ஆங்கில தன்னம்பிக்கை கதை – கடைசி இலை

0
3538
         சூ மற்றும் ஜான்சி இருவரும் நல்ல தோழிகள். இருவரும் ஒரே வீட்டில் வாடகைக்கு குடி இருந்தார்கள். நவம்பர் மாதத்தில் அவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் நிமோனியா காய்ச்சல் பரவி வந்தது. அடுத்த சில தினங்களில் ஜான்சியும் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். ஜான்சியை பரிசோதித்த டாக்டர், அவள் பத்தில் ஒரு பகுதி மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். அதுவும் அவளது நம்பிக்கையை பொறுத்தது என்று கூறிவிட்டு சென்றார். 
        அன்று மதிய வேளையில் ஜான்சி எதையோ புலம்பிக் கொண்டிருப்பது போல இருந்தது. சூ அவளருகில் சென்ற பொழுது ஜான்சி எதையோ எண்ணிக்கொண்டிருந்தாள். “எதை எண்ணிக் கொண்டு இருக்கிறாய்..?” என்று சூ ஜான்சியிடம் கேட்டதற்கு, ஜன்னலுக்கு அந்த பகுதியில் எதிரே இருந்த சுவற்றின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கும் ஐவி இலைகளை எண்ணிக் கொண்டிருப்பதாக ஜான்சி பதிலளித்தாள். 
          மேலும் அந்த ஐவி இலைகள் ஒன்று ஒன்றாய் விழுந்து கொண்டிருக்கிறது எனவும் அதில் கடைசி இலை விழும் பொழுது தானும் இறந்து விடுவேன் எனவும் கூறினாள். இதைக் கேட்ட சூ அதிர்ச்சி அடைந்தாள். இது பெரிய முட்டாள்தனம்.. இனி இப்படி நினைக்காதே என்று கண்டித்தாள். 
          ஆனால் ஜான்சி கடைசி இலை விழும் பொழுதில் தானும் இறந்து விடுவேன் என்று கூறிக்கொண்டே இருந்தாள். அன்று இரவு சூ பெஹ்ர்மேனிடம் ஜான்சியின் முட்டாள்தனமான கற்பனையை பற்றி கூறினாள். பெஹ்ர்மேன் வயதானவர். இந்த இரண்டு இளம் பெண்கள் மீதும் அளவற்ற பாசம் உடையவர். ஜான்சியின் முட்டாள்தனத்தை அறிந்து திட்டினார். 
        அன்றிரவே அந்த இலை விழுந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெஹ்ர்மேன், பெயிண்ட் மற்றும் தூரிகையை எடுத்துக்கொண்டு, ஏணியை பயன்படுத்தி அந்த சுவரில் விழுந்த இலைக்கு பதிலாக அழகாக ஒரு இலையை வரைந்தார். 
         அடுத்த நாள் காலையில் ஜன்னலைத் திறந்து ஜான்சி அந்த ஐவி கொடியினை பார்த்த பொழுது, அதில் அந்த கடைசி இலை மட்டும் விழாமல் இருந்தது. அடுத்த இரண்டு நாட்களிலும் அந்த இலை விழாததால், அந்த இலை, தனக்கு ஆயுட்காலம் முடியவில்லை என்பதை உணர்த்துவதாக ஜான்சி எண்ணி பரிபூரணமாக குணமடைந்தாள். ஆனால் மழையில் நனைந்து கொண்டே வரைந்தால் பெஹ்ர்மேன் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனார் 
       இக்கதையின் மூலமாக நம் எண்ணங்களும் சிந்தனைகளுமே நம் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. ஆதலால் எதிர்மறை எண்ணங்களை உதறிவிட்டு நேர்மறை எண்ணங்களை கொண்டு நம் வாழ்க்கையை வளமாக்குவோம்.