ஒரு குட்டி கதை – அன்னதானம் செய்த வேடன்.

0
953
         முனிவர் ஒருவர் தவம் இருப்பதற்காக காட்டிற்குள் சென்றார். பகல் முழுவதும் சுற்றித்திரிந்த முனிவருக்கு இரவு எங்கு தங்குவது..? என்று தெரியவில்லை. 
          அந்தக் காடு முழுவதும் தங்குவதற்கு இடம் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக மலைப்பகுதியில் ஒரு குகையினை கண்டார். அந்த குகையினுள் ஏற்கனவே ஒரு வேடனும் வேடத்தியும் தங்கியிருந்தனர். வேடன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். ஆதலால் முனிவரை பார்த்து வாருங்கள்..! நீங்களும் எங்களுடன் தங்கிக் கொள்ளலாம்.. என்று கூறினான். 
       ஆனால் அவனது மனைவியோ சுயநலவாதி முணுமுணுத்துக்கொண்டே இருந்தாள். முனிவரும் வேறு வழி இல்லாமல் அங்கு தங்குவதற்கு ஒப்புக்கொண்டார். இரவு நேரத்தில் காட்டுவிலங்குகள் குகைக்குள் வரக்கூடும் என்பதால் குகையின் மேல் இருக்கக்கூடிய மரத்தால் செய்யப்பட்ட பரணில் தான் தூங்க வேண்டும் என்றான் வேடன். 
         இரண்டு பேர்தான் அந்த பரணில் தங்குவதற்கு போதுமானதாக இருக்கும் சூழலில் அந்த வேடன் முனிவரையும் தங்குவதற்கு ஒத்துக்கொண்டு தன்னுடைய இடத்தில் பாதி இடத்தை கொடுத்து தூங்க செய்தான் . தூங்குவதற்கு முன்பாக முனிவர் பசியோடு இருப்பதை அறிந்து, தான் உண்பதற்கு வைத்திருந்த கிழங்குகளை முனிவருக்கு சாப்பிட கொடுத்தான் ஆனால் அவனது மனைவியோ கொடுக்க மனமில்லாமல் ஒதுங்கிக் கொண்டாள். இடம் கொடுத்ததற்கு ம் முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். 
      ஆனால் வேடன் தன்னுடைய பங்கினை முனிவருக்கு வழங்கி பசியாற்றினான். முனிவர் சற்று கண்ணயர்ந்த நேரத்தில் திடீரென பரண் முறிந்து விழுந்தது. முனிவர் இருந்த பகுதி மட்டும் உடையாமல் மேலே இருந்ததால் முனிவர் கீழே விழவில்லை. அந்த நேரத்தில் இரைக்காக வந்திருந்த சிங்கங்கள் வேடனையும் வேடத்தியையும் கடித்து இழுத்துச் சென்றுவிட்டது. தன் கண் முன்னால் தனக்கு உதவிய வேடன் இறந்து போனதை கண்டு மனம் வெதும்பி போனார் முனிவர். 
           அதன் பின்னர் ஆறு மாதங்கள் தவமிருந்து கடவுளின் தரிசனம் கிடைத்தது. கடவுள் முனிவரிடம், என்ன வரம் வேண்டும்..? என்று கேட்க வரம் கேட்க மனமில்லாத முனிவர், எனக்கு உதவிய வேடனுக்கு ஏன் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தினாய்..? என்று சற்று கோபத்தோடு கேட்டார். கடவுள் , “இங்கிருந்து சிறிது தூரத்தில் ஒரு மன்னன் அரசாட்சி செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு பதினைந்து வருடங்கள் கழித்து ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தையிடம் சென்று உன்னுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்.” என்று கூறி கடவுள் மறைந்து போனார். 
       கடவுள் சொன்னபடியே அந்த மன்னனின் அரண்மனையை அடைந்தார் முனிவர். முனிவரைக் கண்டு வரவேற்ற மன்னன் தன்னுடைய குழந்தையை முனிவரிடம் காட்டி ஆசி பெற விரும்பினான். குழந்தையை கண்ட முனிவர் கடவுளிடம் கேட்ட அதே கேள்வியை குழந்தையிடம் கேட்டார். 
        அதற்கு பிறந்து 6 மாதங்களே ஆன அந்த குழந்தை, “நான்தான் உமக்கு உதவிய அந்த வேடன்; உங்களுக்கு உணவு வழங்கியதால் எனக்கு மன்னனின் அரண்மனையில் பிறக்கும் நற்பேறு கிடைத்தது” என்று பதில் அளித்தது. 
     இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த முனிவர், உன் மனைவியின் நிலை என்ன..? என்று கேட்டார். 
         அதற்கு அந்த குழந்தை “பசியோடு இருப்பவருக்கு உணவளிக்க மறுத்ததால் என் மனைவி, இங்கு இருந்து சற்று தொலைவில் இருக்கக் கூடிய சுடு காட்டில் வெட்டியான் ஒருவன் வசிக்கிறான். அவன்வளர்க்கும் பன்றிக்கு எட்டாவது குட்டியாக பிறந்திருக்கிறாள்” என்றது. 
கதை உணர்த்தும் நீதி: 
பசிக்கு உணவளித்தவர்களுக்கு நற்பேறு கிடைக்கும்.