அக்பர் பீர்பால் கதைகள் – இந்துமதத்தின் அடிப்படை சாராம்சம் என்ன..?

0
591
                 மன்னர் அக்பர் ஒரு நாள் பீர்பாலினை அழைத்து, “உங்கள் இந்துமதத்தின் அடிப்படை சாராம்சம் என்ன..? என்று கேட்டார். 
          அதற்கு பீர்பால், “பிறருக்கு நாம் எதை செய்கிறோமோ, அதையே இந்த உலகம் நமக்கு மீண்டும் செய்யும். நல்லதை செய்தால் நன்மையும், தீமையை செய்தால், தீமையும் கிடைக்கும்.” இதுவே இந்து மதத்தின் அடிப்படை சாராம்சம் என்றார். 
           உடனே அக்பர் இதை நான் எப்படி நம்புவது..? என்றார். மேலும் பீர்பாலின் கன்னத்தில் ஒரு அறை விட்டு, “இதனை இந்த உலகம் எப்படி திருப்பி செய்யும் என்பதை நான் பார்க்கிறேன்” என்று அக்பர் சிரித்துக் கொண்டார். 
         அரசவையை விட்டு வெளியே வந்த பீர்பால், வெளியே நின்ற காவலாளியின் கன்னத்தில் ஓர் அறை விட்டார். ஏறிட்டு பார்த்த காவலாளியிடம், “இது அரசர் தொடங்கிவைத்த விளையாட்டு.. இன்று நாம் யாரை பார்க்கிறோமோ அவரை கன்னத்தில் அறைய வேண்டும். இதுவே அந்த விளையாட்டு.” என்று கூறிவிட்டு சிரித்தபடி பீர்பால் வீட்டை அடைந்தார். 
        அடிபட்ட காவலாளி இந்த விளையாட்டை மற்றவர்களிடமும் கூற, அந்த விளையாட்டு அரசவை முழுவதும் பரவியது. அன்றிரவு மன்னர் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் மன்னரின் கன்னத்தில் யாரோ அடிப்பதுபோல தெரிய, அசோகர் திடுக்கிட்டு விழித்து, யார் நம்மை அடித்தது..? என்று சுற்றுமுற்றும் பார்த்தார். 
        அந்த நேரத்தில் தூணிற்கு மறைவாக நின்று கொண்டிருந்த மகாராணி மகிஷி, சிரித்தபடியே “இது ஒரு வினோத விளையாட்டு..! யாரை நாம் இன்று பார்க்கிறோமோ, அவர்களை கன்னத்தில் அடிக்க வேண்டும். இது அரசவை முழுவதும் இன்று பரவலாக விளையாடப்பட்டு வருகின்றது. அதனால் தான் நானும் உங்களை அடித்து விளையாட்டில் ஈடுபட்டேன்” என்று கூறினாள். 
         இதைக் கேட்ட அக்பர், பீர்பால் சொன்னதுபோல நாம் செய்யும் செயலை, இந்த உலகம் நமக்கு திருப்பி செய்கிறது என்ற உண்மையை உணர்ந்து அடுத்த நாள் அரசவையில் பீர்பாலினை மனமார பாராட்டினார்.