ஒருவன் பணத்தட்டுப்பாட்டில் என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல், “சரி படைத்த கடவுளுக்கே பணம் வேண்டி கடிதம் எழுதுவோம்” என்று நினைத்து கடவுளிடம் 100 ரூபாய் வேண்டுமென்று கீழ்க்கண்டவாறு கடிதம் எழுதினான்.
அன்புள்ள கடவுளே நான் பண கஷ்டத்தில் இருப்பதால் எனக்கு ஒரு நூறு ரூபாய் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். கடிதம் எழுதியதும், அனுப்ப வேண்டிய முகவரியில் “கடவுள்” என்று மட்டும் எழுதி கடிதத்தை தபால் பெட்டியில் போட்டு விட்டு சென்றுவிட்டான்.
அக்கடிதத்தின் “கடவுள்” என்று எழுதி இருந்த முகவரியை பார்த்துவிட்டு, ஆச்சரியத்தில் தபால்காரர் கடிதத்தை பிரித்து வாசித்து பார்த்தார். இரக்க குணம் நிறைந்த அந்த தபால்காரர், “யாரோ ஒருவர், ஒரு நூறு ரூபாய்க்காக கடவுளை அணுகுகிறான் என்றால் எவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறானோ தெரியவில்லை…” என்று எண்ணி தன்னிடம் இருந்த 50 ரூபாயை வைத்து, மற்றவர்களிடமும் கொஞ்சம் பணம் வாங்கி 80 ரூபாய் சேர்த்து அவன் குறிப்பிட்டு இருந்த விலாசத்திற்கு மணியார்டர் செய்து வைத்தார் அந்த தபால்காரர்.
மணியார்டரை பிரித்துப் பார்த்த அந்த நபர், ஒரு வித மகிழ்ச்சியோடும், ஒரு வித கவலையோடும் கடவுளுக்கு பதில் கடிதம் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
அன்புள்ள கடவுளே, நீங்கள் அனுப்பிய பணம் எனக்கு வந்து சேர்ந்தது. இனி அடுத்த முறை பணம் அனுப்பும் பொழுது தயவுசெய்து தபால்காரர் மூலமாக மணியார்டர் அனுப்ப வேண்டாம். ஏனென்றால் இது தபால்காரர் நல்லவர் போல் தெரியவில்லை. நீங்கள் அனுப்பிய நூறு ரூபாயில் இருபது ரூபாய் எடுத்துக்கொண்டு 80 ரூபாய் மட்டுமே என்னிடம் வந்துள்ளது.
கதை உணர்த்தும் நீதி:
நல்லதுக்கு காலமில்லை