பெண்கள் வீட்டில் தோட்டம் அமைப்பது எப்படி?

0
189

வீடுகளில் இருக்கும் காலி இடங்களில் தோட்டம் அமைத்து காய்கனிகளை சாகுபடி செய்யலாம். கடைகளில் வாங்கும் காய்கறிகளில் பூச்சி மருந்தின் தாக்கம் இருக்கும். ஆனால், நாம் இயற்கை முறையில் வளர்க்கும் காய்கனிகளில் இயற்கை உரங்களை இட்டு வளர்ப்பதால் பூச்சி மருந்து மற்றும் நச்சு இல்லாத காய்கனிகளை பெறலாம்.

வீடுகளில் இருக்கும் காலி இடங்களில் சிறிய அளவில் வீட்டு தோட்டம் அமைக்கலாம். ஆனால், ஒரு குடும்பத்திற்கு ஆண்டு முழுவதும் காய்கனிகளை பெற சற்று கூடுதலான இடத்தில் தோட்டங்களை அமைக்கலாம். ஒரு நபருக்கு ஒரு சென்ட் என்ற விகிதத்தில் 5 நபர்கள் உள்ள குடும்பத்திற்கு 5 சென்ட் வீதம் தோட்டம் அமைத்தால் ஆண்டு முழுவதும் வீட்டிற்கு தேவையான காய்கனிகளை பெறலாம்.

வீட்டு தோட்டம் அமைக்க உள்ள இடத்தை தேர்வு செய்து கொண்டு அந்த இடத்தில் காணப்படும் தேவையற்ற சிமெண்டு கட்டிகள், கற்கள் உள்பட செடிகளின் வளர்ச்சியை பாதிக்கும் பொருட்களை முதலில் அகற்ற வேண்டும். தேர்ந்தெடுத்த நிலத்தை சத்துள்ளதாக மாற்ற அந்த மண்ணின் வளத்தை மேம்படுத்த வேண்டும்.

உதாரணமாக, நிலத்தின் மண் உவர் மண்ணாக இருந்தால் பசுந்தாள், செம்மண் மற்றும் தொழுஉரத்தை நிலத்தில் இட்டு 2½ அடி ஆழம் வரை மண்ணை கொத்தி விட வேண்டும். களிமண் நிலமாக இருந்தால் பசுந்தாள் உரம், தொழுஉரம், சாம்பல் இவைகளை கலந்தும், களர் மண்ணாக இருந்தால் பசுந்தாள் உரத்தை அதிக அளவில் இட வேண்டும். சாதாரணமாக தோட்ட மண்ணில் தொழுஉரம் அல்லது கம்போஸ்ட் இவைகளை அதிகமாக இட்டு மண்ணை வளப்படுத்தி கொள்ளலாம்.

காய்கனிகளை பயிரிடும் போது நீண்ட காலப்பயிர்களான முருங்கை, கருவேப்பிலை, கொய்யா, மாதுளை, எலுமிச்சை, பப்பாளி, லட்சக்கொட்டை கீரை, தவசிக்கீரை போன்றவற்றை தோட்டத்தின் ஓரத்தில் நட வேண்டும். இந்த சிறிய ரக செடிகளில் நிழலானது, தோட்டத்தின் உள்பகுதியில் விளையும் காய்கனி பயிர்களின் மீது படாதவாறு இருக்க வேண்டும். விரைவில் பலன் தரக்கூடிய கீரைவகைகள், கொத்தமல்லி இவைகளை தோட்டத்தில் நடப்பதற்காக விடப்பட்ட நடைபாதைகளின் 2 பக்கங்களிலும் சிறுபாத்தி அமைத்து பயிரிடலாம். பாத்திகளை பிரித்து, வரப்புகளில் வெங்காயம், முள்ளங்கி, இஞ்சி இவைகளை பயிரிடலாம்.

படரும் கொடிவகைகளை தனி கவனத்துடன் பயிரிட வேண்டும். தோட்டத்தின் 4 மூலைகளிலும் பந்தல் அமைத்து அதன்கீழ் பாகல், பீர்க்கு, புடலை, அவரை ஆகியவற்றை விதைத்து பயன் பெறலாம். அவரை மற்றும் புடலையை ஒரே பந்தலில் படர விட வேண்டும். அவரை பூ விடும் முன் புடலை பூ விட்டு பலன் கொடுத்து விடும். அதிக வயதுடைய பயிரான கத்தரி, மிளகாய் பயிர்களுக்கு இடையே ஊடுபயிராக குறைந்த கால வயது பயிரான முள்ளங்கி, தண்டுக்கீரை இவைகளை சாகுபடி செய்து பலன் பெறலாம். பயிர் நோய்கள் தாக்கும் நிலை காணப்பட்டால் வேம்பு கரைசல் உள்ளிட்ட இயற்கை பூச்சி கொல்லிகளை பயன் படுத்தி நோய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

வீட்டு தோட்டம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட காலி இடத்தை சம அளவுள்ள பாத்திகளாக பிரித்து கொண்டால் முதல் பாதி பிப்ரவரி, மே மாதத்தில் தக்காளி பயிரும், ஜூன், ஜூலை மாதத்தில் டிசம்பர் மாதம் வரை கத்தரியும், ஜனவரி முதல் பிப்ரவரி வரை கீரை வகைகளையும் பயிர் செய்யலாம். இதே போல் 2-வது பாத்தியில் மார்ச் முதல் ஜூன் வரை வெண்டையும், ஜூன் முதல் செப்டம்பர் வரை கொத்தவரையும், செப்டம்பர், அக்டோபரில் முள்ளங்கியும், நவம்பர், பிப்ரவரியில் வெங்காயமும் பயிரிடலாம்.

இதே போல் 3-வது, 4-வது பாத்திகளில் பயிரினை மாற்றி மாற்றி ஆண்டு முழுவதும் அனைத்து காய்கறிகளும் தினந்தோறும் கிடைக்கும் வண்ணம் திட்டமிட்டு பயிரிடலாம். காய்கறி பயிருக்கு என்று தயாரிக்கப்படும் நுண்ணுயிர் மற்றும் காய்கனி கலப்புரத்தை இட்டு கூடுதல் மகசூல் பெறலாம். இதன் மூலம் அன்றாடம் வீட்டு சமையலுக்கு நமது வீட்டு தோட்டத்தில் விளையும் காய்கறிகள் சுவையுடன் சத்தையும் தருவதாக இருக்கும்.