ஒரு குட்டி கதை – பிரச்சனை மூட்டை

0
1192
           ஒரு ஊருக்கு பிரசித்திபெற்ற சாமியார் ஒருவர் வந்திருந்தார். அவரைக் காணச் சென்ற பல பக்தர்கள், “எங்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றது ; கவலைகள் இருக்கிறது; இவைகள் அனைத்தையும் தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்” என்றனர். 
         உடனே அந்த சாமியார், “பிரச்சனை இல்லாத மனிதன் கிடையாது. அதே நேரத்தில் நான் உங்களுக்கு மாற்றுவழி ஒன்றைச் சொல்கிறேன். அதாவது நீங்கள் நாளைக்கு வரும் பொழுது உங்கள் பிரச்சனைகளை மூட்டை கட்டிக் கொண்டு வாருங்கள். இங்க வந்ததும் எந்த மூட்டையில் பிரச்சனைகள் குறைவாக இருக்கிறதோ, அந்த மூட்டையை தாங்கள் எடுத்துச் செல்லலாம் ” என்றார். 
         அடுத்த நாள் அனைவரும் பிரச்சனை மூட்டைகளை சுமந்தபடி வந்தனர் . அனைவரையும் முட்டைகளை இறக்கி முன்னால் வைக்குமாறு சாமியார் சொல்ல, அனைவரும் அதன்படியே செய்தனர். 
           “ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு இறைவனை பிரார்த்தித்து அதன் பின்னர் உங்களுக்கு எந்த மூடை வேண்டுமோ அந்த பிரச்சினை மூட்டையைத் தூக்கிச் செல்லலாம்” என்றார். 
           கண்களை மூடி திறந்து பார்த்த போது அனைவரும் தங்களது மூட்டையை மீண்டும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். அதற்கு அந்த சாமியார், “ஏன் நீங்கள் மற்றவர்கள் மூட்டைகளை எடுக்காமல் உங்கள் முட்டைகளை எடுத்துக் கொள்கிறீர்கள்..? காரணம் என்ன?” என்று கேட்க, 
          அதற்கு அந்த மக்கள் எங்கள் பிரச்சினைகளை நாங்கள் ஓரளவுக்கு தெரிந்து வைத்துள்ளோம். ஆதலால் ஏதாவது ஒரு வழியில் சமாளித்துக் கொள்வோம் ஆனால் மற்றவர்கள் மூடைகளை நாங்கள் எடுத்துக்கொண்டால் மேலும் புதிய பிரச்சினைகளை கிளப்பி விடுமே தவிர ஒரு நாளும் தீர்ந்து போகாது. ஆதலால் எங்கள் பிரச்சினைகளையே நாங்கள் வைத்துக் கொள்கிறோம் என்று கூறி தங்களது மூட்டைகளை சுமந்து சென்றார்கள். 
         நாம் அனைவரும் நமக்கு மட்டும்தான் இப்படி நடக்கின்றது… மற்றவர்கள் அனைவரும் மகிழ்வோடு வாழ்கிறார்கள் என்று நினைக்கிறோம் .உண்மையில் அது தவறு. அனைவரும் அவர்களது இயல்பு கேற்றவாறு பல பிரச்சனைகளுடனும் கவலைகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.