ஒரு குட்டி கதை – முல்லாவும் அவனது நம்பிக்கையும்..!

0
605
           முல்லா தனது மனைவி மற்றும் உறவினர்களோடு கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தான். அனைவரும் ஆடி பாடி, மகிழ்ந்து வந்த வேளையில், திடீரென பெரும் காற்று வீச, அலைகளின் உயரம் அதிகரிக்க தொடங்கியது. கப்பலை சுற்றி பெரிய சூறாவளி சுழன்றது. 
          முல்லாவின் மனைவி உட்பட அனைத்து உறவினர்களும் பயத்தில் கத்தத் தொடங்கினார்கள். ஆனால் முல்லா மட்டும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான். 
          அந்த நேரத்தில் முல்லாவின் மனைவி முல்லாவை பார்த்து, “கடல் இவ்வளவு சீற்றத்துடன் இருக்கிறது. நீங்கள் இன்னும் மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு பைத்தியம் ஏதும் பிடித்து விட்டதா..? ஏன் இப்படி இருக்கிறீர்கள்..?” என்று கத்தத் தொடங்கினாள். 
         அந்த நேரத்தில் திடீரென்று மனைவியை முறைத்துப் பார்த்த முல்லா, தன் இடுப்பில் வைத்திருந்த வாளினை திடீரென்று அவளது கழுத்தின் அருகே நீட்டினான். 
        நடப்பதை யூகித்துக் கொள்ள முடியாமல் நின்ற மனைவியைப் பார்த்து முல்லா, “நான் உனது கழுத்தில் கூர்மையான வாள் வைத்து இருக்கிறேன். உனக்கு கொஞ்சம் கூட பயம் இல்லையா..? என்று கேட்டார். 
      அதற்கு முல்லாவின் மனைவி, “வாள் கூர்மையானதாக இருந்தாலும், வைத்திருப்பது எனது அன்பு அன்பிற்குரியவர் அல்லவா..! அதனால் எனக்கு எந்த தீங்கும் நேராது; நான் ஏன் பயப்பட வேண்டும்..? என்றாள். 
     உடனே முல்லா, “இதேபோல தான் இந்த சூறாவளி எவ்வளவு பயங்கரமானதாக இருந்தாலும், இதை உருவாக்கியவர் என் அன்பிற்குரிய கடவுள் அல்லவா..! அதனால் எனக்கு எந்த தீங்கும் நேராது.. நான் ஏன் பயப்பட வேண்டும்?” என்றார். 
கதை உணர்த்தும் நீதி 
கடவுள் மீது பரிபூரண அன்பு வைத்திருப்பவர்கள் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை .