கந்தன் என்ற விவசாயி ஒருவன் பக்கத்து ஊருக்கு வந்திருக்கும் பிரபல ஜோதிடர் ஒருவரைக் காண சென்றிருந்தான். இன்முகத்தோடு கந்தனை வரவேற்ற அந்த ஜோதிடர், கந்தனின் ஜோதிட ஓலைச்சுவடியை வாங்கி புரட்டிப் பார்த்தார்.
ஓலைச்சுவடியின் ஒரு ஓரத்தில் எழுதப்பட்டிருந்த குறிப்பினை பார்த்ததும், அந்த ஜோதிடர் அதிர்ச்சி அடைந்தார். அதாவது கந்தனுக்கு அன்று இரவு ஆயுள் முடிகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஜோதிட தர்மத்தின்படி எந்த ஒரு ஜோதிடரும் இறப்பு எப்பொழுது நேரும் என்பதை குறிப்பிடக்கூடாது. அதன்படி அந்த ஜோதிடர், கந்தனை அழைத்து, நீங்கள் நாளை காலையில் வாருங்கள்.. நான் உங்களுக்கு ஜாதகம் பார்த்து தருகிறேன் என்று கூறி வருத்தத்தோடு அனுப்பி வைத்தார்.
ஒன்றும் புரியாத கந்தன் அடுத்த நாள் வருவதாக கூறி வீடு திரும்பினான். வீடு திரும்பும் வழியில் சற்று மலைச்சாரல் விழவே அருகிலிருந்த பாழடைந்த சிவன் கோவிலில் ஒதுங்கினான். சிறிய சாரல் கனமழையாக பெய்ய தொடங்கியது. கந்தன் அந்த சிவன் கோயிலில் இரவு பொழுதை கழித்து விட முடிவு செய்தான்.
இரவு நேரத்தில் சிவன் கோவிலின் உடைந்துபோன தளத்தையும், மேல்புற கூரை பகுதியையும் பார்த்து கந்தன் தன்னிடம் வசதியிருந்தால் இந்த கோவிலினை இப்படி மாற்றி கட்டலாம், அப்படி மாற்றி கட்டலாம் என்று அந்தக் கோவிலுக்கு கற்பனையால் வடிவம் கொடுக்க ஆரம்பித்தான்.
சற்றுநேரத்தில் அசதியில் அப்படியே கந்தன் தூங்கிப் போனான். அடுத்த நாள் காலையில் எழுந்தபோது அவன் அருகில் நாகப்பாம்பு ஒன்று, கோபுரத்திலிருந்து விழுந்த கருங்கல் ஒன்றினால் இறந்து கிடந்தது. கோபுர கல்லும் தன் மேலே விழாது, நாகப்பாம்பும் தன்னை தீண்டாது நிலையை கண்ட கந்தன் அனைத்தும் இறைவனின் கருணை என்று மனதார இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு, ஜோதிடரை பார்த்து விட்டு வீடு திரும்பலாம் என்று ஜோதிடரை பார்க்க சென்றான்.
கந்தனை பார்த்த அந்த ஜோதிடருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது . கந்தனைப் பார்த்ததும் உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று பரபரப்போடு கேட்டார் அந்த ஜோதிடர். அதற்குத் தான் கோவிலில் தங்கி இருந்ததையும், கோபுர கல், நாகப்பாம்பு மீது பட்டு இறந்து கிடந்ததையும் தெளிவாக எடுத்துக் கூற இதில் ஏதோ இறைவனின் அற்புதம் நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டார் அந்த ஜோதிடர்.
கந்தனை பார்த்து உங்களுக்கு நேற்று இரவோடு ஆயுள் முடிந்து விட்டதாக ஜோதிடம் கூறுகின்றது. ஆனால் நீங்கள் தற்பொழுது உயிரோடு இருக்கிறீர்கள் என்றால் ஒன்று நீங்கள் அசுவமேதயாகம் செய்து இருக்க வேண்டும். இல்லை என்றால் சிவன் கோவிலை கட்டி இருக்க வேண்டும் .இதில் ஏதோ ஒன்றினை செய்தால் மட்டுமே என் முன்னால் நீங்கள் உயிரோடு இருக்க முடியும்.
சொல்லுங்கள் நீங்கள் அசுவமேதயாகம் செய்தீர்களா..? அல்லது சிவன் கோவிலை கட்டினார்களா..? என்று பரபரப்போடு கேட்டார் அந்த ஜோதிடர். அதற்கு கந்தன் தான் அசுவமேத யாகம் செய்யவில்லை எனவும் கற்பனையால் அந்த சிவன் கோவிலை கட்டுவதாகக் நினைத்து கொண்டதாகவும் கூறினான்.
கோவிலை கற்பனையால் புதுப்பிக்க நினைத்த உனக்கு இறைவன் தனது அற்புதத்தை காட்டியிருக்கிறார் என்றால் உண்மையாகவே சிவன் கோவில் கட்டினால் ஒருவனுக்கு என்னவெல்லாம் கிடைக்குமோ என்று பயபக்தியோடு இறைவனை வேண்டி நின்றார் அந்த ஜோதிடர்.
பிற்காலத்தில் கந்தன் தனது உழைப்பினால் அந்த கோவிலை சீர்படுத்தி குடமுழுக்கு செய்து ஊருக்கு பயன்படும் அழகான வழிபாட்டுத்தலமாக மாற்றி காட்டினான்.
சிவன் கோயில் கட்டினால் ஆயுள் கூடும் என்பது ஆன்றோர் வாக்கு