திகிலூட்டும் பேய் கதைகள்- 06 -கிணற்றுக்குள் அவள்..!

0
1269
திகிலூட்டும் பேய் கதைகள்- 06 -கிணற்றுக்குள் அவள்..! 
      பல ஆண்டுகளுக்குப் பின் கிராமத்திற்கு வந்திருந்த சிறுவர்கள் இருவரும் அந்த கிராமத்து தோட்டத்து பகுதியில் மகிழ்வோடு சுற்றி திரிந்தார்கள். இறுதியில் அந்த ஊருணி கிணற்றை ஆசையோடு பார்த்தார்கள். எல்லா சிறுவர்கள் போலவும், அவர்களுக்கும் கிணற்றுக் குளியல் மீது அலாதி பிரியம். 
அரைப்பகுதி வரை நீர் மட்டம் கொண்ட அந்த விரிவான கிணற்றில், அந்த சிறுவர்கள் இருவரும் குதித்து நீந்தி மகிழ்ந்தார்கள். சிறிது நேர குளியலுக்குப் பின்னர் இருவரும் தென்னங்குரும்பல் போட்டு விளையாடத் தொடங்கினர். 
ஒரு கட்டத்தில் குறும்பல் தரையை அடையுவே அதை எடுக்க ஒருவன் ஆழம் வரை சென்று நீந்த குறும்பல் என நினைத்து மனித எலும்புபோடு ஒட்டி இருந்த கொலுசு ஒன்றினை எடுத்து வந்தான். 
அந்த எலும்பினை ஏதோ மட்டை என நினைத்து கொலுசினை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த எலும்பினை கிணற்றுக்குள் மீண்டும் வீசினர். கொலுசினை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சிரித்தபடியே மேலே வந்தனர். 
அவர்கள் மேலே வருவதை கண்ட பெரியவர் ஒருவர், அவர்களைப் பார்த்து திகைத்தபடியே “நீங்க ஊருக்கு புதுசா” என்று கேட்டார். 
அதற்கு அந்த சிறுவர்கள், “இவ்வளவு வயதான போதிலும் எங்களை எப்படி வெளியூர்க்காரன்ண்ணு கரெக்டா சொல்றீங்க..? என்று கேட்டார்கள். 
அதற்கு அந்த பெரியவர், “வெளியூர் காரங்க மட்டும்தான் இந்த கிணற்றில் தெரியாம குளித்திருப்பார்கள்; இந்த கிண்ணத்தை பத்தி நல்லாத் தெரிஞ்ச உள்ளூர்க்காரர்கள் இந்தக் கிணற்று பக்கத்தில் கூட வரமாட்டார்கள்” என்று நடுக்கத்தோடு கூற, மீண்டும் கிணற்றை பார்த்தபடியே, “நீங்க உடனே இந்த இடத்தை விட்டு போயிருங்க” என்று கூற சிறுவர்களும் அதை அலட்சியமாக நினைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானார்கள். 
பெரியவர் சென்றதும் அந்த கிணற்றுக்கு ஒரு பெண் தண்ணீர் எடுக்க குடத்தோடு வந்தாள். சிறுவர்களிடம் அவர்களைப் பற்றி விசாரித்துக் கொண்டாள். அந்தப் பெண்ணிடம் அந்த சிறுவர்கள் இருவரும் அந்த கிணற்றை பற்றி கேட்க தொடங்கினர். 
உடனே அந்த இளம் பெண் கிணற்றை பற்றி பற்றி கூற தொடங்கினாள். “ஒரு காலத்தில் இந்த கிணறு ஊருக்கே தண்ணீர் வழங்கும் வரப்பிரசாதமாக இருந்தது. இந்தக் கிணற்றில் அடிப்பகுதியில் சகதி சுழல் ஒன்று இருக்கிறது. அதில் மாட்டிக் கொண்டால் யாரும் உயிர் தப்ப முடியாது. அந்த சுழலில் 5 வருடத்திற்கு முன்பாக ஒரு பெண் மாட்டிக்கொண்டு இறந்து விட்டாள். 
அவளது உடலை கூட அங்கே இருந்து எடுக்க முடியாமல் போய்விட்டது. அவள் இறந்த சில தினங்களில் இந்த கிணற்றை சுற்றி அவளது நடமாட்டம் இருப்பதாக மக்கள் உணரத் தொடங்கினர். ஆதலால் யாரும் இந்த கிணற்றருகே வரமாட்டார்கள்” என்று கூறினாள். 
இதைக் கேட்ட சிறுவர்கள் நக்கலாக சிரித்தபடியே அந்தப் பெண்ணிடம், “நீங்களும் இதெல்லாம் நம்புவீங்களா..? என்று ஏளனத்தோடு கேட்டார்கள். 
அதற்கு அந்த இளம்பெண், “நானும் முதலில் நம்பவில்லை. ஆனால் ஒருமுறை என் அண்ணன் இந்த கிணற்றில் இறங்கி தண்ணீர் குடிக்க தொடங்கி இருக்கிறான். தண்ணீரில் ஏதோ ஒரு பெண்ணின் பிம்பம் தெரிந்திருக்கிறது. உடனே மேலே பார்த்திருக்கிறான். மேலே யாருமில்லை. 
மறுபடி தண்ணீரை பார்த்த பொழுது மீண்டும் பிம்பம் தெரிய, சற்று தயக்கத்தோடு மேலே பார்க்க, மேல யாரும் இல்லை. இப்படியே பல முறை நடந்திருக்கிறது. கடைசியில் அவன் தண்ணீரில் கைகளை விட்ட பொழுது அவன் கண்ணுக்கு முன்பாக ஒரு உருவம் முன்னாடி வந்து நின்றிருக்கிறது. அதை பார்த்து அலறியபடியே பத்து நாட்கள் காய்ச்சலில் இருந்து அதன் பின்னர் எப்படியோ மீண்டு விட்டான்” என்றாள். 
“சொந்த அண்ணனையே அவள் அப்படி பயங்காட்டி இருக்கா என்றால், மற்றவர்களை எல்லாம் விட்டு வைப்பாளா?” என அந்த இளம்பெண் கூற, அந்த சிறுவர்கள் இருவரும், “இந்த அக்கா முதல்ல அவங்க அண்ணன் கிணற்றில் இறங்கி தண்ணீர் குடிக்க போனதா சொன்னாங்க. இப்போ அந்த பேயோட அண்ணனை பயங்காட்டி இருக்கான்னு சொல்றாங்க” என்று குழப்பத்தோடு யோசிக்க தொடங்கினார்கள். 
அப்படி என்றால் அந்த சகதியில் மாட்டி இறந்த இளம் பெண் இவளாக இருக்குமோ..! என்று அந்த சிறுவர்கள் யோசித்த பொழுது….. அந்த இளம்பெண் தன் கொலுசு இல்லாத கால் ஒன்றினை காட்டி “என் கொலுசை தா…” என்று கேட்டபடியே பயங்கரமாக சிரித்தாள். 
இதைக்கேட்டதும் பயத்தில் நடுங்கியபடியே அந்த சிறுவர்கள் கொலுசை போட்டு விட்டு, “தப்பித்தோம்… பிழைத்தோம்..” என அந்த இடத்தை விட்டு ஓட தொடங்கினர்.