“முயற்சி இருக்கும் இடத்தில் அதிசயம் உண்டாகும்..! ” இறைமகன் இயேசுபிரான் உணர்த்திய உன்னத தத்துவம்…..

0
995
    இயேசுபிரான் பூமியில் வாழ்ந்த காலத்தில் அவர் செய்த ஒவ்வொரு செயலிலும் மனிதன் வாழ்வதற்கு தேவையான பல தத்துவங்களை நேரிடையாகவும், மறைமுகமாகவும் நமக்கு உணர்த்தியுள்ளார். 
அதில், நாம் எடுக்கும் முயற்சியில் அதிசயம் உண்டாகும் என்ற தத்துவத்தை முன்னிறுத்திய இரண்டு சம்பவங்களை நாம் இங்கு காணலாம். 
கானாவூர் கல்யாண வீட்டில், கர்த்தர் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய நிகழ்வினை நாம் அனைவரும் அறிந்திருப்போம். கல்யாண வீட்டில் திராட்சை ரசம் தீர்ந்து போய்விட்டது என்று கர்த்தரிடம் கூறப்பட்டபோது கர்த்தர் வெற்று ஜாடிகளில் நீரை நிரப்புங்கள் என்று கூறுவார். 
அதேபோல லாசருவை உயிர்த்தெழச் செய்ய கர்த்தர் சிந்தித்து, அவனை அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்கு சென்றிருக்கும் போது, அருகே இருந்தவர்களிடம் நான் இப்பொழுது லாசருவை உயிர்த்தெழச் செய்ய போகிறேன்; ஆதலால் லாசருவின் கல்லறை மீது இருந்த கல்லை அப்புறப்படுத்துங்கள் என்று கட்டளையிட்டார். 
மேற்கண்ட இரண்டு நிகழ்விலும் நமக்கு ஒரு தத்துவத்தினை உணர்த்துகின்றார் கர்த்தர். கல்யாண வீட்டில் கர்த்தர் வெறும் ஜாடிகளிலேயே திராட்சை இரசத்தை உருவாக்கி இருக்கலாம். ஆனால் வெற்று ஜாடிகளில் மனிதர்களை நீரை நிரப்ப சொன்னார். சகலத்தையும் உருவாக்கிய ஆண்டவரால் வெற்று பாத்திரத்தில் திராட்சை ரசத்தை உருவாக்கி இருக்க முடியாதா..? ஆனால் அங்கு இறைவன் நீரை ஊற்றும் சிறிய முயற்சியை மட்டும் நீங்கள் எடுங்கள்; அதனை திராட்சை ரசமாக மாற்றி அதிசயத்தை நான் உருவாக்குகிறேன் என்ற தத்துவத்தினை முன்னிறுத்துகிறார். 
அதைப்போல லாசருவை உயிர்த்தெழ செய்யும்பொழுது, கல்லறையின் மீது இருந்த கல்லினை அப்புறப்படுத்த சொல்லாமல் கர்த்தர் கல்லறையிலிருந்து லாசருவை நேரிடையாக எழுந்து வர வைத்து இருக்கலாம். சடலத்திற்கு உயிர் கொடுக்க முடிந்த இறைவனால் அந்தக் கல்லை நீக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்..? ஆனால் அங்கு மனிதர்களை பார்த்து கல்லறையின் மீது உள்ள கல்லை எடுக்கும் சிறிய முயற்சியை மட்டும் நீங்கள் எடுங்கள்.. அவரை உயிர்த்தெழச் செய்யும் அதிசயத்தை நான் உருவாக்குகிறேன் என்ற தத்துவத்தினை உணர்த்துகிறார். 
இந்த இரண்டு நிகழ்வின் மூலமாக இறைவன் எங்கெங்கெல்லாம் மனிதனின் முயற்சி இருக்கிறதோ அங்கெல்லாம் அவர் அதிசயத்தை நிகழ்த்துவார் என்ற அடிப்படை தத்துவத்தை நமக்கு உணர்த்தி இருக்கிறார். ஆகவே இனி நம்மால் முடிந்த சிறு சிறு முயற்சிகளை எடுத்து கர்த்தரின் அதிசயத்தோடு வாழ்வில் ஏற்றம் காண்போம்.