ஒரு குட்டி கதை- செத்தும் கெடுத்தான் செவ்வூர் சிவந்தியப்பன்

1
3591
      செவ்வூர் என்ற கிராமத்தில், சிவந்தியப்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு சுயநலவாதி; பேராசை கொண்டவன்; பொறாமை மிக்கவன்; அந்த ஊரில் யாருக்கும் அவனை பிடிக்காது. 
       அப்பேற்பட்ட சூழலில், ஒரு நாள் அவன் நோய்வாய்ப்பட்டான். நோய் முற்றி இறக்கும் தருவாயில், சிவந்தியப்பன் செவ்வூர் கிராம மக்களை அழைத்து, தான் மனம் திருந்தி விட்டதாகவும் தன்னை அனைவரும் மன்னிக்க வேண்டும் எனவும் கூறி கதறி அழுதான். 
       அவனது அழுகையைப் பார்த்த ஊர்மக்கள், அவனின் நிலையை நினைத்து வருத்தப்பட்டனர். உயிர் பிரியும் தருவாயில் அவன், ஊர் பெரியவர்களிடம் தன் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமென்றால், தன்னை ஒரு நீள கம்பியில் குத்தி, பறவை காவடி போல அமைத்து ஊர் தெருக்கள் முழுவதும் சுற்றி, பாவம் செய்தால் இப்பேர்ப்பட்ட தண்டனைதான் கிடைக்கும் என்ற என்கின்ற செய்தியை மக்களுக்கு உணர்த்துவதற்காக சுமந்து சென்று அடக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லி கண்ணீர் விட்டான். எனது கடைசி ஆசையை நிறைவேற்றி விடுங்கள் என்று கூறி உயிரை விட்டான். 
       அதன் பின்னர் அங்கிருந்த ஊர் மக்கள் அவனது கடைசி ஆசையினை நிறைவேற்ற முடிவு செய்தனர். அதன்படி நீளமான கம்பியில் அவனது உடலை குத்தி, தெருக்களில் சுற்றி, சுடுகாட்டை நோக்கி கொண்டு செல்லத் தொடங்கினர். அந்த நேரத்தில் ஒரு காவலர் வாகனம் ஒன்று அவர்களை வழிமறித்து நின்றது. 
      அதிலிருந்து இறங்கிய காவல்துறையினர், ஊர் மக்கள் அனைவரையும் பார்த்து, அநியாயமாக ஒருவனை கொன்று விட்டீர்களே…? என்றனர். 
        மிரண்டு போன அந்த ஊர் மக்கள் தாங்கள் அவனது கடைசி ஆசையை நிறைவேற்றுவதாக கூறினர். அப்பொழுது அவர்களுக்கு முன் வந்து நின்ற இன்ஸ்பெக்டர், பாக்கெட்டிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து காண்பித்தார் . இந்த கடிதம் சிவந்தியப்பன் இன்று காலையில் எங்களுக்கு அனுப்பினான். இந்த கடிதத்தை படித்து விட்டே நாங்கள் உங்கள் முன் வந்து நிற்கின்றோம் என்றார். 
      ஊர்மக்கள் இன்ஸ்பெக்டரை பார்த்து அந்த கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்று கேட்டனர். உடனே இன்ஸ்பெக்டர் அந்த கடிதத்தில் இருப்பதை வாசிக்கத் தொடங்கினார். 
        என் பெயர் சிவந்தியப்பன். நான் செவ்வூர் கிராமத்தில் வசிக்கிறேன் . என்னை எங்கள் கிராமத்தில் உள்ளவர்களுக்கு சுத்தமாக பிடிக்காது. கடந்த சில நாட்களாக என்னை, இந்த ஊரை விட்டு செல்லும்படி வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் நான் இந்த ஊரை விட்டு செல்ல மனமில்லாமல் இந்த ஊரில் வாழவே விரும்புகிறேன். நேற்று இரவு இந்த ஊர் மக்கள் என்னை, நாளை இந்த வீட்டை காலி செய்யாவிடில் உன்னை கொன்று கம்பியில் குத்தி அடக்கம் செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள் ஆதலால் தயவுசெய்து இந்த ஊர் மக்களிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள். நீங்கள் வர தாமதம் ஆனால் அதற்குள் என்னை கொன்றாலும் கொன்று விடுவார்கள். ஆதலால் என்னை காப்பாற்ற விரைந்து வாருங்கள். 
        இன்ஸ்பெக்டர் வாசித்தவுடன் அந்த ஊர் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். காவல்துறையினர், அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். செல்லும் வழி எங்கும் அந்த ஊர் மக்கள் “இப்படி நம்மை செத்தும் கெடுத்தானே இந்த சிவந்தியப்பன்” என்று புலம்பிக் கொண்டே இருந்தனர் 
கதை உணர்த்தும் நீதி:
தீயவர்களின் சகவாசம் எப்போதும் தீவினையை ஏற்படுத்தும்..