இந்தியாவில் 11,717 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை

0
103

நாடு முழுவதும் 11,717 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பதாகவும் தமிழகத்தில் மட்டும் 236 பேருக்கு இந்நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Black Fungus : இந்தியாவில் 11,717 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை

கொரோனா தொற்றின் 2ஆவது அலை நாடு முழுவதும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில், தற்போது கருப்பு பூஞ்சை நோய் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று, கொரோனா நேய் தொற்று பரவத் தொடங்குவதற்கு முன்பிருந்தே இருந்து வருகின்றது. உடலில் அதிக சர்க்கரை அளவு உள்ளவர்கள், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தப் புற்றுநோய் உள்ளவர்கள், தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் இந்த கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு வந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருபவர்கள், மற்றும் மீண்டவர்கள் இந்த கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது.


இந்நோயால் குஜராத், கர்நாடகா, உத்தரகாண்ட், தெலங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அதிகம் பாதிப்பை கண்டு வருகின்றன. அதேபோல தமிழகத்திலும் ஆங்காங்கே கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கவலை தெரிவித்திருப்பதுடன், உரிய மருத்துவ ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்திற்கு மட்டும் 236 பேருக்கு இந்த கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தனது ட்விட்டர் பக்கத்தில், நாடு முழுவதும் இதுவரை 11,717 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். அது தொடர்பான பட்டியலையும் அதில் இணைத்துள்ளார். அதில், அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 2,859 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு கூடுதலாக 29,250 ஆம்போமெரிசின் பி குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், தமிழகத்திற்கு 600 மருந்து குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.