திகிலூட்டும் பேய் கதைகள்- 01- இரவு நேரப் பயணம்

0
1159
        நேரம் அப்பொழுது அதிகாலை இரண்டு மணி. அமல் அவசரமாக தன்னுடன் பணியாற்றும் இரண்டு நண்பர்களுடன் சென்னையில் நடக்கவிருக்கும் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக தனது காரில் பயணப்பட்டு கொண்டிருந்தான். 
    லேசான மழை தூரல்களுடன் இதமான காற்று வீச, யாருமற்ற அந்த சாலையில் கார் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. 
அந்த நேரத்தில் சாலையோரத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருப்பதைக் கண்டான் அமல். அதே நேரத்தில் அந்தப் பெண் அமலின் காரினை கைகாட்டி, நிறுத்துமாறு சைகை செய்தது. 
அவசர வேலையாக செல்லும் அமல் சற்று தடுமாற்றத்துடன், தனது காரினை அப்பெண் முன்பு நிறுத்தினான். 
அந்தப் பெண் அமலிடம், தன்னை இந்த இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தனது வீட்டிற்கு முன்பாக இறக்கி விடுமாறு கேட்டுக் கொண்டாள். 
கார் வெளிச்சத்தில் அந்தப் பெண்ணை கவனித்த அமல், தனது நண்பனை முன் இருக்கையில் அமர வைத்துவிட்டு அந்த பெண்ணை பின் இருக்கையில் அமர வைத்தான். 
அந்தப் பெண் மழையில் நனைந்து இருப்பதைக் கண்ட அமல், தன்னிடம் இருந்த டவல் ஒன்றினை கொடுத்து தலையை துவட்டி கொள்ளுமாறு கூறினான். 
அதன் பின்னர் அமல் அந்தப் பெண்ணிடம், அவள் யார் என்பதையும், எதற்காக இந்த நேரத்தில் இங்கே நிற்கிறாள் என்பதையும் அவளிடம் கேட்டான். 
அதற்கு அவள் தான் ஒரு கல்லூரி மாணவி என்றும், கல்லூரி சுற்றுலா முடிந்து வருவதற்கு இவ்வளவு நேரம் ஆயிற்று எனவும் பதிலளித்தாள். 
அதற்குள் அப்பெண் அவளது வீடு வந்ததாக கூற அமல், அவள் கூறிய இடத்தில் காரை நிறுத்தினான். காரிலிருந்து இறங்கிய அந்த பெண் சாலையோரத்தில் தனியாக இருந்த ஒரு வீட்டை நோக்கி சென்றாள். 
அந்த வீட்டினை உற்றுப் பார்த்தபடியே, தனது காரினை மீண்டும் இயக்கினான் அமல். ஒரு பத்து நிமிட பயணத்திற்குள், அலைபேசி மூலம் அவனது கலந்தாய்வு திடீரென கேன்சல் ஆகிவிட்டதாக அறிந்துகொண்டான். நண்பர்களிடம் கலந்தாய்வு கேன்சல் செய்ததை சொல்லிவிட்டு, காரினை மீண்டும் வீட்டை நோக்கி திருப்பினான். 
அப்பொழுது மணி அதிகாலை 2.15. அமைதியான அந்த இரவு நேரத்தில் அவளின் கார் சாலையில் சீறி பாய்ந்தது திரும்பி வரும் வழியில் அந்தப் பெண்ணின் வீட்டினை தூரத்திலிருந்து பார்த்தபடியே வந்தான் அமல். 
அந்த நேரத்தில் அந்தப் பெண்ணிடம் தான் கொடுத்த டவல் நாபகம் வரவே காரினை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு அந்த பெண்ணிடம் டவலை வாங்க முடிவு செய்தான். நண்பர்களிடம் டவலை வாங்கி வருவோம் என்று கூறி, அவர்களையும் அந்த வீட்டை நோக்கி அழைத்துச் சென்றான். 
அந்தப் பெண் நுழைந்த அந்த வீட்டிற்கு முன்பாக சென்று காலிங் பெல்லை அழுத்தினான் அமல். காலிங் பெல் ஓசை கேட்டு யாரோ ஒருவர் கதவினை மெதுவாக திறந்தனர். கதவின் பின்புறத்தில் இருந்து வயதான முதியவர் ஒருவர் வெளியே வந்தார். 
வெளியே வந்த அந்த முதியவர், அவர்களை பார்த்து யார் நீங்கள்..? என்ன வேண்டும்..? என்று கேட்டார். 
அதற்கு அமல், தான் அரை மணி நேரத்திற்கு முன்பாக ஒரு பெண்ணினை இங்கு இறக்கி விட்டதாகவும், அந்த பெண்ணிடம் தனது டவல் இருக்கின்றது என்பதையும் அதை வாங்கிக் கொள்வதற்காக வந்திருப்பதாகவும் கூறினான். 
அதற்கு அந்த பெரியவர் இந்த வீட்டில் பல வருடமாக நான் மட்டும் தான் இருக்கிறேன். இங்கு நீங்கள் சொல்லும் அளவில் யாரும் இல்லை என கூறி கதவை அடைத்துக் கொண்டார். 
நண்பர்களிடம் இந்த வீட்டில்தான் இறக்கி விட்டோம் என சிறிது பேசியபடியே மீண்டும் காலிங் பெல்லை அழுத்தினான் அமல். 
கதவைத்திறந்த பெரியவர் ஆத்திரத்தில் கத்த ஆரம்பித்தார். அந்த நேரத்தில் அமலின் நண்பன் எதையோ வெறித்துப் பார்த்தபடியே, பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்த அமலினை தட்டி பெரியவரின் பின்னால் பார்க்கச் சொன்னான். 
அவன் சுட்டிக்காட்டிய இடத்தை பார்த்த அமலுக்கு பெரும் அதிர்ச்சி. பெரியவருக்கு பின்னால் இருந்த சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு போட்டோவை பார்த்த மூவரும், பயத்தில் கை கால்கள் அசைவின்றி அப்படியே நின்றனர். 
அந்த நேரத்தில் அமல் அந்த பெரியவரிடம், அந்த போட்டோவினை கைகாட்டி, அவள்தான்…. நாங்கள் காரில் இருந்து இறங்கி விட்ட பெண் அவள் தான்… என்று கத்த ஆரம்பித்தான். 
அதற்கு அந்த பெரியவர் இவளா..! இருக்கவே இருக்காது என்ற பெரியவர் , அந்த போட்டோவில் இருப்பது தனது பேத்தி எனவும் அவர் இறந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகின்றது என்றும் கூறினார். 
இதைக் கேட்டதும் அந்த மூவரும் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தனர். அந்த நேரத்தில், அந்த வீட்டின் முன்பாக இருந்த கேட் மெதுவாக தன்னைத்தானே பூட்டிக் கொண்டது. இதை பார்த்த மூவரும் பயத்தில் வீட்டிற்கு பின்புறமாக ஓடத் தொடங்கினர். 
வீட்டிற்குப் பின்புறம் சென்றவர்களுக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் அங்கு ஒரு கல்லறை இருந்தது. அந்த கல்லறையில் அமல் கொடுத்த டவல் அப்படியே கிடந்தது. 
இதை சற்றும் எதிர்பாராத மூவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர். திடீரென்று அந்த சமாதியில் இருந்து ஒரு கை வெளிப்பட மூவரும் பயந்தபடியே அவர்களது காரை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்…… 
முடிந்தது….