வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி: பெண் சிங்கம் உயிரிழப்பு!

0
221

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி: பெண் சிங்கம் உயிரிழப்பு!

உயிரியல் பூங்காவில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் சிங்கம் நீலா உயிரிழந்துள்ளது. மேலும், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் வேகமாக பரவி கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,887 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, கொரோனா 2ஆம் அலை பரவல் காரணமாக கடந்த மாதம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கால வரையறையின்றி மூடப்பட்டது. தொடர்ந்து, பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், வண்டலூர் பூங்காவில் கடந்த மே.26ம் தேதி 5 சிங்கங்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 11 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, உடல்நலக்குறைவால் நீலா என்ற 9 வயது பெண்சிங்கம் உயிரிழந்துள்ளது. இதனால் மற்ற சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் மட்டுமல்லாமல் குரங்கு போன்ற மற்ற விலங்குகளையும் தனிமைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, உயிரியல் பூங்காவில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஐதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சமீபத்தில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, உத்தரபிரதேசத்தில் உள்ள சிங்கங்கள் சரணாலயத்தில் ஒரு பெண் சிங்கத்துக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.