நகைச்சுவை கதை – “யார் முட்டாள்..?”

0
9848
       இரண்டு முதலாளிகள் பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் ஒரு முதலாளி, தன்னிடம் வேலை பார்ப்பவனை போல, உலகத்தில் முட்டாளை காண முடியாது என்றார். அதற்கு மற்றொரு முதலாளி, தன்னிடம் வேலை பார்ப்பவன் தான் உலகத்திலேயே அடி முட்டாள் என்றான். இருவருக்கும் சில நிமிடங்கள் வாக்குவாதம் நடந்தது. முடிவில் இருவரும் நிரூபித்துக் காட்டுவதாக கூறி சமாதானம் ஆனார்கள். 
      அதன் பின்னர், முதல் முதலாளி தன்னுடைய வேலைக்காரனை அழைத்து, அவனிடம் ஒரு ரூபாயை கொடுத்து, “நீ போய் ஒரு ஆடி கார் வாங்கி வா..!” என்று அனுப்பிவிட்டான். அவனும் அதற்கு “சரி” என்று கூறி சென்றான். உடனே அந்த முதல் முதலாளி, “பார்த்தியா..! ஒரு ரூபாயை கொடுத்து, ஆடி கார் வாங்க சொல்கிறேன்; அதற்கும் சரி என்று போகிறான். இவனை மாதிரி முட்டாப்பய உலகத்திலேயே உண்டா..? என்று கூறி சிலிர்த்துக் கொண்டான்.
“கொஞ்சம் பொறு..!” என்னுடைய வேலைக்காரனை பாரு… என்று கூறி அவனுடைய வேலைக்காரனை அழைத்தான்; அந்த இரண்டாவது முதலாளி. 
       இரண்டாம் முதலாளி தனது வேலைக்காரனை அழைத்து, அவனிடம் “நான் தற்பொழுது என்னுடைய வீட்டில் இருக்கிறேனா என்று பார்த்து வா” என்று கூறி அனுப்பினான். உடனே அவனும் “சரி” என்று கூறி சென்றான் . அவன் சென்றதும் இரண்டாவது முதலாளி, “பார்த்தியா..!” இவன மாதிரி அடிமுட்டாள் உலகத்தில் உண்டா..? என்று கூறி அவனும் சிரித்துக் கொண்டான். 
     இப்பொழுது இரண்டு வேலைக்காரர்களும், ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டார்கள். இப்பொழுது இவர்கள் இருவரும், தங்கள் முதலாளிதான் முட்டாள் என்று வாக்குவாதம் செய்து கொண்டார்கள். 
     “எப்படி..?” என்று இரண்டாம் வேலைக்காரன் கேட்க, முதல் வேலைக்காரன் தன்னுடைய ஓனர் ஒரு ரூபாயை கொடுத்து ஆடி கார் வாங்கி வரச்சொன்னார்.. அவருக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா…! இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை கடை லீவுன்னு முட்டாப்பய முதலாளிக்கு தெரியாம இருந்திருக்கு… அவர மாதிரி லூசு உலகத்தில் உண்டா என்று கூறி அவன் சிரித்துக் கொண்டான். 
     இரண்டாம் வேலைக்காரன், “அது கூட பரவாயில்லடா.. எங்க ஓனர், அவர் வீட்ல இருக்காரா என்று சொல்லி என்ன பாத்துட்டு வரச் சொல்றாரு… அவருக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கான்னு பாரேன்…! கையில் செல்போன் வச்சிருக்காரு… வீட்ல லேண்ட்லைன் போன் இருக்கு; ஒரு வார்த்த போன் பண்ணி அவங்க மனைவி கிட்ட அவர் அங்க இருக்காரான்னு கேட்டா அவங்க மனைவி சொல்ல போறாங்க… இதுக்கெல்லாம் போயி என்ன அனுப்பி விடுறாங்க.. என்று கூறி அவன் சிரித்துக் கொண்டான். 
நீங்களே சொல்லுங்க இதுல யாரு முட்டாள்….