லட்சக்கணக்கான மக்களின் உயிரையும் காப்பாற்றிய கொரோனா… ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வில் தகவல்!

0
330

கொரோனா கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதன் மூலம் சுவாச நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போடுவதே தீர்வு என்பதை ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக உலகின் பல நாடுகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் பாக்டீரியல் தொற்றுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.

நிமோனியா, மூளைக்காய்ச்சல் மற்றும் செப்சிஸ் போன்ற பாக்டீரியா நோய்கள் சமீப காலமாக கொரோனா நோய் தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகளவில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ஆபத்தான பாக்டீரியா நோய்கள் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கொரோனாவை போலவே இந்த தொற்றுகளும் சுவாசப்பாதை வழியாக பரவுகின்றன. மேலும், இந்த பாக்டீரியா தொற்றால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களிடையே இறப்புகள் அதிகமாக இருந்தன .


அனைத்து நாடுகளிலும் கடந்தாண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையே பாக்டீரியா தொற்றுகளின் பரவல் குறைந்துள்ளது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய 2 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, ஒவ்வொரு நாட்டிலும் சராசரியாக 6000க்கும் குறைவான எண்ணிக்கையே பதிவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும், கொரோனா தொற்று காரணமாக விதித்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் 4 வாரங்களில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா தொற்று 68% குறைந்தது. இது 8 வாரங்களில் 82% குறைவு ஆகும். இருப்பினும், Streptococcus Algalactiae காரணமாக ஏற்படும் நோய்த்தொற்றுகள் குறையவில்லை.

மேலும், ஊரடங்கால் மக்கள் ஒரு இடத்தில் கூடுவது தவிர்க்கப்பட்டதன் காரணமாக இவ்வகையான பாக்டீரியா தொற்று பரவல் குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதன் மூலம் இந்த நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போடுவதே தீர்வு என்பதை ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

கொரோனா தொற்றின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்ற நோய்க்கிருமிகள் மற்றும் அதன் தொடர்புடைய நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளன என்பதை இந்த ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இந்த பாக்டீரியாக்களால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நோய்களிலிருந்து பாதுகாப்பதில் பொதுசுகாதார அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசியர் ஏஞ்சலா ப்ரூக்மேன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டும் உயிரிழந்தும் வந்தாலும், வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு பல மனித உயிர்களையும் மட்டுமல்லாது சுற்றுச்சுழலையும் காப்பாற்றி உள்ளது குறிப்பிடதக்கது.