கல்லினை பார்த்த அந்த புத்தபிட்சு ஏளனமாக சிரித்தார். இதைப்பார்த்த அரசனுக்கு ஒன்றும் விளங்கவில்லை 
       ஆயிரக்கணக்கில் காவலாளிகளை பறிகொடுத்துவிட்டு கொண்டு வந்த இந்த கல்லினால் உங்களுக்கு என்ன லாபம் ஏற்பட்டிருக்கிறது..? என்று அந்த புத்த பிட்சு கேட்டார். “வரவு ஒன்றுமில்லை.. ஆனால் இந்த கல்லினை எதிரிகள் தூக்கிச் சென்று விடாமல் பாதுகாக்க, தினமும் பாதுகாவலர்களை வைத்து காவலாளிகளுக்கென்று நான் அதிகம் செலவழித்து கொண்டிருக்கிறேன். அதனால் இதனால் எந்த லாபமும் இல்லை” என்று அந்த அரசன் கூறினான். 
       “ஒன்றுக்கும் பயன்படாத இந்தக் கல்லை பக்கத்து நாட்டிடம் போரிட்டு வாங்கியதற்கு பதிலாக, உன் நாட்டிலேயே இதைவிட விலையுயர்ந்த கல் ஒன்று இருக்கிறது; அதை எடுத்து இருக்கலாம்” என்றார் அந்த புத்த பிட்சு. 
       “என் நாட்டில் இதைவிட விலை உயர்ந்த கல்லா..? அது எங்கிருக்கிறது..?” என்று ஆசையோடு அந்த அரசன் புத்தபிட்சிடம் கேட்டார். அதற்கு அந்த புத்த பிட்சு, அருகிலிருந்த கிராமத்திற்கு அந்த அரசனை அழைத்துச் சென்று, ஒரு கிழவியின் குடிசையை காட்டி, இந்த குடிசையில் தான் இருக்கிறது என்றார். 
        இந்தக் குடிசையில் விலை உயர்ந்த கல்லா..? என்று ஆவலோடு குடிசைக்குள் சென்ற மன்னனுக்கு மாவரைக்கும் ஆட்டுக்கல் மட்டுமே கண்ணில் பட்டது. விலை உயர்ந்த கல் எங்கே..? என்று மன்னன் கேட்க புத்த பிட்சு அந்த ஆட்டுக் கல் தான் விலையுயர்ந்த கல் என்றார். ஒன்றும் புரியாத மன்னன், இந்த மாவரைக்கும் ஆட்டுக்கல் எப்படி விலையுயர்ந்த கல்..? என்று கேட்டார். 
          அதற்கு அந்த புத்த பிட்சு, பல பேர் சேர்ந்து, உயிரை பணையம் வைத்து ஒரு கல்லினை காப்பாற்றுவது விலை உயர்ந்த கல்லா..? மாவரைப்பதன் மூலம் அந்த கிழவிக்கு வருமானம் கொடுத்து கிழவியின் உயிரைக் காப்பாற்றுகிறதே, அது விலை உயர்ந்த கல்லா..? என்று கேட்டார். தனது அறியாமையை நினைத்து தலைகுனிந்து போனார் மன்னன். 
கதை உணர்த்தும் நீதி: 
        வாழ்வில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ, அதற்கு மட்டுமே கொடுக்க வேண்டும்.