கேரள விருதை திருப்பி அளிக்கும் கவிப்பேரரசு வைரமுத்து|வைரத்தை உரசி பார்க்கவேண்டாம்!

0
89

மலையாள கவிஞரும் பாடலாசிரியருமான ஒஎன்வி குறுப்புவின் பெயரில் உள்ள இலக்கியத்துக்கான விருது (ONV kurup Award) தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த விருது கிடைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக வைரமுத்து கூறியிருந்த நிலையில், அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஒஎன்வி விருதுக்குத் தேர்வான வைரமுத்துவுக்கு அந்த விருது வழங்கப்படுவதற்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்தார். ஒ.என்.வி ஐயா எங்களுடைய பெருமை. ஒரு கவிஞராக, பாடலாசிரியராக அவர் வழங்கிய பங்களிப்பு ஒப்பிடமுடியாதது. அது நமது கலாசாரத்தை எவ்வாறு வளர்த்தது, அவரது உடல் உழைப்பால் நமது இதயமும் மனதும் பயனடைந்தன. பாலியல் தாக்குதல் குற்றங்களில் குற்றம்சாட்டப்பட்டவரின் பெயரில் அத்தகைய விருதை வழங்குவது மிகவும் அவமானத்துக்குரியது, என்று வைரமுத்து -சின்மயி (mee too) விவகாரத்தை சுட்டி நடிகை பார்வதி கூறினார்.

இந்நிலையில் தனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கப் போவதாக வைரமுத்து அறிவித்துள்ளார். விருது மறுபரிசீலனைக்கு காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரது குறுக்கீடே காரணம் என அவர் குற்றச்சாட்டியுள்ளார்.

ஓ. என்.வி இலக்கிய விருதைத் திருப்பித் தருவதாகவும், அந்த பரிசுத்தொகையுடன் கூடுதலாக 2 லட்சம் ரூபாயை போட்டு, கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும், கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது: நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன்.
ஆனால் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப் படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன்.
அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்.
ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்; அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.
ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி. கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.
மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன். தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும்.
இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும். ஊடக உறவுகளுக்கும் என் நன்றி
.

இவ்வாறு வைரமுத்து அவர்கள் தன் உரையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here