ஆன்மீக கதை – கொடை வள்ளல் யார்..?

0
963
     ஒருநாள் அர்ஜுனனும், ஸ்ரீகிருஷ்ணரும் நதிக்கரையில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அர்ஜுனன், கிருஷ்ணரைப் பார்த்து, “கிருஷ்ணா…! நான் உங்களோடு இருக்கும் நேரங்களில், உங்களிடம் “கொடை வள்ளல் யார்…?” என்று கேட்கும் பொழுதெல்லாம் , கொடை வள்ளல் கர்ணன் என்று மற்றவர்களிடமும், என்னிடமும் கூறியிருக்கிறீர்கள். ஆனால் நானும் கர்ணனை விட அதிகளவில் தானதர்மங்கள் செய்திருக்கிறேன். ஆனால் கொடை வள்ளல் என்ற பெயர் கர்ணனுக்கு மட்டும் கிடைக்கக் காரணம் என்ன..?” என்று கேட்டான். 
         அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர், “கொடைவள்ளல் என்பதற்கு அதிக பொருள்கள் கொடுக்க வேண்டுமென்பதில்லை. கொடை அளிப்பதற்கென்று பிரத்தியேகமான சில குணங்கள் உண்டு. அக்குணங்கள் கர்ணனிடம் மட்டுமே இயல்பாகவே இருக்கின்றது. அக்குணங்கள் வேறு யாரிடமும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை” என்றார். 
     இதை அர்ஜுனனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனே ஸ்ரீ கிருஷ்ணர் கர்ணன் தான் கொடைவள்ளல் என்பதை நிரூபிக்க முடிவு செய்தார். 
      அர்ஜுனனை அழைத்து அவன் முன்பாக ஒரு தங்க மலையை உருவாக்கி கொடுத்து, “இந்த தங்க மலையை, சூரியன் அஸ்தமனம் ஆகுவதற்க்கு முன்னால் நீ கொடை அளித்தால் நீ தான் கொடை வள்ளல் என்று அழைக்கப்படுவாய்” என்று கூறினார். 
     இதைக் கேட்ட அர்ஜுனன், “இவ்வளவுதானா..? இதோ நான் கொஞ்ச நேரத்திலேயே கொடுத்து விடுகிறேன்..” என்று கூறி மக்கள் அனைவரையும் அழைத்து, தங்க மலையை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி கொடுத்துக் கொண்டிருந்தான். 
   சூரியன் அஸ்தமனம் ஆகுவதற்க்கு, அரை மணி நேரத்திற்கு முன்பாக சென்ற ஸ்ரீகிருஷ்ணர், மலையில் நான்கில் ஒரு பகுதி கூட குறையாததைக் கண்டு புன்னகைத்தபடியே, “என்ன அர்ஜுனா..? இன்னும் சூரியன் அஸ்தமனமாக கொஞ்ச நேரம் தான் இருக்கின்றது. எப்படி இதை கொடுத்து முடிக்கப் போகிறாய்..” என்று கேட்டார். 
    அர்ஜுனன், “இதை இப்பொழுது கொடுத்துவிடுகிறேன்” என்று திகைத்தபடியே பதிலளித்தான். 
     உடனே ஸ்ரீகிருஷ்ணர், “இதற்குத்தான் கர்ணன் கொடை வள்ளல் என்று கூறுவது.. இந்த நேரத்தில் உனக்கு பதிலாக, இந்த இடத்தில் கர்ணன் நின்றிருந்தால் இம்மலையை அப்பொழுதே தானம் செய்து இருப்பான்” என்றார். 
    இதைக் கேட்டதும் விரக்தியடைந்த அர்ஜுனன், கிருஷ்ணரைப் பார்த்து “அப்படி என்றால் கர்ணனனை அழைத்து இந்த பந்தயத்தில் கலந்து கொள்ளச் சொல்லுங்கள்.. “என்றான். 
     உடனே ஸ்ரீகிருஷ்ணர் கர்ணனனை அழைத்து, “கர்ணா…! இந்த மலையை சூரியன் அஸ்தமனம் ஆகுவதற்க்கு முன்னால் தானம் செய்..! அதற்காகத்தான் உன்னை அழைத்தேன்” என்றார். 
      உடனே கர்ணன், ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கி விட்டு, அங்கிருந்த இருவரை அழைத்து “இந்த மலையில் பாதியை நீ வைத்துக்கொள்.. பாதி மலையை நீ வைத்துக்கொள்..” என்று இருவரிடமும் சரிசமமாகப் பிரித்து கொடுத்து விட்டு அந்த இடத்தை காலி செய்தான் கர்ணன். 
    நடந்ததை நேரில் பார்த்த அர்ஜுனன், ஸ்ரீ கிருஷ்ணரிடம் “கர்ணன் தான் உண்மையான கொடை வள்ளல்” என்று கூறி தனது தோல்வியை ஒப்புக் கொண்டான்.