
ஒரு மனிதன் எப்போது பெரியவனாகிறான்? தலைமுடி நரைக்கும் போதா? அல்லது வயதின் எண்கள் கூடும் போதா? இல்லை, வாழ்க்கையின் ஆழத்தையும், ஒரு சொட்டு வியர்வையின் மதிப்பையும் உணரும் தருணத்தில்தான் அவன் உண்மையான பெரியவனாகிறான்.
எனக்கும் அந்தப் புரிதல் வருவதற்கு பல வருடங்கள் கழித்து போயிற்று.
எங்கள் ஊர் ஒரு சிறிய கிராமம். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வேண்டுமென்றாலும் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பக்கத்து ஊருக்குத்தான் செல்ல வேண்டும். பெரும்பாலும் எங்கள் ஊர் காரர்கள் நடந்து சென்றோ அல்லது சைக்கிளில் சென்றோ பொருட்கள் வாங்கி வருவார்கள். இது பல எனது பெரியப்பாவும் வழக்கமாக சைக்கிளில்தான் போவார். ஆனால், சில தருணங்களில் எனது பைக்கில் அவரை ஏற்றிச் செல்வதுண்டு.
அவருடன் கடைக்குச் செல்வது எனக்குள் ஒரு சிறிய சலிப்பைத் தரும். ஏனெனில் குறைந்த பொருட்களை வாங்க பேரம் பேசி பேசி அதிக நேரம் செலவிடுவார். அதிலும் கடந்த மாதம் ஒரு நாள் நடந்ததை என்னால் மறக்கவே முடியாது. பக்கத்து ஊருக்குச் சென்றதும், அங்குள்ள நான்கு கடைகளுக்கும் என்னை அழைத்துச் சென்றார்.
முதல் கடையில் நின்று, “தம்பி, இந்தக்கடையில தான் கத்தரிக்காய் கிலோ ரேட் கம்மியா இருக்கும்” என்றார். அடுத்த கடையில் நின்று, “இங்க சீனி ரெண்டு ரூபாய் கம்மி” என்றார். இன்னொரு கடையில் தக்காளி. இப்படி ஒவ்வொரு கடையிலும் ஏறி இறங்கி, ஓரிரு ரூபாய்களுக்காக பேரம் பேசி வாங்குவதைப் பார்க்கும்போது எனக்குள் சலிப்பாக வரும்.
‘சூப்பர் மார்க்கெட்டில் போனால் எவனாவது இப்படிப் பேரம் பேசுவானா? அங்கே ஆயிரக்கணக்கில் செலவு செய்துவிட்டு வருகிறோம். இந்த ஒரு ரூபாயையும் இரண்டு ரூபாயையும் மிச்சப்படுத்தி அப்படி என்ன சாதிக்கப் போகிறோம்?’ – நவீன வாழ்க்கையின் வேகத்தில் ஓடப் பழகிய என் மனதுக்கு அப்போதைக்கு அப்படித்தான் தோன்றியது. பெரியப்பாவின் அந்தச் செயல் எனக்குப் பெரும் அபத்தமாகப் பட்டது.
நாட்கள் உருண்டோடின. எதிர்பாராத ஒரு நாளில் பெரியப்பா பிரிந்துவிட்டார். காலம் தன் வேலையைச் செய்தது, ஆனால் நினைவுகள் அப்படியேதான் இருந்தன.
நேற்று மாலை, வீட்டிற்குச் சின்ன வெங்காயம் வாங்குவதற்காக அதே பக்கத்து ஊர் சந்தைக்கு பைக்கில் சென்றேன். வழக்கமாக ஏதோ ஒரு கடையில் கேட்டு வாங்கிவிட்டுத் திரும்பும் எனக்கு, பெரியப்பாவின் ஞாபகார்த்தமாக ஒரு யோசனை வந்தது.
‘பெரியப்பா பாணியில் நாமும் இன்று கேட்டுப் பார்ப்போமே?’
முதல் கடையில் போய் சின்ன வெங்காயம் விலை கேட்டேன். “கிலோ அறுபது ரூபாய்” என்றான் கடைக்காரன். அடுத்த கடையில் கேட்டேன். “கிலோ எண்பது ரூபாய்” என்றான். மூன்றாவது கடையில் கேட்டபோது, “கிலோ நாற்பது ரூபாய்” என்றான்.
நான் திகைத்துப் போய் நின்றேன். ஒரே ஊர், ஒரே சந்தை, ஒரே வெங்காயம்! ஆனால் நாற்பது ரூபாய் வித்தியாசம்! அன்றைக்கு மூன்றாவது கடையில் நாற்பது ரூபாய்க்கு வெங்காயத்தை வாங்கிப் பையில் போட்டபோதுதான், மின்னல் அடித்தாற்போல அந்த உண்மை என் மண்டையில் உறைத்தது.
‘நாம் இத்தனை காலம் படித்திருந்தும் எவ்வளவு பெரிய அறியாமையில் இருந்திருக்கிறோம்!’
பெரியப்பா ஒரு விவசாயி. அவருக்கு மாதச் சம்பளமோ, வாரச் சம்பளமோ கிடையாது. எப்போதோ ஒருமுறை, நிலம் கனிந்து பலன் தரும்போதுதான் கைக்குக் காசு வரும். அந்த ஒவ்வொரு ரூபாய் காசுக்கும் பின்னால், வெயிலிலும் மழையிலும் அவர் சிந்திய இரத்தமும் வியர்வையும் கலந்திருந்தது.
தன் உழைப்பை வீணாக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஒரு ரூபாயைச் சம்பாதிக்க எவ்வளவு உழைக்க வேண்டியிருந்ததோ, அதே அளவு உழைப்பைக் கொடுத்துதான் அந்த ஒரு ரூபாயையும் அவர் வீணாகாமல் காப்பாற்றினார். அது வெறும் பேரம் பேசுதல் அல்ல; தன் உழைப்பிற்கு அவர் கொடுத்த உன்னதமான மரியாதை!
பணத்தின் மதிப்பையும் உழைப்பின் புனிதத்தையும் அவர் எனக்குப் பாடம் நடத்திச் சொல்லித்தரவில்லை; தன் வாழ்க்கையின் மூலமாகவே வாழ்ந்துக் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்.
அந்நினைவுகளின் கனத்தோடு பைக்கை ஸ்டார்ட் செய்து ஊர் திரும்பும்போது, அந்த நான்கு கடைகளும் என் கண்களில் புதிய வெளிச்சத்தோடு தெரிந்தன. காற்றில் பெரியப்பாவின் அன்பான வழிகாட்டல் இன்னும் தங்கியிருப்பது போல் ஒரு உணர்வு. நெஞ்சார அவரை நினைத்து மனதுக்குள் நின்றுகொண்டேன்:
“என்ன இருந்தாலும்… பெரியவங்க பெரியவங்கதான்!”
- அனுபவமே சிறந்த ஆசான்: புத்தகப் படிப்போ அல்லது நவீன வாழ்க்கை முறையோ தரும் அறிவை விட, அனுபவ ரீதியாகப் பெரியவர்கள் வாழ்த்துக் காட்டிய வாழ்க்கைப் பாடங்களே உண்மையான தெளிவைத் தரும்
C.P NARAYANAN

