Homeஹெல்த் டிப்ஸ்கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா வந்தால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தற்காப்பது எப்படி?

கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா வந்தால் என்ன செய்ய வேண்டும்? வராமல் தற்காப்பது எப்படி?

கொரோனா இரண்டாவது அலை புயலாக வீசி வரும் நிலையில் கர்ப்ப காலத்தில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் கர்ப்பிணிகள் இதில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிகளை மகப்பேறு மருத்துவர்கள் வழங்கியுள்ளனர். 

இந்தியாவில் வீசி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையின் ருத்ரதாண்டவமானது அனைவரையும் அஞ்ச வைத்துள்ளது. மின்னல் வேகத்தில் பரவி 4 நாட்களுக்குள்ளேயே அவர்களுக்குள் தீவிர தாக்குதலை ஏற்படுத்துவதால் கொரோனா வைரஸைக் கண்டு மருத்துவ சமூகமும் சற்று பயந்து தான் போயிருக்கிறது. இதற்கு என்ன தான் தீர்வு எப்படி தற்காத்துக் கொள்வது என்ற புலம்பல் எல்லோரிடமும் இருக்கிறது.

குறிப்பாக இரண்டு உயிர்களை சுமந்து கொண்டிருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் இந்த அலையில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்று மகப்பேறு மருத்துவர்களிடம் பேட்டி கண்டது யுவர் ஸ்டோரி தமிழ். சென்னையைச் சேர்ந்த பிரபல குழந்தைப்பேறு மற்றும் லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சை மூத்த மருத்துவரான புவனேஸ்வரி கூறும்போது,

“உலகம் முழுவதுமே கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கர்ப்பிணிப் பெண்களும் இந்த வைரஸ் பாதிப்பிற்கு ஆளாவது அதிகரித்துள்ளது. இதனால் கர்ப்பமுற்றிருக்கும் தாய்மார்கள் அச்சப்படத் தேவையில்லை.”

dr bhuvaneshwari

மருத்துவர். புவனேஸ்வரி, குழந்தைப்பேறு மற்றும் லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை

கடந்த முறை போல இல்லாமல் இப்போது மக்களுக்கு விழிப்புணர்வு வந்திருக்கிறது, பரிசோதனை எடுக்கவே தயக்கம் காட்டியவர்கள் இப்போது லேசான அறிகுறிகள் அல்லது தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று இருந்தால் தாமாகவே முன்வந்து பரிசோதனை எடுத்துக் கொள்கின்றனர்.

தொற்று உறுதியானாலும் அனைவருக்குமே தீவிர சிகிச்சை தேவைப்படுவதில்லை. எந்த அளவிற்கு விரைவாக வைரஸ் தொற்றை கண்டறிகிறோமோ அந்த அளவிலேயே அதன் வீரியத்தை கட்டுப்படுத்த சிறப்பு கவனமும் சமூகப் பரவலாக மாறாமல் தடுக்கவும் முடியும்.

“எனினும் மற்றவர்களைப் போல கர்ப்பமுற்றவர்களுக்கு சில பரிசோதனைகளைச் செய்வது சிரமம் இருக்கிறது. இருப்பினும் தேவைப்பட்டால் அந்த பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. கர்ப்பிணிகளில் தீவிர தொற்றுக்கு ஆளானவர்கள் என்று இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை என்பது சற்றே ஆறுதலான விஷயம்,” என்கிறார்.

பொதுவாகவே மருத்துவமனைகளில் எப்போதும் கர்ப்பிணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பெருந்தொற்று காலத்திலும் அவர்களுக்கான சிகிச்சை மறுக்கப்படக் கூடாது என்பதற்காக மருத்துவமனைகளில் சிறப்பு கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு அவர்களை பராமரிப்பதற்காகவே பயிற்சி பெற்ற மருத்துவத்துறையினர் எந்த நேரமும் தயார் நிலையில் இருக்கின்றனர். எனவே அச்சமின்றி பரிசோதனையும் முறையான கவனிப்பும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் புவனேஸ்வரி.

கோவை விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் சிசு மருத்துவ நிபுணரான மருத்துவர் அனுராதாவிடம் சில கேள்விகளை நாம் முன்வைத்தோம்.

கொரோனா ஒழிப்பு சுகாதார முறைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் என அனைத்தையுமே மக்கள் மறந்து விட்டனர். மேலும்,

”கொரோனாவே நாட்டை விட்டு ஒழிந்தது போல எண்ணி கடந்த 3 மாதங்களில் வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது, போட்டோ ஷூட், பேபி மூன்ஷூட் என்று பலரும் சகஜ நிலைக்கு திரும்பியதே தற்போது இரண்டாம் அலையில் கர்ப்பிணிப் பெண்களும் அதிக அளவில் கொரோனா தாக்கத்திற்கு ஆளாகக் காரணமாக இருக்கிறது,” என்கிறார் மருத்துவர் அனுராதா.

கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டது சதவிகித அளவில் சரியாக சொல்லமுடியாவிட்டாலும் கடந்த 1 மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான கர்ப்பிணிப் பெண்கள் அதீத காய்ச்சல், உடல் வலி மற்றும் சளித்தொந்தரவால் மருத்துவமனைக்கு வருவதை பார்க்க முடிகிறது.

கொரோனா அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக பரிசோதனை செய்து கொண்டு அவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், அவர்கள் குடும்பத்தில் யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதி அல்லது தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தார்கள் என்றாலோ உடனடியாக தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது. பின்னர் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்து முறையான மருத்துவ உதவிகளை மேற்கொள்ள வேண்டும்.

3 நாட்கள் வரை 100 டிகிரிக்கும் அதிக காய்ச்சல் தொடர்ந்தாலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை எந்த ஆய்வும் கூறவில்லை. பொதுவாகவே கர்ப்ப காலத்தில் அதிக காய்ச்சல் ஏற்பட்டால் பனிக்குட தண்ணீர் சற்றே குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

கொரோனா தொற்று உறுதியான உடனே கர்ப்பிணிப் பெண்கள் அதனை வெளியில் சொல்லாமல் மறைத்து விடலாம் என்று எண்ணாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று வைரஸின் தாக்கம் எந்த அளவில் இருக்கிறது என்பதை முதலில் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

கோவிட் தொற்றில் ரத்தம் உறைதல் என்ற சிக்கல் இருப்பதனால் கர்ப்ப காலத்தில் இது மேலும் சிக்கலாக்கும் எனவே அதற்கான பாதிப்புகள் எந்த அளவில் இருக்கிறது என்பதற்கான பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். குறைந்தபட்சமாக 5 நாட்கள் வரை இவை அனைத்துமே சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்து பார்த்துவிட்டு அதன் பின்னர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சுயகண்காணிப்பில் இருக்கலாம் என்கிறார் மருத்துவர் அனுராதா.

பொதுவாகவே கர்ப்ப காலத்தில் பெண்களை தனித்து விடக்கூடாது என்ற பழக்கம் இருக்கிறது. ஆனால் பெருந்தொற்று காலத்தில் இதையெல்லாம் பார்க்காமல் கர்ப்பிணிகள் தனித்து இருப்பதே சிறந்தது.

அனுராதா

மருத்துவர். அனுராதா, மகப்பேறு மற்றும் சிசு மருத்துவ நிபுணர், கோவை விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை

மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் சென்று வருவதைத் தவிர மற்ற நேரங்களில் வீட்டில் இருந்தாலும் மற்றவர்களுடன் சமூக இடைவெளியுடனே இருக்க வேண்டும். பெருந்தொற்று காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை முறையே மாறிவிட்ட நிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது மேலும் சோதனை காலம் தான்.

எனினும், தனிமையை உணராமல் தங்களது உணவு முறையிலும் ஊட்டச்சத்து, நார்ச்சத்து, அதிக நீர்ச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான உணவுகளை உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பைக் குறைப்பதோடு கருவில் இருக்கும் குழந்தைகக்கும் போதுமான சத்து கிடைக்கும்.

கொரோனா காலத்தில் கருவுற்றவர்கள் பிரசவ காலத்தை மகிழ்ச்சியாக எண்ணி கழிக்க முடியாத இக்கட்டான நிலையில் தான் இருக்கிறார்கள். அமைதியாக பூங்காவைச் சுற்றி நடைபயிற்சி செய்யவோ, மகிழ்ச்சியாக ஷாப்பிங் செய்யவோ முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலையில் தான் ஒட்டு மொத்த உலகமுமே இருக்கிறது.

எனவே, வீட்டிற்குள்ளேயோ அல்லது மாடியிலேயோ கூட நடைபயிற்சி செய்யலாம், அப்படியும் முடியாதவர்கள் நடைபயிற்சி தான் செய்ய வேண்டும் என்று இல்லை தங்களுக்குப் பிடித்த எந்த செயலையும் செய்யலாம் உதாரணமாக ஓவியம், கைவினைகள், தையல்கலை, சமையலில் புதிய வகைகளை முயற்சித்தல் என்று மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

இது போன்ற வாய்ப்புகள் இல்லை வெறுமனே வீட்டிலேயே தான் இருக்க வேண்டுமென்றால் அதற்கேற்ப உடல்எடை கூடாதபடி ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்து சரியான உணவுமுறையை கையாண்டால் தேவையின்றி வரக்கூடிய பேறு காலப் பிரச்னைகள் ஏற்படாது.

கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்கள் கோவிஷீல்ட்/கோவாக்சின் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள அரசு பரிந்துரைத்தால் மட்டுமே போட்டுக்கொள்ளலாம். அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் ஏற்கனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசிகளை செலுத்தத் தொடங்கி இருக்கின்றன. இதனால் அவர்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கோவிட் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்திருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

தடுப்பூசி போட்டுக் கொள்வதனால் தாய்,சேய் இருவரில் யாருக்கும் பாதிப்பு இருந்ததாக இதுவரை எந்த ஆய்வும் இல்லை அதே சமயம் இது பாதுகாப்பானது என்று உறுதியாக சொல்வதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரமும் இல்லாததால் நாம் யாரையும் கட்டாயப்படுத்தாமல் இதனால் என்ன நன்மை என்பதை எடுத்துக் கூறி அவர்களுக்கு முழு புரிதலை ஏற்படுத்தி அதன் பின்னர் தடுப்பூசி போடலாம் என்று அறிவுறுத்துகிறார் டாக்டர். அனுராதா.

தடுப்பூசிகள் குறித்து இப்போது பல வதந்திகள் வருகின்றன, ஆனால் இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் 75 சதவிகிதம் பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதால் கோவாக்சின்/கோவிஷீல்டு இரண்டில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்வது நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதால் அவரின் மூலமாகவும் தாய்ப்பால் மூலமாகவும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆன்ட்டிபாடி(Antibody) உருவாகிறது. கொரோனா தொற்று உறுதியானாலும் தாயைப் போல சேய்க்கும் கொரோனா தொற்று கட்டாயம் இருக்கும் என்று சொல்ல முடியாது, அப்படியே இருந்தாலும் இதுவரை சிசுவை தீவிர பாதிப்பிற்கு இது ஆளாகக்கவில்லை.

எனவே, கர்ப்ப காலத்தில் இருப்பவர்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளான கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் போதும் முகக்கவசம் அணிதல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ளுதல் மற்றும் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்தல் உள்ளிட்டவற்றை கடைபிடிப்பதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் என்று அறிவுறுத்துகின்றார் மருத்துவர் அனுராதா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

Muthamilselvan on TNUSRB QUESTION BANK-416 PAGES
வாசு on 6th term I science
ஆரோக்கியம் on TET/TNUSRB CHALLENGE TEST 01
Thiripura sunthari on TET PAPER-01 FREE TEST BATCH-TEST-16
Sangeetha K on TEACHERS WANTED-15-09-22
s.ANANDAMMAL on PGTRB TAMIL UNIT 1 Quiz 01
Suganathan on BRIDGE COURSE 7th Tamil
error: Content is protected !!