அய்யா வழிபாட்டில் பின்பற்றப்படும் சில விநோதமான நடைமுறைகள்…!

0
1065
      மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரமே, “அய்யா வைகுண்டசாமி” என்று அகிலத்திரட்டு எடுத்துரைக்கின்றது. இதுவரை முன் யுகங்களில் அரக்கர்களை அழித்து, மக்களை காத்து, தர்மத்தை நிலைநாட்டிய மகாவிஷ்ணு, இந்த யுகத்தில், மனிதனின் மனதில் அரக்க வடிவில் குடியிருக்கும் கோபம், காமம், குரோதம் ஆகிய எண்ணங்களை வதைக்க அய்யா வைகுண்டசாமியாக வடிவெடுத்து, மக்களுக்கு சில நடைமுறைகளை போதித்து வழிகாட்டி இருப்பதாக அகிலத்திரட்டு எடுத்துரைக்கின்றது. அந்த வகையில் அய்யாவழியினர் வினோதமான பல நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.
1) கண்ணாடியை வழிபடுதல் 
      அய்யா வழியினர் சிலையை வழிவிடாமல் கண்ணாடியை வழிபடுகிறார்கள். கண்ணாடியை வழிபடுகின்றவர்கள், கண்ணாடியில் தெரியும் உருவத்தையே வணங்குகிறார்கள். “கண்ணாடியில் தெரியும் உன் உருவத்திலேயே நான் இருக்கிறேன்” என்பதே அதன் பூரண தத்துவம் ஆகும். அதாவது “இறைவன் வேறெங்குமில்லை; உனக்குள்ளேயே இருக்கிறான்; நீ தெய்வீகமானவன்; ஆதலால் உன்னை நீயே வணங்கிக் கொள்” என்பதே இதன் சாராம்சம் ஆகும். 
2) வடக்குவாசல் தலத்தில் காலடி மண்ணை திருநாமமாக அணிதல் 
     சாமிதோப்பு, வடக்குவாசல் தலத்தில் பக்தர்கள் ஒரு தட்டில் வைக்கப்பட்டிருக்கும் மண்ணை திருநாமமாக அணிந்து கொள்கிறார்கள். இதற்கான காரணம் என்னவென்றால் 18-19 ஆம் நூற்றாண்டுகளில், தமிழகம் முழுவதும் ஜாதிவெறி தலைதூக்கி இருந்தது. அக்காலகட்டத்தில் பிற்படுத்தப்பட்ட ஜாதியாக கருதப்பட்ட சாணார்களை, மற்ற ஜாதியினர் கொடுமைப்படுத்தி வந்தனர். அவர்களது காலடி மண் கூட பாவம் என்று கருதினர். இதை பார்த்த அய்யா வைகுண்டசாமி, எந்த மண் நீ தீட்டு என்று கருதினாயோ, அதே மண்தான் உன் நோய்களைத் தீர்க்கும் மருந்தாக போகிறது என்று ஜாதி வெறியர்களுக்கு நோயினை ஏவிவிட்டு, இவர்களது காலடி மண்ணை வைத்து அந்த நோய்களை தீர்த்து அருளினார். அன்று முதல் இன்றுவரை வடக்குவாசல் தலத்தில், மக்கள் நடமாடும் பகுதி காலடி மண்ணை நோய்களைத் தீர்க்கும் மருந்தாக, திருநாமம் ஆக அணிந்து வருகிறார்கள். 
3) தலைப்பாகை அணிதல் 
      அய்யா வழியினர் தலையில் தலைப்பாகை அணிந்து இருப்பதை காணலாம். முற்காலத்தில் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் இடுப்பில் தான் துண்டினை கட்டிக்கொண்டு திரிய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது . இதை கண்ட அய்யா வைகுண்டசாமி இடுப்பிலிருந்து துண்டினை எடுத்து அவர்கள் தலையில் கட்டிவிட்டு, ” நான் உனக்குள் இருப்பதால் நீ அரசன் ஆவாய். ஆதலால் இது தலைப்பாகை மட்டும் இல்லை. இந்த தலைப்பாகையை நீ கிரீடமாக அணிந்துகொள். இறைவனைத் தவிர வேறு யாருக்கும் நீ அஞ்ச வேண்டியதில்லை” என்று கூறினார். அடிமைத்தனத்தை அகற்றுவதற்காக அய்யா வழங்கிய தலைப்பாகை முறை இன்னும் நடைமுறையில் இருந்து வருகின்றது. 
4) காணிக்கை இடுவதில்லை 
     அய்யா அருளிய அகிலத்திரட்டு, அருள்நூல் ஆகமங்களில் “காணிக்கை போடாதுங்கோ…” என்று அய்யா கூறியுள்ளார். அதன்படி அய்யா வைகுண்ட பதிகளிலும், தாங்கல்களிலும் உண்டியல் வைப்பதில்லை; காணிக்கையும் வாங்குவதில்லை. காணிக்கை இடவேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள், அந்த தலங்களில் இருக்கும் பணிவிடையாளர்களிடம், “அய்யாவிற்கு அன்பாக விளக்கெண்ணெய்க்கு தர்ம காசு அன்பாக வழங்குகிறேன்” என்று கூறி பணியாளர்களிடம் வழங்க, பணிவிடையாளர்களும் “அய்யாவுக்கு விளக்கெண்ணெய்க்கு காசு அன்பாய் பெற்றுக்கொள்ளப்பட்டது” என்று சொல்லி வாங்கிக் கொள்வார்கள். 
5) தானதர்மங்கள் செய்வதாக நேர்ந்து கொள்ளுதல் 
         “தர்மம் பெரியது தாங்கியிரு என் மகனே..” என்ற அய்யாவின் வார்த்தைக்கு இணங்க, அய்யாவழி பக்தர்கள், காணிக்கை, காவடி, ஆடு கோழி பலி இடுதல், மொட்டை அடித்தல் போன்ற நேர்த்திக்கடனை நேர்ந்து கொள்ளாமல் மோர், பானகரயம், கருப்பட்டி, அன்னம், இனிப்புகள் உட்பட பல பொருள்களை திருவிழாக்காலங்களில் தர்மமாக செய்து நேர்த்திக்கடனை செலுத்தி கொள்கிறார்கள். 
6) மணமேடை தெற்கு முகமாக அமைத்து திருமணம் செய்தல் 
     அய்யா வழிபாட்டினர், மணமேடையை தெற்கு முகமாக அமைத்து, மணமக்ககளை தெற்கு முகமாக இருக்க வைத்து, திருமண நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் சான்றோர்களை வளர்த்த காளி அன்னை, தற்போது கலியுகத்தில் வடக்கு முகமாக தவமிருந்து கொண்டிருக்கிறார். அவர் வளர்த்த பிள்ளைகளை அவள் முன்பாக திருமணம் செய்ய வேண்டும் என்று தத்துவத்தை அடிப்படையாக வைத்து தெற்கு முகமாக மணமேடை அமைக்கப்பட்டு திருமண நிகழ்வுகள் நடைபெறுகிறது. 
7) இறந்தவர்களை வடக்குநோக்கி அமர வைத்து அடக்கம் செய்தல் 
    அய்யா வழியினர் உடல்களை எரிப்பதில்லை. இறந்தவர்களை வடக்கு நோக்கி அமர வைத்து, ஒரு பானையில் உணவு வைக்கப்பட்டு அடக்கம் செய்கிறார்கள். இதற்கான காரணம் என்னவென்றால், அவர் இறந்து போனதாக கருதாமல், அய்யா அடுத்து அமைக்கப்போகும் தர்ம யுகத்திற்கு அவரை எடுத்துக் கொண்டதாக கருதி, இறந்தவர் நரகத்திற்கோ சொர்க்கத்திற்கோ செல்லாமல் அய்யாவோடு தவத்தில் இருப்பதாக கருத வேண்டும் என்ற தத்துவத்தை இச்செயல் முன்னிறுத்துகிறது. 
8) இறந்தவர்களை போட்டோவை வைத்து வழிபடக்கூடாது
 
       அய்யா வழியினர், இறந்தவர்களை அடக்கம் செய்த பின்னர் சுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்வதோ, பிற சடங்குகள் செய்வதோ இல்லை. அவர் இறக்காமல் அய்யாவுடன் தவத்திற்கு சென்றுள்ளதாக கருதுவதால், இறந்தவர் போல வீட்டில் வைத்து வணங்குவதில்லை. இறந்தவர்களுக்கு செய்யப்படும் 8 ஆம் நாள், 16 ஆம் நாள் காரியங்களில் கூட விளக்கு வைத்து அய்யாவை தான் வழிபடகிறார்களே தவிர இறந்தவர்களை வழிபடுவதில்லை . 
9) ஏடு பார்த்தல் 
        அய்யா வழியினர், நினைத்த ஒரு செயலை செய்வதற்கு முன்னால், மூடிய அகிலத்திரட்டு ஆகமத்தை(ஏடு) அய்யாவை நினைத்தவாறு திறப்பார்கள். அந்த பக்கத்தின் வலது புறத்தில் முதல் நான்கு வரிகளில் நாம் என்ன நினைத்து ஏடு பார்த்தோமோ, அதற்கான பதில் அந்த நான்கு வரிகளில் நமக்கு கிடைத்துவிடுகிறது. 
10) மூட நம்பிக்கைகளை நம்புவதில்லை 
       அய்யா பேயை எரித்து, பேய்களின் கணக்கை முடித்து விட்டார் என்று அகிலத்திரட்டு தெளிவாக எடுத்துரைக்கின்றது. ஆதலால் அய்யாவழியினர் பேய் இருப்பதாக நம்புவதில்லை. மேலும் பில்லி சூனியம், ஜோதிடம், சாஸ்திரம் ஆகியவற்றில் நம்பிக்கை கொள்வதில்லை. திருமண பத்திரிகைகளில் சுபமுகூர்த்த நேரத்தை கூட அய்யா நிச்சயித்த நேரத்தில் என்றே குறிப்பிடுகிறார்கள். 
இதுபோன்ற பல எளிமையான, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறைகளால், கடந்த 200 ஆண்டுகளில், அய்யாவழி அதிவேகமாக பரவி லட்சக்கணக்கான மக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.