ஆங்கில கதை – ஹாலி டே

0
2232
        பத்திக் 14 வயது சிறுவன். சற்று முரட்டுத்தனமானவன். இளம் வயதிலேயே தந்தை இறந்ததால், தாயின் அரவணைப்பில் சுதந்திரமாக வாழ்ந்து வந்தான். பதிக்கின் முரட்டுதனத்தினை கண்டு, அவனது தாய் மிகவும் வருத்தம் அடைந்தாள். 
      பதிக்கின் தம்பி மகன்லால் தாய்க்கு விருப்பமானவனாக ,சொன்னதைக் கேட்டு நடக்கும் நல்லவனாக இருந்தான். இதனால் வீட்டில் பதிக்கிற்கும் அவனது தம்பிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. 
        ஒரு நாள் பத்திக் தனது நண்பர்களுடன் ஆத்தங்கரை ஓரத்தில் கிடந்த ஒரு பெரிய மரக்கட்டையை உருட்டி ஆற்றுக்குள் தள்ளிக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் அங்கு வந்த பத்திக்கின் தம்பி மகன்லால் அந்த மரக்கட்டையின் மீது வந்து அமர்ந்து இருந்தான். 
     அதைக்கண்டு கோபம் அடைந்த பத்திக் தனது நண்பர்களிடம், “மரக்கட்டையோடு சேர்த்து அவனையும் உருட்டி தள்ளுங்கள்”என்றான். அவன் சொன்னபடியே நண்பர்கள் செய்ய மகன்லால் கீழே விழுந்தான். 
          கீழே விழுந்த மகன்லால் அழுதுகொண்டே நடந்ததை தன் அம்மாவிடம் கூறி விடுவதாக கூறி சென்றான். பத்திக் வீட்டிற்கு சென்றதும் அவனது அம்மா, அவனை அடிக்கத் தொடங்கினாள். கோபமடைந்த பத்திக் அம்மாவைப் பிடித்து தள்ளினான். 
       கீழே விழுந்த பத்திக்கின் அம்மாவினை பல வருடங்கள் கழித்து எதேச்சையாக தன் தங்கையை பார்க்க வந்த பத்திக்கின் தாய்மாமா பீஷ்வாமர் தூக்கிவிட்டார். 
       பல வருடங்கள் கழித்து தங்கையை சந்தித்ததும் கண்ணீரோடு, தன் தங்கையின் நலனை விசாரித்தார் பீஷ்வாமர். பத்திக்கின் அம்மா, பீஷ்வாமரிடம் பத்திக்கின் முரட்டுத்தனத்தை பற்றி எடுத்துக்கூற, பீஷ்வாமர் பத்திக்கினை தன்னோடு கொல்கத்தா கூட்டி போவதாக முடிவெடுத்தார். 
         பத்திக் அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதிக்க, பீஷ்வாமர் அவனை கொல்கத்தா அழைத்துச் சென்றார். கொல்கத்தா சென்றதும் பத்திக்கை பார்த்த பீஷ்வாமரின் மனைவிக்கு கோபம் பீறிட்டு வந்தது. ஏற்கனவே வீட்டில் 2 மகன்கள் இருப்பதால் இவனோடு இன்னொன்றையும் சேர்த்து சமாளிக்க வேண்டுமே என்ற வெறுப்பு அவளை கொடுமைக்காரி ஆக மாற்றியது. 
 
       பீஷ்வாமரின் மகன்கள் பத்திக்கினை விரோதியை பார்த்தது போலவே பார்த்தார்கள். பள்ளியிலும் அவனை, அனைவரும் ‘முட்டாள்’ என்று கேலி செய்தார்கள். ஆசிரியர்களும் திட்டி தீர்த்தார்கள். பள்ளியின் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டிருந்து வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை பார்த்தபொழுது, அவனுக்கு வீட்டு ஞாபகம் வர தொடங்கியது. தன் அம்மாவையும் தன் நண்பர்களையும் நினைத்து ஏங்கத்தொடங்கினான். 
      எந்த ஒரு அன்பும் ஆதரவும் இல்லாத நிலையில் பத்திக் அன்புக்காக ஏங்கி தவித்தான். ஒவ்வொருவரிடமும் தானாக சென்று பேச எண்ணி அவனுக்கு அவமானமே மிஞ்சியது. தொடர்ந்து அம்மாவையும், தன் நண்பர்களையும் சிந்தித்துக் கொண்டே இருந்தான். 
       ஒருநாள் தன் புத்தகத்தை தொலைத்துவிட்ட பத்திக், வீட்டிற்கு சென்றாலும், அத்தை திட்டுவார்கள் என்று நினைத்து பயத்திலேயே வீட்டிற்கு செல்லாமல் நின்று விட்டான். 
        இரவு முழுவதும் நன்கு மழை பெய்த நிலையில் பீஷ்வாமர் பத்திக்கை காணாது, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதற்குள் பத்திக்கை இரண்டு காவலர்கள் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டனர். 
     அன்று இரவு முழுவதும் பத்திக்கு காய்ச்சல் அடிக்க, அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். பத்திக்கை பரிசோதித்து பார்த்த டாக்டர், “நிலைமை மிகவும் மோசமாகி விட்டது” என்று கூறினார்.
      
         பத்திக், “அம்மா என்னை மன்னித்து விடு… அம்மா என்னை மன்னித்துவிடு..” என்று புலம்பியபடியே இருந்தான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த பீஷ்வாமர், அருகில் சென்று “உன் அம்மா விரைவில் வந்து விடுவார்; தகவல் சொல்லி அனுப்பி இருக்கிறேன்” என்றார். 
         அடுத்த நாள் காலையில் பத்திக்கை பார்த்த அவனது அம்மா, அவனது நிலையை பார்த்து கதறி அழுதாள். பத்திக் அம்மாவை பார்த்து, “அம்மா .. அம்மா.. நான் வீட்டிற்கு செல்கிறேன்..! நான் வீட்டிற்கு செல்கிறேன்..!” என்று கூறியபடி கண்களை மூடினான். 
கதை உணர்த்தும் நீதி: 
எந்த உறவும் நம்மோடு இருக்கும் வரை அதன் மதிப்பு தெரியாது..