இன்று புனித வெள்ளி: உலகத்தின் பாவத்தை சுமந்த ஆட்டு குட்டியானவர்: கல்வாரி சிலுவையில் கூறிய 7 வார்த்தைகள்

0
1105

ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள். அவர் உலகத்தின் பாவத்தை சுமக்கும் ஆட்டு குட்டியாவார் என்று கிறிஸ்து பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன் ஏசையா தீர்க்கதரிசியால் கூறப்பட்டது நிறைவேறும் வகையில் உலக மக்களின் பாவங்களுக்காக கல்வாரி சிலுவையில் தன்ைன முழுமையாக இயேசு கிறிஸ்து ஒப்புக்கொடுத்தார். அந்நாளை புனித வெள்ளியாக உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள் அனுசரிக்கிறார்கள். அவர் சிலுவையில் பாடுகள் அனுபவித்தபோது கூறிய எழு வார்த்தைகள் நாளை அனைத்து திருச்சபைகளிலும் நினைவு கூறப்படுகிறது.

1. மன்னிப்பு
“பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23 : 34) மனிதர்கள் ெசய்யும் தவறுகளை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களை மன்னிப்பார்.

பொதுவாக இன்றைய நாட்களில் நாம் பல வாக்குறுதிகளை விடுகின்றோம் பலவற்றை பேசுகிறோம் ஆனால் நாம் பேசுவதற்கும் நமது வாக்குறுதிகளுக்கும் நமது வாழ்க்கையில் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அருள்நாதர் தன்னுடன் இருந்த மக்களுக்கு கூறினார் அதேபோல் அவர் மன்னித்தது மட்டுமல்ல பிதாவிடம் மன்னிப்பதற்காக பரிந்து பேசுவதையும் பார்க்கிறோம் சிறுவயதில் நாம் தவறுகள் செய்யும் போது தாத்தா பாட்டி , அப்பா அம்மாவிடம் சொல்வார்கள் அவன் தெரியாம செய்துவிட்டான்.

விட்டுவிடு என்று, அதுபோலதான் நம் தேவன் நமக்காக பிதாவிடம் பரிந்து பேசுகிறார். காரணம் என்ன? அவர்கள் அறியாமல் செய்தது. அதனால் தான் கூறுகிறார் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே. இன்று நாம் அறிந்து இயேசுவை தினம்தோறும் சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறோம் வேதம் நமக்கு சொல்கிறது. நாம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறோம். “ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யதக்க நீதிமான் பூமியிலில்லை” என்று பிரசங்கி 7:20 ல் பார்க்கிறோம். “நமக்கு பாவமில்லை என்று சொல்வோமானால் நம்மை நாமே ஏமாற்றி கொள்பவர்களாக இருப்பதுடன் சத்தியம் நமக்குள் இராது” என்று 1யோவான் 1:8 ல் பார்க்கிறோம். இதன் விளைவாக, நமக்கு தேவனின் மன்னிப்பு மிகவும் அவசியமானதாக இருக்கிறது.

2) இரட்சிப்பு
“இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” (லூக்கா 23 : 43) இரட்சிப்பு என்பது மிகவும் சுலபமானது! அவன் கஷ்டப்பட்டு அதை பெறவேண்டிய அவசியமே இல்லை! எப்படியெனில் இயேசுவின் இரட்சிப்பின் அடிப்படை என்னவென்றால்: இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில் ஆண்டவரின் வழி நடத்துதல்படி கானானை நோக்கி போய்கொண்டிருந்தபோது, அவர்கள் செய்த தவறுகளின் காரணமாக கொள்ளிவாய் சர்ப்பங்களால் கடிபட்டு மாண்டுபோயினர். அவர்கள் தேவனிடத்தில் முறையிட்டபோது, தேவன் ஒரு வெண்கல கொள்ளி வாய் சர்ப்பத்து உருவத்தை செய்து, அதை ஒரு கம்பத்தில் தூக்கி வைக்கும்படிக்கும், சர்ப்பத்தால் கடிபட்டவர்கள் உடனே அதை நோக்கி பார்த்தால் போதும் பிழைப்பார்கள் என்றும் கட்டளையிட்டார்.

கொள்ளிவாய் சர்ப்பத்தால் கடிபட்டவர்கள் மேலே தூக்கி வைக்கப்பட்ட்ட வெண்கலசர்ப்பத்தை நோக்கி பார்த்து, அவ்வாறு பார்த்த ஒரே காரணத்துக்காக எவ்வாறு தப்பித்தார்களோ, அதுபோலவே சாத்தான் என்னும் சர்ப்பத்தால் கடிக்கப்பட்டு பாவம் என்னும் படுகுழியில் கிடக்கும் மனிதர்கள் சிலுவையில் தூக்கப்பட்ட இயேசுவை நோக்கி பார்த்தாலே போதும் அவரை விசுவாசித்தாலே போதும் சாத்தானின் இடத்துக்கு போவதிலிருந்து தப்பித்து விடலாம் அவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு இல்லை.

3. அரவணைப்பு
தம்முடைய தாயை நோக்கி : “அம்மா, இதோ, உன் மகன் என்றார்”. சீடனை நோக்கி “இதோ உன் தாய் என்றார்” (யோவான் 19 : 26-27) இறுகிய மன இறுக்கத்தின் நேரமாகவே அது இருந்திருக்கும். ஒரு மகனை தம் சொந்த இனத்தவரே, மதத்தவரே கொலை செய்யப்படுமளவு குற்றம் சுமத்தி, சிலுவையில் அறையும் பொழுது அருகில் இருக்கும் தாய்க்கு இதயம் உடைந்து போன சூழலே இருக்கும். தேவனுக்குள், பரமதந்தையின் ஐக்கியத்துக்குள் இருப்பவரே, இந்த மனித இயல்பையும், இறுக்கத்தையும், கையறு நிலையையும் மீறி, இறைவன் சித்தப்படி எது நடப்பினும் அதற்கு ஆம் என்றும் ஆமென் என்றும் வாழ முடியும்.

இயேசு கிறிஸ்து மரண தருவாயில் வேதனையின் மத்தியில் சிலுவையில் தொங்கி கொண்டு இருக்கும் போதும் தான் மூத்த மகனாய் இருந்ததை உணர்ந்து தன் பிரிய சீசனாகிய யோவானை பார்த்து, “இதோ உன் தாய்” என்று சொல்லி, தாய்க்கு ஒரு புகலிடத்தை ஏற்படுத்தினார். தன்னை நேசித்த யோவானை, தன் தாயையும் நேசிக்கும்படி கேட்டுக்கொண்டார். உன் தாய் வயது சென்றவளாகும் போது அவளை அசட்டை பண்ணாதே. (நீதி 23:22) “உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும்,உன் தாயையும் கனம் பண்ணுவாயாக (யாத் 20:12) என்றார்.

4. தத்தளிப்பு


இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். (மத்தேயு 27 :46) இவர் தேவனுடைய குமாரனாயின் ஏன் இவ்வாறு கதறவேண்டும் என எல்லா மனிதர்களுக்குள்ளும் இது ஒரு கேள்விக்குரியான வார்த்தையாக காணப்படுகின்றது. வேதத்தை ஆராய்ந்து பார்த்தால் ஏசாயா 59:2 இப்படி கூறுகின்றது உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்குகிறது, உங்கள் பாவங்களே அவர் உங்களுக்கு செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. ஆகவே தேவனுடைய முகத்தை மனுஷன் பார்க்க முடியாமல் மறைப்பது பாவம் நமக்கும் தேவனுக்கும் இடையே பாவம் ஒரு இரும்பு திரையாக உள்ளது.

தேவன் நம்மை பார்க்க முடியாத சந்தர்ப்பம் பாவத்தின் மூலம் வருகின்றது. நம்முடைய பாவங்கள் அனைத்தையும் அவர் தாமே ஏற்றுக்கொண்ட போது இயேசு குற்றவாளியாகவும் பிதா நீதிபதியாகவும் நின்று ஒருகணம் தன்னுடைய முகத்தை அவருக்கு மறைத்தார் அது நியாயத் தீர்ப்பின் நேரமாய் காணப்பட்டது. அவ்வேளையிலே இயேசு தேவனை நோக்கி கதறிய வார்த்தை இது. ஆகவே இனி மனிதனுடைய பாவத்திற்காக ஆடு, மாடுகளின் இரத்தம் சிந்தப்பட வேண்டியதில்லை இயேசுவே நமது பாவத்தை தன் மேல் சுமந்து தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்தி மீட்பை பெற்றுத்தந்துள்ளார்.

5. தவிப்பு


எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: “தாகமாயிருக்கிறேன் என்றார்” (யோவான் 19:28) தாகமாயிருக்கிறேன் என்ற வார்த்தையை யோவான் எழுதும் முன்பாக இயேசு ஏதோ ஒன்றை அறிந்து அதன் பின் இந்த வார்த்தையை சொன்னதாக எழுதுகிறார். இயேசு கிறிஸ்து மட்டும் தான் என்ன நோக்கத்துக்காக உலகத்தில் அவதரித்தாரோ அதில் ஒரு அச்சும் கூட பிசகாமல் அதை சாதித்து முடித்தார். எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன் என்று சொன்னார்.

தன்னை அனுப்பின பிதாவின் சித்தப்படி செய்வதே இயேசுவுக்கு போஜனாமாக உள்ளது, இயேசுவின் தாகம் பிதாவின் சித்தம் செய்யப்படுவதே.அப்படியானால் இந்த உலகத்தில் இயேசு கிறிஸ்துவை அச்சடையாளமாக கொண்ட திருச்சபையே இன்றைக்கு நாம் இயேசுவின் தாகத்தை போக்க என்ன செய்து வருகிறோம். பிதாவின் சித்தத்தை நாம் உணர்ந்து இருக்கிறோமா?

6. அர்ப்பணிப்பு


இயேசு காடியை வாங்கின பின்பு, “முடிந்தது” என்று சொல்லி தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார் (யோவான் 19: 30) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்ததன் நோக்கம் நித்திய நரகத்திற்கு நேராக போய் கொண்டு இருந்த நம்மை மீட்கும் படி தன்னையே பலியாக கொடுக்கும் படியே…. அதை முறியடிக்க பிசாசு, வலுசர்ப்பம், அலகை, இப்படி பல பெயருடைய தந்திரமுள்ள இந்த உலகத்தின் அதிபதி முயற்சி செய்தான். ஆனாலும் ஆண்டவர் எல்லாவற்றையும் முறியடித்து இறுதியில் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி முடித்தார். ஆக ஆண்டவரின் முடிந்தது என்ற இந்த வார்த்தை ஒரு சோகவார்த்தையல்ல. அது ஒரு வெற்றியின் வார்த்தை.

ஆம் சிலுவையில் வெற்றி சிறந்த நேசரின் வெற்றிக்குரல். நம்முடைய பாவங்களுக்கு மீட்பு இல்லை என்பது இத்தோடு முடிந்தது. நமக்கு நித்திய ஜீவன் இல்லை என்ற வார்த்தை இத்தோடு முடிந்தது. எல்லாம் வெற்றிகரமாக முடிந்தது. அவருடைய மரணத்தை குறித்தான தீர்க்கதரிசனங்கள் முடிந்தது. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இருந்த பிளவு இனி முடிந்தது. மனிதனின் பாவங்களுக்கும் நோய்களுக்கும் பரிகாரம் உண்டாக்கி முடிந்தது. எனவே தான் ஒரு வெற்றியின் குரல் என்றார்.

7. ஒப்புவிப்பு

இயேசு பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கின்றேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார், இப்படி சொல்லி ஜீவனை விட்டார். (லூக்கா 23:46) ஆறு வார்த்தைகளையும் மகாவேதனையின் மத்தியில் கூறிய இயேசு, ஏழாவது வார்த்தையாக தன்னை அனுப்பின பிதாவின் சித்தத்தை செய்து முடித்தவராய் பூரண திருப்தியுடன் பிதாவினிடத்தில் தனது ஆவியை ஒப்புவிக்கின்ற வார்த்தையை கூறுகின்றார். ஏழு என்னும் இலக்கம் பரிபூரணத்தை குறிக்கிறது, ஆகவே அவர் கூறிய ஏழாவது வார்த்தை மிகவும் பரிபூரணமான வார்த்தையாக காணப்படுகிறது. இங்கு ஒன்றை கவனிப்போமானால் மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார், இப்படி சொல்லி ஜீவனை விட்டார் என வேதம் கூறுகிறது.

ஏன் இயேசு மகா சத்தமாய் கூப்பிட்டு ஜீவனை விட்டார்? பிதா எப்பொழுதும் அவருரோடே கூட இருந்தவர் மெதுவாய் அல்லது மனதிற்குள் சொன்னால் பிதாவிற்கு தெரியாதா? அல்லது விளங்காதா? ஏனெனில் தான் ஜீவனை விடுகின்ற அந்த தொணி ஏரோதிற்கு கேட்க வேண்டும், தன்னை ஏற்காதா இஸ்ரவேலருக்கு கேட்க வேண்டும், ஏன் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் தன்னை ஏற்காத, தன்னை மறுதலிக்கின்ற ஜனங்களுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே இப்படி கூறினார்.

இயேசுவின் சிலுவை பாடுகளை தியானிக்கின்ற நாம் அவர் சிலுவையில் எவ்வளவாக அவர் பிதாவின் சித்தம் செய்ய தன்னை அர்பணித்திருந்தார் என்பதை நமக்கு காட்டுகிறது. இன்றைக்கு நாம் இயேசுவுக்காக துக்கம் கொண்டாடாமல் இயேசு சொன்னது போல் நாம் சிந்திப்போம் ,ஆண்டவருக்காக எதையாகிலும் சாதிக்கிறவர்களாக அவரிடம் நம்மை ஒப்புக்கொடுப்பதே அவரின் சிலுவையை தியானிப்பதின் உண்மையான அர்த்தம் ஆகும்.