நகைச்சுவைக் கதை – சுமை தூக்கி..!

0
7835
       ஆசிரியர் ஒருவர் விமான நிலையத்தில், வெளிநாட்டிற்கு செல்லும் தன் மகனை வழி அனுப்புவதற்காக வந்திருந்தார். அந்த நேரத்தில் அங்கு ஒரு தொழிலதிபர் ஒருவர், விமான நிலையத்தில் சுமைகளை தூக்கும் ஒரு இளைஞரை கண்டபடி திட்டிக் கொண்டிருந்தார்.
      ஆனால் அந்த இளைஞரோ சிரித்தபடி முகம் கோணாமல் இயல்பு நிலையில் இருந்ததை கண்டு இந்த ஆசிரியருக்கு ஆச்சரியமாயிருந்தது. நடப்பதை உற்று கவனித்துக்கொண்டே இருந்தார். ஒரு அரை மணி நேர திட்டுதலுக்கு பின்னர் அந்த தொழிலதிபர் விமானத்தில் ஏறி வெளிநாடு சென்றார். 
அந்த இளைஞரை பார்த்து ஆச்சரியமடைந்து ஆசிரியர், கோபம் வராமல் இருப்பதற்கான காரணத்தை கேட்டுவிட முடிவு செய்து அந்த இளைஞரை நெருங்கினார் ஆசிரியர். மீண்டும் சிரித்தபடியே வந்த அந்த இளைஞரிடம் சென்று, “அந்த தொழிலதிபர் உன்னை திட்டிக்கொண்டே இருக்கிறார். ஆனால் நீ சற்றும் கோபப்படாமல் இயல்பாய் எப்படி இருக்கிறாய்..?” என்று கேட்டார். 
அதற்கு அவன், “கோபப்பட்டால் மட்டும் என்ன நடக்க போகிறது..? செய்ய வேண்டியதை செய்துவிட்டு நம் வேலையை கவனிக்க வேண்டியது தான் ..!” என்றான். 
அவன் பேச்சில் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதை கண்ட ஆசிரியர், “என்ன சொல்கிறாய்..? கொஞ்சம் தெளிவாக சொல்…” என்று அந்த இளைஞரிடம் கேட்டார். அதற்கு அந்த இளைஞர், “அந்த தொழிலதிபர் அமெரிக்கா செல்கிறார். ஆனால் அவருடைய பொருள்கள் அனைத்தும் இங்கிலாந்து செல்கிறது..” என்று சிரித்தபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். 
அதாவது அந்த இளைஞன் தொழிலதிபர் தன்னை திட்டியதால் அவரிடம் கோபப்படாமல் அவரது சுமைகளை சிரித்தபடியே அடுத்த விமானத்தில் ஏற்றி அனுப்பி விட்டிருக்கிறான். இளைஞனின் சாமர்த்தியத்தை கண்டு சிரித்தவாறு வீடு திரும்பினார் அந்த ஆசிரியர்.