சில நேரங்களில் பக்தர்கள் கேட்பதை இறைவன் கொடுக்காதது ஏன்..? அர்ஜுனனின் கேள்விக்கு பகவான் கிருஷ்ணரின் பதில்….

1
995
      அர்ஜுனனுக்கு நீண்ட நாளாக மனதில் ஒரு எண்ணம் இருந்து வந்தது. அதாவது கடவுளை எப்படி வழிபட்டாலும், சில நேரங்களில் மனிதர்கள் கேட்பது கிடைப்பதில்லை. நாம் எதிர்பார்க்காத ஒன்றே நமக்கு கிடைக்கின்றது. இது ஏன்? எதற்காக நடக்கின்றது? இவ்வளவு வழிபட்டும் நமக்கு கிடைக்காதது காரணம் என்ன? என்று, இன்றைய மக்கள் நாம் எண்ணுவது போலவே, அன்று அர்ஜுனனும் எண்ணிக் கொண்டிருந்தான். இதை எப்படி ஆயினும் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டுவிட வேண்டுமென்று முடிவெடுத்தான்…
      ஒருமுறை பகவான் கிருஷ்ணரும், அர்ஜுனனும் நதிக்கரையில் உரையாடிக்கொண்டிருந்தபோது அர்ஜுனன் அந்த சந்தேகத்தை கிருஷ்ணரிடம் கேட்கத் தொடங்கினான். 
       “கிருஷ்ணா…! ஒரு பக்தன் தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு முயன்றும், ஒருசில பிரார்த்தனைகளில் அவனுக்கு வெற்றி கிட்டுவதில்லை. அதாவது அவன் எதிர்பார்த்த ஒன்று கிடைக்காமல் போகின்றது. இதற்கு என்ன காரணம்? ஏன் இவ்வாறு நடக்கின்றது? அப்படி என்றால் அவனது பக்தி தோற்றுப் போய் விட்டதா..? பயனளிக்கவில்லையா…?” 
       இதைக்கேட்டு புன்னகைத்த பகவான் கிருஷ்ணர், பதில் ஒன்றும் பேசாமல் அருகிலிருந்த வீதிக்கு அர்ஜுனனை அழைத்து சென்று அங்கு நடந்த ஒரு நிகழ்வினை காணச் செய்தார். 
      அங்கு ஒரு தாயிடம் இருந்த ஒரு குழந்தையானது, குளிர்ச்சியான உணவுப் பதார்த்தத்தை கேட்டு அடம் பிடித்து அழுது கொண்டிருந்தது. ஆனால் அவளது தாயோ, குழந்தை கேட்ட குளிர்ச்சியான பதார்த்தத்தை வாங்கிக் கொடுக்காமல், சூடாக இருந்த உணவுப் பதார்த்தத்தை வாங்கி கொடுத்து அங்கிருந்து அந்தக் குழந்தையை அழைத்து சென்றாள். 
      உடனே பகவான் கிருஷ்ணர் “உன் சந்தேகத்தின் விடையை இந்த நிகழ்வினால் உணர முடிகின்றதா” என்று கேட்க ஒன்றும் புரியாதது போல் குழம்பிப்போய் நின்றான் அர்ஜுனன். 
     அர்ஜுனன் கிருஷ்ணரைப் பார்த்து, “எனக்கு ஒன்றும் புரியவில்லை தயவுசெய்து நடந்த நிகழ்வையும் அந்த விளக்கத்தையும் எனக்கு விளக்குங்கள்” 
       உடனே கிருஷ்ணர், “அந்தக்குழந்தை குளிர்ச்சியான பதார்த்தத்தை கேட்டபொழுது, அவளது அன்னை ஏன் சூடான பதார்த்தத்தை கொடுத்தால் தெரியுமா..? இந்த காலசூழல், குளிர்ச்சியான பதார்த்தம் குழந்தையின் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.அந்தக் குழந்தையின் விருப்பத்தை காட்டிலும் குழந்தையின் உடல் நலம் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்த அந்தத்தாய் சூடான பதார்த்தத்தை வாங்கி கொடுத்தாள்”. 
    “அதுபோலவே, பக்தன் பற்றினை துறக்காமல் பற்றோடு ஒன்றினை கேட்கும்பொழுது, அது அவனுக்கு பயனளிக்குமா..? என்பதை பொறுத்தே கடவுள் அவனுக்கு அவன் கேட்டதை வழங்குவார்.. பயனளிக்காத போது, பக்தன் என்ன கேட்டாலும், அதனை எப்படி கேட்டாலும், தாயுள்ளம் கொண்ட இறைவன் அவன் கேட்டதை வழங்குவதில்லை. அவனது விருப்பத்தை காட்டிலும், அவனுக்கு எது நலமளிக்கும் என்பதை இறைவன் அறிவார் அல்லவா..! ” 
     இருந்தாலும் மாதவா..! பக்தனுக்கு ஒரு ஏமாற்றத்தை ஏற்படுத்துவது முறையாகுமா…? என்னதான் நீங்கள் சமாதானபடுத்தினாலும் பக்தனின் ஏமாற்றமானது, அவனது வாழ்நாள் முழுவதும் அவனது மனதோடு வாழுமல்லவா..? 
      மீண்டும் புன்னகைத்த கிருஷ்ணர், பார்த்தா..! இந்த ஏமாற்றமும் கூட ஒருவகையில் பக்தனுக்கு நன்மை அளிக்க கூடியதாகவே இருக்கும். இந்த ஏமாற்றம் அவனுக்கு ஒரு நல்ல அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த அனுபவம் அவன் வாழ்வில் ஒவ்வொரு சூழலிலும் வெற்றிகொள்ள உறுதுணையாக இருக்கும். ஆதலால்தான் இறைவன் அந்த ஏமாற்றத்தை பக்தனுக்கு அளிக்க முற்படுகிறார்”என்றார். 
      தன் மனதில் இருந்த சந்தேகத்திற்கு, விடை கிடைத்த சந்தோசத்தில் கிருஷ்ணருக்கு நன்றி கூறி இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.