மனதை வருடும் 90’s கிட்ஸ்களின் வாழ்க்கை பயணம்…!

0
404
90’s கிட்ஸ்களின் வாழ்க்கை பயணம் 1985 முதல் 1995 வரை பிறந்தவர்களே பெரும்பாலும் 90கிட்ஸ்களாக கருதப்படுகிறார்கள்..
காலகட்டம்:
   இந்தியாவை பொறுத்தவரை 1985 முதல் 2000 வரை மிக முக்கியமான காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் தான் இந்தியா பல மாற்றங்களை அடைந்தது. குறிப்பாக தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், செல்போன் என்று படிப்படியாக முன்னேற்றம் கண்டு இன்றைய நவீன காலத்தை அடைந்தது. பல கிராமங்கள் படிப்படியாக முன்னேறி நகரம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன. ஆதலால் இந்தியாவைப் பொறுத்தவரை இந்த பதினைந்து ஆண்டுகள் மாற்றத்தை ஏற்படுத்திய முக்கிய காலகட்டமாக கருதப்படுகின்றது. இந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் தான் நம்ம 90’s கிட்ஸ்.
குழந்தைப் பருவம்:
   அன்றைய காலகட்டத்தில் ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் நான்கு, ஐந்து குழந்தைகள் இருந்தனர். ஆதலால் ஒரு குழந்தைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு பொருள், ஐந்து குழந்தைக்கும் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் நிலை இருந்தது. ஆதலால் தொட்டில் முதல் நடைபயிலும் வண்டி, துணிகள் வரை அனைத்தும் தலை பிள்ளைக்கு தவிர மற்ற குழந்தைகளுக்கு பழையதாகவே கிடைத்தன.
பள்ளிப் பருவம்:
     அன்றைய காலகட்டத்தில் பள்ளிகள் என்பது இன்று இருப்பது போல ஒரு இறுக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தவில்லை. பள்ளிகள் என்றாலே விளையாட்டு மைதானமாகதான் இருந்தது. 90’s கிட்ஸ்களுக்கு பாடப்புத்தகங்கள் கொடுத்தவுடன் முகர்ந்து பார்த்தல், மயிலிறகை வைத்து குட்டி போடுகிறதா என்று எடுத்து பார்த்தல், நோட்டுகள் வாங்குவதற்கு லிஸ்ட் எழுதிக் கொடுத்து வாங்கி வந்ததும் எடுத்து பார்த்த அனுபவம் , நட்ராஜ் காமஸ் பாக்ஸ், துணிப்பைகள் அல்லது கூடை பைகள் பயன்படுத்தியது, சிலேட்டை அழிக்க கோவங்காய் பயன்படுத்தியது போன்றவை என்றும் நினைவில் நிற்பவை.
பரிதாப நிலை:
     பள்ளிக்கு கிழிந்த ஆடையுடன் பெரும்பாலான குழந்தைகள் வருவார்கள் யார் காலிலும்ம் செருப்பு இருக்காது. இன்றைய பேக்குகள் இல்லாமல் ஒயர் கூடைகளை அல்லது துணி பைகளை தான் பயன்படுத்தி இருப்பார்கள். பள்ளியில் கொடுக்கும் வெள்ளை சட்டையும் காக்கி டவுசரையும், நாளை போட்டு வர வேண்டுமென்றால் அன்று இரவு கைகளில் வைத்து தூங்கி விட்டு அடுத்த நாள் காலையில் அதைப் போட்டுக் கொண்டு செல்வதற்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.
      அன்றைய காலகட்டத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் காசு என்பது இருக்க வாய்ப்பிருக்காது. ஆதலால் பள்ளி இடைவேளை நேரங்களில் கொடுக்காப்புளி, புளியங்கா, வறுத்து துவைத்த புளியங்கொட்டை போன்றவையே தின்பண்டங்கள் ஆக இருக்கும். விடுமுறை நாட்களில் வரும் பஞ்சுமிட்டாய், ஜவ்வு மிட்டாய் போன்றவைகள் வாங்குவதற்கு காசில்லாமல் ஒவ்வொரு வீடுகளின் பின்புறங்கள், எருக்குழிகள், கிடங்கு பகுதிலாம் சென்று உடைந்த பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்கி அதை கொடுத்து வாங்கித் தின்னும் ஏழ்மை நிலையிலேயே இருந்தார்கள். வாரம் ஒருமுறை வரும் ஐஸ் காரரிடம் ஒரு சேமியா ஐஸ் வாங்கி சாப்பிட்டாலே அந்த வாரத்தில் ஒரு லட்சியம் முடிந்ததாக தோன்றும்.
வானொலி:
     90’s களின் வாழ்க்கையில் வானொலியும், தொலைக்காட்சியும் மிக முக்கிய பங்கு வகித்தது. வானொலியில் வாரம்தோறும் ஒளிபரப்பாகும் நேயர்விருப்பத்திற்கு தபால் அட்டையில், பிடித்த பாடலையும், தங்களின் பெயர்களை எழுதிக் கொடுத்து, ஒளிபரப்பாகும் நேரத்தில் தங்கள் பெயர் வருகிறதா..? என்று காத்திருந்து கிடந்தது அழகான ஒரு தருணம் ஆகும். மேலும் ஒவ்வொரு நாளும் காலை 7:10 க்கு ஒளிபரப்பாகும் தென்கச்சி கோ சுவாமிநாதனின் “தினம் ஒரு தகவல் ஒரு தகவல்” கேட்ட தருணங்கள் மறக்க முடியாததாகும். தொலைக்காட்சி வருவதற்கு முன்னால் நேரம் பார்க்கவும், கிரிக்கெட் ஸ்கோர், தேர்தல் முடிவுகள் தெரிந்து கொள்ளவும் வானொலியையே நம்பியிருந்தனர்.
தொலைக்காட்சி:
அந்த காலகட்டத்தில் தொலைக்காட்சி அறிமுகமாகி இருந்தது. பணக்கார வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சி இருந்ததால், மற்ற வீட்டு குழந்தைகள் அந்த வீட்டை சுற்றி, ஏக்க பார்வையோடு நின்று கொண்டிருப்பார்கள். சில வீடுகளில் மனது இறங்கி படம் பார்க்க விடுவார்கள். சில வீடுகளில் புளி உடைத்தல், பஞ்சு எடுத்தல் போன்ற வேலைகளை கொடுத்து சில கட்டுப்பாடுகளுடன் பார்க்க அனுமதிப்பார்கள். அந்தக் காலகட்டத்தில் வந்த தொடர்களை 90’sகள் வரப்பிரசாதமாக கருதினார்கள். அதிலும் சக்திமான், மாஸ்டர் மாயாவி, மாயா மச்சீந்திரா, ஜென்மம்-எக்ஸ், ஜீபூம்பா, ஷக்கலக்க பூம் பூம் போன்ற தொடர்கள் 90’sகளை கட்டுக்குள் வைத்திருந்தது என்றே கூறலாம்.
மிதிவண்டி:
 90’sகள் மிதிவண்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். தொடக்கத்தில் மிதிவண்டி அடித்து பழக தங்களுக்கென்று தனி பாணி வைத்திருந்தனர். முதலில் உருட்டீ பழகுதல், அதன்பின்னர் குரங்கு பெடல் போடுதல், அதன்பின்னர் முழு பெடல் போடுதல் என்று தங்களுக்கென்று ஒரு விதியை வைத்து சைக்கிள் ஓட்ட பழகினர். அன்றைய காலகட்டத்தில், ஐம்பது பைசாவிற்கு ஒரு மணிநேரம் வாடகை சைக்கிள் கிடைக்கும். சைக்கிள் கிடைப்பது கூட சாத்தியமாக இருந்தாலும் 50 பைசா கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கும்.
தோசை மாவு:
      இன்றைய காலகட்டத்தில் தினமும் இரண்டு வேளை தோசை, இட்லி என வைத்து சாப்பிடும் நிலையில் இருக்கிறோம். ஆனால் 90 களில் தோசை என்பது ஏதாவது திருவிழா என்றால் மட்டும்தான் வீட்டில் தயார் செய்வார்கள். அதிலும் முந்தைய நாளே உளுந்து, அரிசியை நனைய போடுதல், அதைக்கொண்டு ஊரில் இருக்கும் ஒரே ஒரு கிரைண்டரில் வரிசையில் நின்று அரைத்து வருதல் அல்லது வீட்டில் உள்ள ஆட்டு உரலில் அரைத்தல் போன்ற நிகழ்வுகள் என்றும் மனதில் நிற்கும் தருணமாகும்.
பொங்கல் அட்டை:
      இன்று வாழ்த்துக்கள் சொல்வதற்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்று இருக்கின்றது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் வாழ்த்து சொல்வதற்கு ஒரே ஒரு வழிமுறைதான் இருந்தது. அதுதான் இந்த வாழ்த்து அட்டைகள். நண்பர்களுக்கு உறவினர்களுக்கு பிடித்த நடிகர்களின் வாழ்த்து அட்டைகளை வாங்கி அவர்களுக்கு பொங்கல் வாழ்த்தினை தபால் மூலமாக அனுப்புவார்கள். அதில் கிடைக்கும் சந்தோஷம் அளவிட முடியாதது.
விளையாட்டுக்கள்:
    90’s கிட்ஸ்களின் வாழ்க்கையின் பெரும் பகுதியினை இந்த விளையாட்டுக்களே ஆக்கிரமித்திருந்தன. 4 மணிக்கு பள்ளி முடிந்ததும் தொடங்கும் விளையாட்டுக்கள், இரவு 10 மணிக்கும் முடிந்தபடி இருக்காது. அல்லி புல்லி, கொலை கொலையா முந்திரிக்கா, சுட்டிகல், சாட் பூட் த்ரீ, கில்லி அடித்தல், கோலிக்காய் விளையாடுதல், திருடன் போலீஸ், கண்ணாமூச்சி, பம்பரம் விளையாடுதல், தாயம் போடுதல் , பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம்போன்ற நூற்றுக்கும் அதிகமான விளையாட்டுகள் 90கிட்ஸ்களால் விளையாடப்பட்டு வந்தன. ஒவ்வொரு காலங்களுக்கும், குறிப்பிட்ட விளையாட்டுகள் நடைமுறையில் இருந்தன. மழை காலத்தில் வெயில் காலங்களில் என்று காலங்களே விளையாட்டுக்கள் விளையாடுவதை தீர்மானித்தன.
கிரிக்கெட்:
     கிரிக்கெட் விளையாடுவதற்கு பேட் பந்து வாங்கக் காசில்லாத 90’sகள் தென்னை மட்டையை பேட்டாகவும் தென்னங்குரும்பல்கள், பிளாஸ்டிக் கவர்களை பந்துபோல கெட்டி விளையாண்டு வந்தனர். மேலும் இந்திய கிரிக்கெட் அணி அந்த 15 ஆண்டுகளில் தான் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது. இந்த வளர்ச்சியை பார்த்து பார்த்து வளர்ந்தவர்கள் 90’sகள்.
இயற்கையோடு வாழ்ந்தவர்கள்:
      நுங்கு வண்டிகள், தென்னை மட்டையை வைத்து செய்த மாட்டுவண்டி, களிமண் வைத்து செய்த பொம்மைகள், பனை ஓலையில் செய்த காற்றாடி,
காய்ந்த தட்டையில் இருந்து பெறப்படும் பஞ்சினை வைத்து தயாரிக்கப்படும் சிறு சிறு பொம்மைகள் உட்பட அனைத்து விளையாட்டுப் பொருட்களையும் இயற்கையில் இருந்தே பெற்றுக் கொண்டு இயற்கையோடு வாழ்ந்தவர்கள் 90’sகள்.
பொழுதுபோக்கு:
      தேனெடுத்தல், வேப்பமுத்து பொறுக்குதல், ஓணானை வேட்டையாடுதல், கோவில் கட்டி கொடை நடத்துதல், மரத்தில் ஊஞ்சல் ஆடுதல், விறகு பொறுக்குதல், தென்னம் தட்டி பின்னுதல், பிலிம் வைத்து படம் காட்டுதல், பொன்வண்டு வளர்த்தல்,பட்டுப் பூச்சிகளை வளர்த்தல் உட்பட பல செயல்பாடுகள் பொழுதுபோக்காக இருந்தன.
வதந்திகள்:
#மயிலிறகு குட்டி போடுதல்,
#பென்சிலை திருகி வெண்ணீரில் போட்டால் ரப்பர் கிடைக்கும்,
#ஊக்கினை தண்டவாளத்தில் போட்டால் காந்தம் கிடைக்கும்,
#புத்தகத்தை மிதிச்சா படிப்பு வராது,
#ஒரே ஒரு மைனாவை மட்டும் கண்டால் ஏதாவது விபரிதம் நடக்கும்,
#ரிக்கி பாண்டிங் ஸ்பிரிங் பேட் பயன்படுத்தியதால் ரி மேட்ச் நடக்கும்
#அண்டர்டேக்கர்க்கு ஏழு உயிர் உண்டு,
#யானை சாணத்தை மிதித்தால் படிப்பு வரும்,
#விதைகளை விழுங்கினால் மரம் வளரும்.
    இது போன்ற நூற்றுக்கணக்கான வதந்திகளோடு வாழ்ந்தவர்கள் தான் 90கிட்ஸ்கள்.
தற்போதைய மனநிலை:
       குழந்தைப் பருவம் முதல் இன்று வரை நினைத்தது கிடைக்காவிட்டாலும் கூட கிடைத்ததை ஏற்றுக்கொண்டு குழந்தைதனத்தோடும், பொறுப்புடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்ந்து வருகிறார்கள் 90கிட்ஸ்கள். ஒவ்வொரு 90கிட்ஸ்ம் தானொரு 90கிட்ஸ் என்பதில் பெருமிதம் கொள்கிறார்கள்….
       வாசகர்களே..! இந்த கட்டுரையில் உங்களுக்கு பிடித்த தருணங்கள் என்ன..? என்பதையும், இதில் விடுபட்ட விஷயங்கள் இருந்தால் அதனையும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யுங்கள்….