பெண் குழந்தையை லட்சாதிபதி ஆக்கும் அருமையான திட்டம்! சுகன்யா சம்ரிதி யோஜனா

0
155

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 முதலீடு செய்து ரூ.5 லட்சம் வரையில் லாபம் ஈட்டுவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.


சுகன்யா சம்ரிதி யோஜனா!

பெண் குழந்தைகளுக்கான மோடி அரசின் மிகச் சிறந்த திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனா அல்லது செல்வ மகள் சேமிப்புத் திட்டம், இந்திய தபால் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ தபால் அலுவலகங்களில் கணக்கு துவங்கலாம். இதில், செலுத்தும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

வட்டி லாபம் எவ்வளவு?

செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டி கிடைக்கிறது. சிறு சேமிப்புத் திட்டத்திலேயே செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில்தான் அதிக வட்டி கிடைக்கிறது. பெண்ணுக்கு 21 வயது ஆனவுடன் கணக்கை மூடும் போது மூன்று மடங்கு தொகை கிடைப்பதால் பொதுமக்களிடையே இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தை தொடங்க அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகலாம். பெற்றோரின் ஆதார் அட்டை மற்றும் குழந்தையின் ஆதார் அட்டை அல்லது பிறப்பு சான்றிதழ் நகலை காண்பித்து கணக்கை எளிதாகத் தொடங்க முடியும்.

எவ்வளவு டெபாசிட் செய்யலாம்?

செல்வ மகள் சேமிப்புக் கணக்கை தொடங்கும் போது ரூ.250 செலுத்தினால் போதுமானது. அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை செலுத்தலாம். கணக்கு தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் தொகை செலுத்த முடியும். காசோலை, டிமாண்ட் டிராஃப்ட் மூலமாக பணத்தை டெபாசிட் செய்யலாம். ஆன்லைன் பரிவர்த்தனை வசதியும் உள்ளது.

லாபம் எவ்வளவு?

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதம் ரூ.1,000 சேமித்து வந்தால் இத்திட்டத்தின் முடிவில் மொத்தம் ரூ.1.80 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். அதற்கு வட்டியாக ரூ.3.29 லட்சம் கிடைக்கும். மொத்தமாகப் பார்த்தால் ரூ.5.09 லட்சம் உங்களது பெண்ணுக்குக் கிடைக்கும். ஒருவேளை ஒவ்வொரு மாதமும் ரூ.12,500 சேமித்து வந்தால் மொத்தம் உங்களுக்கு ரூ.63.65 லட்சம் கிடைக்கும். இதில் டெபாசிட் பணம் ரூ.22.50 லட்சம் மற்றும் வட்டிப் பணம் ரூ.41.15 லட்சம். அதேபோல, ரூ.10,000 சேமித்தால் ரூ.51 லட்சமும், ரூ.9,000 சேமித்தால் ரூ.46 லட்சமும், ரூ.8,000 சேமித்தால் ரூ.40 லட்சமும், ரூ.7,000 சேமித்தால் ரூ.35 லட்சமும், ரூ.6,000 சேமித்தால் ரூ.30 லட்சமும், ரூ.5,000 சேமித்தால் ரூ.25 லட்சமும் கிடைக்கும்.