கோவிட் 19 தடுப்பூசி போட்டவர்கள் எதைச் செய்யலாம்? எதைச் செய்யக் கூடாது?

0
186

இந்தியாவில் இதுவரை 1.63 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். யாருக்கும் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை என்றாலும், சிலருக்கு சில பக்க விளைவுகள் அல்லது லேசான நோயைப் பதிவு செய்துள்ளனர்.

ஓர் சிறிய எண்ணிக்கையில் இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்பார்க்கப்பட்டது என்பதையும் இவை எந்த விதத்திலும் மக்களைத் தடுக்கக் கூடாது என்பதையும் ஏராளமான வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மகாராஷ்டிராவின் கோவிட் -19 பணிக்குழுவின் உறுப்பினரான டாக்டர் சஷாங்க் ஜோஷி, இந்தியாவில் பயன்படுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகளும் அதாவது பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பதிப்பான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்ட் ஆகியவை முற்றிலும் பாதுகாப்பானவை மற்றும் சிறிய பக்க விளைவுகள் சில சந்தர்ப்பங்களில் ஏற்படலாம் என்று கூறினார். மேலும், இந்த குறிப்பிட்ட தடுப்பூசிகளுக்கு மட்டுமல்ல, வேறு எந்த தடுப்பூசிகளுக்கும் இதுபோன்ற சிறியளவில் பக்கவிளைவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தடுப்பூசி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மற்றும் தடுப்பூசி போடுவதற்கு முன்பு நீங்கள் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகள் இங்கே.

தடுப்பூசி போடுவதற்கு முன்

ஒரு நபருக்கு மருந்துகளுக்கு ஒவ்வாமை இருந்தால், ஓர் மருத்துவ பயிற்சியாளரிடமிருந்து all-clear பதிவு பெறுவது முக்கியம். ஒரு முழுமையான ரத்த எண்ணிக்கை (சிபிசி), சி-ரியாக்டிவ் புரதம் (சிஆர்பி) அல்லது இம்யூனோகுளோபுலின்-இ (ஐஜிஇ) அளவை மருத்துவ ஆலோசனையின் கீழ் சரிபார்க்கலாம்.

தடுப்பூசிக்கு முன்னதாக ஒருவர் நன்றாக சாப்பிட்டு மருந்துகள் ஏதேனும் இருந்தால் அதனை உட்கொண்டிருக்க வேண்டும். ஒருவர் முடிந்தவரை நிதானமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். பயத்தில் இருக்கும் மக்கள், ஆலோசனை பெற்றுக்கொள்வது பெரும் உதவியாக இருக்கும்.

நீரிழிவு நோய் அல்லது ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். புற்றுநோய் நோயாளிகள், குறிப்பாக கீமோதெரபியில் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும்.

கோவிட் -19 சிகிச்சையின் ஒரு பகுதியாக ரத்த பிளாஸ்மா அல்லது மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளைப் பெற்றவர்கள் அல்லது அதனைக் கடந்த ஒன்றரை மாதங்களில் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது தடுப்பூசி எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தடுப்பூசி போட்ட பிறகு

உடனடி கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளிலிருந்து தடுப்பதற்காகத் தடுப்பூசி பெறுபவர் தடுப்பூசி மையத்திலேயே கண்காணிக்கப்படுகிறார். எந்தவித பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே மக்கள் வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் வலி மற்றும் காய்ச்சல் போன்ற பக்க விளைவுகள் பொதுவானவை. இதற்கு பீதி அடைய வேண்டாம். குளிர் மற்றும் சோர்வு போன்ற வேறு சில பக்க விளைவுகளும் எதிர்பார்க்கப்படலாம். இவை சில நாட்களில் போய்விடும்.

முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை

இந்தத் தடுப்பூசிகள், கோவிட் -19 ஏற்படுத்தும் நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வெளிப்புற அச்சுறுத்தலை எவ்வாறு கண்டறிவது மற்றும் போராடுவது என்பதைக் கற்பிக்கிறது. வைரஸுக்கு எதிராகப் பாதுகாப்பை (நோய் எதிர்ப்பு சக்தியை) உடலுக்கு உருவாக்க, தடுப்பூசி போட்ட பிறகு சில வாரங்கள் எடுத்துக்கொள்ளும்.

இதன் பொருள் என்னவென்றால், தடுப்பூசி போட்ட சில நாட்களில் ஒரு நபர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்படலாம். ஏனென்றால் அந்த நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க போதுமான நேரம் இருக்காது.

எனவே, தடுப்பூசி போட்ட பிறகும் அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும். ஒரு தடுப்பூசி எடுக்கப்பட்டதால் மாஸ்க், கை சுகாதாரம் மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கைவிடக்கூடாது. இருமல் / தும்மல் விதிமுறைகளும் பின்பற்ற வேண்டும்.