ஒரு குட்டி கதை – “முயற்சியின்மை”

2
7995
         ராமு என்கிற பெரிய சோம்பேறி ஒருவன், குறுக்கு வழியில் எப்படியாவது பணம் சம்பாதித்து விடவேண்டும் என்ற எண்ணம் உடையவன். ஒரு நாள் அவன், ஊருக்கு வந்திருந்த மிகப்பெரிய ஜோதிடர் ஒருவரை சந்தித்து, தனது எண்ணத்தை தெரிவித்தான். 
       அதற்கு அந்த ஜோதிடர், உனக்கு லாட்டரி டிக்கெட்டில் 75 லட்சம் ரூபாய் அடிக்கப் போகின்றது என்று கூறினார். இதை கேட்ட ராமு, பரபரப்போடு அந்த ஜோதிடரை பார்த்து, உண்மையாகவா…? எனக்கா…? எப்பொழுது பரிசு விழும்..? எனக்கு பரிசு விழுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்..? என்று ஜோதிடரை கேட்டான். 
      அதற்கு அந்த ஜோதிடர், மனம் தளராமல் நீ எப்பொழுதும் இறைவனை வழிபட்டுக் கொண்டிரு..! உன்னுடைய பக்தியை பொறுத்தே அந்த பரிசு உனக்கு விழும்; என்று கூறிச் சென்றார். 
    அன்று முதல், அவன் ஒவ்வொரு கோவில்களுக்கும் சென்று வழிபட ஆரம்பித்தான். ஆனால் பரிசு விழவில்லை. சோர்வடைந்த அவன் அடுத்து தேவாலயங்களுக்கு சென்று வழிபட ஆரம்பித்தான். அதிலும் அவனுக்கு பலன் கிடைக்காததால் மசூதிக்கு சென்று வழிபடத் தொடங்கினான். அதிலும் பரிசு விழுந்த பாடில்லை. 
      எனவே விரக்தியின் உச்சியில் சென்ற ராமு, ஒரு பெரிய மலையில் ஏறி நின்று கடவுளைப் பார்த்து, எனக்கு இப்பொழுது 75 லட்ச ரூபாய் பரிசு விழவில்லை என்றால் நான் மலையில் இருந்து குதித்து இறந்து விடுவேன் என்று உரக்கக் கத்தினான். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. கோபத்தின் உச்சியில் சென்ற ராமு, மலை உச்சியிலிருந்து குதித்து உயிரை விட்டான். 
    அதே கோபத்தோடு விண்ணுலகம் சென்ற ராமு, கடவுள் இருக்கும் அறைக்கு முன்பாக சென்று கத்த ஆரம்பித்தான். என்னை ஏன் ஏமாற்றினாய்..? எனக்கு ஏன் பரிசு விழவில்லை..? என்று கூறிக் கத்திக் கொண்டே இருந்தான். 
        சப்தத்தைக் கேட்டு வெளிவந்த கடவுளின் உதவியாளர், யார் நீ..? எதற்காக இங்கே வந்து கத்துகிறாய்..? என்று கேட்டான். கடவுளின் உதவியாளரிடம் நடந்த விஷயங்களை அனைத்தையும் கூற, கடவுளின் உதவியாளருக்கும் கடவுள் மீது சற்று கோபம் உண்டாயிற்று. என்ன இந்த கடவுள்..! இவ்வளவு பக்தியாக இருந்தபொழுதும், இப்படி ஒரு அப்பாவியை ஏமாற்றி விட்டாரே..! என்று கூறிக்கொண்டே கடவுளின் உதவியாளர் அவனுடன் சேர்ந்து கத்த ஆரம்பித்தார். 
        அந்த நேரத்தில் அறையை விட்டு வெளிவந்த கடவுள், அவர்கள் இருவரையும் பார்த்து, அமைதியாக இருங்கள்..! உங்களுக்கு என்ன பிரச்சனை..? என்று கேட்டார். அதற்கு கடவுளின் உதவியாளர், இவன் அவ்வளவு முயற்சி எடுத்தும், நீங்கள் இவனை ஏமாற்றி விட்டீர்களே…! இதற்கு நீங்கள் கட்டாயமாக பதில் சொல்லித் தான் தீரவேண்டும் என்றார். 
        உடனே கடவுள், உதவியாளரை பார்த்து, இத்தனை முயற்சி எடுத்தானே…! அவன் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினானா..? என்று அவனிடம் கேள்; என்றார். கடவுளின் உதவியாளர் ராமுவை பார்த்து லாட்டரி டிக்கெட் வாங்கினாயா..? என்று கேட்க, ஐயோ..! நான் அதை மட்டும் மறந்து விட்டேன்..! என்று கூறினான்.. 
         இந்தக் கதையை போலத்தான் நாமும் எதையாவது ஒன்றை வேண்டும் என்று கடவுளிடம் கேட்டுக்கொண்டே இருக்கின்றோம். தன் குழந்தைகளுக்கு கடவுள் எப்பொழுதுமே கேட்டவற்றை கொடுக்க விரும்புகிறார். ஆனால் கடவுள் போதுமான முயற்சியை மட்டும் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். எந்த முயற்சியும் இல்லாத பொழுது, கடவுள் யாருக்கும் எதையும் கொடுப்பதில்லை. 
        ஆதலால் கடவுளிடம் அது வேண்டும்; இது வேண்டும் என்று கேட்பவர்கள், முதலில் போதுமான முயற்சி எடுத்துக்கொண்டு, அதன் பின் கடவுளை வழிபட்டால் வேண்டியது கட்டாயம் கிடைத்தே தீரும்…