யாரெல்லாம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது ?

0
171

‘இதற்காகத்தானே காத்திருந்தோம்’ என்பது போல், இதோ கொரோனா தடுப்பூசி வந்து விட்டது! நம் நாட்டில் கடந்த, ஜன., 16ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி, துவங்கி நடந்து வருகிறது. என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், தடுப்பூசி குறித்த சில தவறான நம்பிக்கைகள், மக்கள் மத்தியில் வைரசை விட, வேகமாக பரவுகிறது. இது குறித்த நம் கேள்விகளுக்கு, உரிய விளக்கமளிக்கிறார் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா.

கொரோனா தடுப்பூசியை, யாரெல்லாம் போட்டுக்கொள்ள வேண்டியது முக்கியம்?
கொரோனா தடுப்பூசியை போட எவ்வித தயக்கமும், பயமும் தேவையில்லை. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டியது அவசியம். அரசு வழிகாட்டுதலின்படி, முதலில் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டது.
தற்போது, 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள், 45 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களில் சர்க்கரை, ரத்த அழுத்தம் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ஆதார் அட்டையை காண்பித்து போட்டுக்கொள்ளலாம்.

கொரோனா தொற்று ஏற்பட்டு மீண்டவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாமா?
கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் உடம்பில், நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாக உருவாகி இருக்கும். ஆனால் அது நிரந்தரமில்லை; தற்போது கொரோனா இரண்டாம் அலை என்றெல்லாம் வரும் நிலையில், மீண்ட உடனே போட்டுக் கொள்ளாமல், சிறிது தாமதமாக போட்டுக்கொள்ள வேண்டும்.

யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது ?
கொரோனா சிகிச்சை பெறுபவர்கள், கடுமையான பிற தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், 18 வயதுக்கு குறைந்தவர்கள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் பெண்களுக்கு தடுப்பூசி போடப்படுவதில்லை. 45 முதல் 59 வரையுள்ள சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பாதிப்புகள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்யும் மருத்துவ சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். தடுப்பூசியால் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனாலும், பிற இணை நோய்களால் ஏற்படும் பாதிப்பு, தடுப்பூசியால் தான் ஏற்பட்டது என்ற தேவையற்ற சிக்கல்கள் எழும். இதனால்தான், இணை நோய்கள் கட்டுப்பாட்டில் உள்ளதற்கான மருத்துவ சான்றிதழ் பெறப்படுகிறது; இதனால் அச்சம் கொள்ளத்தேவையில்லை.

தடுப்பூசி போட்ட பின், எத்தனை நாள் கழித்து இரண்டாம் டோஸ் போட வேண்டும் ? எத்தனை நாட்களில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்?
முதல் டோஸ் போட்டு, 29 நாட்கள் கழித்து எப்போது வேண்டுமானலும் இரண்டாம் டோஸ் போட்டுக்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தி, 45 நாட்களுக்கு பிறகே உடலில் உருவாகும்.

தடுப்பூசி போட்டவர்கள் மாஸ்க் அணிய வேண்டியது அவசியமா ?
தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் மாஸ்க், சமூக இடைவெளி என்பது அனைவருக்கும் கட்டாயம். இப்பாதிப்பில் இருந்து முழுமையாக, நாம் அனைவரும் மீள, அரசின் விதிமுறைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசியால் கோவையில், இதுவரை யாராவது பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனரா?
தடுப்பூசியால் எவ்வித பாதிப்பும் ஒருவருக்கும் ஏற்படவில்லை. மருத்துவர்களாகிய நாங்களே இதனை போட்டுக்கொண்டுள்ளோம். தேவையற்ற மூடநம்பிக்கைகளை, கருத்துக்களை புறக்கணித்து தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சாதாரணமாக காய்ச்சல், அசதி போன்ற பக்கவிளைவுகள் வரவாய்ப்புள்ளது. இது, அனைத்து தடுப்பூசிகளுக்கும் பொருந்தும் என்பதால், பயம் கொள்ள தேவையில்லை.

பொதுவாகவே தடுப்பூசி அலர்ஜி உள்ளவர்களுக்கு, பாதிப்பு ஏற்படுமா ?
அலர்ஜி என்பது யாருக்கு ஏற்படும்; எதற்கு ஏற்படுகிறது என்பதை கணிக்க இயலாது. பிற மருந்துகளுக்கு அலர்ஜி உள்ளவர்கள், தடுப்பூசி போடக்கூடாது என்பது கிடையாது. குறிப்பிட்ட ஏதேனும் அலர்ஜி உள்ளவர்கள், தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு முன்பு மருத்துவர்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். கொரோனா தடுப்பூசியால் எந்த பிரச்னையும் ஏற்படாது. பயப்படத்தேவையில்லை.