காணாமல் போன தமிழர்களது சில பாரம்பரிய மரபுகள்…!

1
682
        உலகில் எந்தவொரு இனத்திற்கும் இல்லாத ஒரு தனித்துவம் எப்பொழுதும் தமிழர்களுக்கு உண்டு. தமிழர்களது வாழ்வியலும், பழக்கவழக்கங்களும், பல்வேறு மரபுகளும் மற்ற இனங்களைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமாகவும்,நேர்த்தியாகவும், மற்றவர்களால் சிந்திக்க முடியாத அளவுக்கு ஆழமாகவும் இருக்கும்… 
       அந்த வகையில் தமிழர்கள் பின்பற்றிய சில சிறப்புமிக்க மரபுகள் இன்று கிட்டத்தட்ட அழிந்தே போய்விட்டன என்றே கூறலாம்.அதில் சிலவற்றை மட்டும் இந்த பதிவில் பார்ப்போம்…. 
1]விருந்தோம்பல்:
     எந்த இனங்களிலும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு தமிழர்களுக்கு உண்டு என்றால் அது விருந்தோம்பல் என்னும் பழக்கமாகும். அக்காலத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் உணவு சமைத்த பின்னர், சமைத்த உணவை யாருக்காவது ஒருவருக்கு தானம் அளித்த பின்னரே வீட்டில் உள்ளவர்கள் உணவு அருந்துவார்கள். இத்தகைய சிறப்பு பண்பினை வேறு எந்த இனங்களிலும் காண முடியாது. இதை பற்றி தமிழ் நூல்கள் பல தெளிவாக விவரித்துள்ளன. 
2]திண்டு
     முற்காலத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயமாக வீட்டிற்கு முன்பு திண்டு அமைக்கப்பட்டிருக்கும். இரவு நேரங்களில் அண்டை வீட்டார்கள் , சொந்தபந்தங்கள், அவர்களுடன் உணவருந்தி, அந்த திண்டில் அமர்ந்தபடி ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களையும், குழந்தைகளுக்கு பிடித்த விக்ரமாதித்தன், தெனாலிராமன் உள்ளிட்ட கதைகளையும் அன்றாட நிகழ்வுகளையும் பற்றி விவாதிப்பார்கள். 
           தற்போது உள்ள நவநாகரிக உலகில் ஒவ்வொரு வீடுகளும் திண்டு இல்லாமல் வீட்டை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைத்து கட்டப்பட்டு வருகின்றது. இதன்மூலம் உறவுகளிடம் இருந்து நாம் விலகிச் செல்கிறோம் என்பதை காட்டுகின்றது. 
3]குழந்தைக்கு பால்
 
         பண்டைய காலங்களில் ஒரு வீட்டில் குழந்தை பிறந்திருந்தால் அந்த வீட்டினர் பக்கத்து வீடுகளில் கறவை மாடுகள் வளர்க்கப்பட்டால் அந்த வீட்டில் கொண்டு ஒரு பாத்திரத்தை வைத்து விட்டு வந்து விட வேண்டும். பக்கத்து வீட்டினர் பசுவில் பால் கறக்கும் போது அந்த பாத்திரத்தில் குழந்தைக்கு தேவையான பாலினை இலவசமாக கொடுத்து உதவுவார்கள். 
        கிட்டத்தட்ட ஆறு மாத காலம் வரை அந்தக் குழந்தைக்கு இலவசமாக பாலை வழங்குவார்கள். இது அக்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட ஒரு மரபு முறை. அக்காலத்தில் நாட்டு மாடுகள் மட்டுமே வளர்க்கப்பட்ட நேரம். அதிலும் ஒருபடி பால் மட்டுமே கிடைக்கக் கூடியதாக இருக்கும். அதிலும் கால்படி பால் இந்த குழந்தைக்கு கொடுத்துவிடுவார்கள். ஒருவேளை குழந்தைக்கு பால் கொடுக்காத பக்கத்து வீட்டினர், அக்கம்பக்கத்தினர் இழிவாக பேசும் படியான நிலைக்கு தள்ளப்படுவார்கள். தற்போது உள்ள சூழலில் ஒரு டம்ளர் நீர் கூட பக்கத்து வீடுகளில் வாங்கமுடியாத சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே பெரும் தலைகுனிவாகும். 
4]பார்வை பார்த்தல்
 
      தற்போது உள்ள காலத்தில் சிறிய தலைவலிக்கு கூட நாம் மருத்துவரை நாடுகிறோம். ஆனால் முற்காலத்தில் நம் முன்னோர்கள் கடைபிடித்த சில வழி முறைகள் மிகவும் விசித்திரமானவை. அதில் ஒன்றுதான் இந்த பார்வை பார்த்தல். 
   தேள் கடி, பாம்பு கடி உள்ளிட்ட உயிர்போகும் அளவுக்கு இருக்கும் பாதிப்பினை கூட மிகவும் எளிமையாக, கையில் வேப்பிலை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட ஒரு செய்யுளை மட்டும் திரும்ப திரும்ப சொல்லி சொல்லியே அந்த பாதிப்பினை குணமாக்குவார்கள். இதில் குழந்தைகளுக்கு “கொதி பார்த்தல்” என்பது மிகவும் பிரசித்தி பெற்ற வைத்திய முறையாகும். இந்தப் பார்வை பார்த்தல், கொதி பிடித்தல் ஆகிய வைத்திய முறைகளுக்கு நம் முன்னோர்கள் ஒரு பைசாகூட வசூலிக்க மாட்டார்களாம். ஒருவேளை கட்டணம் வசூலித்தால் “பார்வை பார்த்தல் ” பலிக்காமல் போய்விடும் என்ற பயமே அதற்கு காரணமாகும். ஆனால் தற்போது உள்ள காலங்களில் ஒரு சில இடங்களில் பணம் வாங்கி இந்த வைத்திய முறைகள் நடப்பதாக அறிகிறோம். 
5]தாயத்து அணிதல்
 
        அக்காலத்தில் குழந்தைகளின் அரைஞாண் கொடியில் தாயத்து ஒன்று கட்டப்பட்டு இருக்கும். தாயத்து என்பது செப்பு பொருளால் ஆன மிகச்சிறிய ஒரு பெட்டி போன்ற அமைப்பாகும். இந்தப் பெட்டிக்குள் குழந்தையின் தொப்புள் கொடியை எடுத்து பொடியாக்கி காயவைத்து இந்தப் பெட்டிக்குள் வைத்து, அந்த குழந்தையின் அரைஞாண் கொடியில் பாதுகாப்பாக கட்டிவிடுவார்கள். பிற்காலத்தில் அந்த குழந்தைக்கு, ஏதாவது தீராத நோய் ஏற்பட்டால் இந்த பொடியினை பாலில் கலந்து கொடுத்தால் கட்டாயமாக குணமாகிவிடும். 
      தற்போதைய நாட்களில் இது அறிவியலால் 100% உண்மை என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தொப்புள்கொடியை சேமித்து வழங்குவதற்காக சில அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 
      வாசகர்களே நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த சில மரபுகள், கிட்டத்தட்ட அழிந்து போய்விட்டன. இதைப் போன்ற அழியும் நிலையில் உள்ள சில மரபுகளை நாம் பெரியவர்களிடம் கேட்டறிந்து அடுத்த தலைமுறைக்கு வழங்குவது நம் கடமையாகும்.