கண்களில் கருவளையங்கள் வரக் காரணங்களும் தீர்வுகளும்!

0
297

femina

கருவளையங்கள் வர முக்கியமான காரணங்கள் மூன்று ஊட்டச் சத்துக் குறைபாடு, மரபு வழி, ஸ்ட்ரெஸ் மற்றும் கண்களுக்கு அதிக வேலை கொடுப்பது. காரணத்தைக் கண்டுபிடிக்க ஒரு எளிய டெஸ்ட் உள்ளது. கண்ணாடி முன் நின்று கொண்டு, உங்கள் கண்ணுக்கு அடியிலான பகுதியை லேசாகக் கீழே இழுத்துப் பாருங்கள். உடம்பு சரியில்லை எனப் போனால் மருத்துவர்கள் உங்கள் கண்களை டெஸ்ட் செய்வார்களே, அதே மாதிரிதான். கண்ணுக்குள் பார்க்காமல், கண்ணுக்கடியிலான தோல் பகுதியைப் பாருங்கள். அது வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடுதான் காரணமாக இருக்கும். அதிலும் குறிப்பாக இரும்புச் சத்தும் ஆக்சிஜனும் குறைவாக இருக்கும். கருப்பாக இருந்தால், கருவளையத்துக்கு மரபு வழியோ, ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தமோ காரணமாக இருக்கலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு
ஆரோக்கியம் என நினைத்துக் கொண்டு, வெறுமனே ஓட்ஸாகவோ, கார்ன்ஃப்ளேக்ஸாகவோ சாப்பிடுகிறார்கள். குறிப்பிட்ட ஒரு உணவையே தொடர்ந்து சாப்பிடு கிற போது, உடலுக்குத் தேவையான எல்லா சத்துகளும் கிடைப்பதில்லை. சருமமோ, கூந்தலோ ஆரோக்கியமாக இருக்க, எல்லா சத்துகளும் அவசியம். முந்தைய காலங்களில் கருவளையப் பிரச்னைகளைப் பற்றியெல்லாம் யாரும் கேள்வியே பட்டிருக்க மாட்டார்கள். காரணம், அவர்களது சரிவிகித, சத்தான சாப்பாடுதான்!

கருவளையங்கள் இருப்பது தெரிந்ததும் நீங்களாகவே கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி உபயோகிக்க வேண்டாம். எந்த ஒரு க்ரீமும் மேலோட்டமாகவும் தற்காலிகமாகவும் உங்கள் பிரச்னையை சரி செய்யுமே தவிர, நிரந்தரத் தீர்வைத் தராது. முதல் வேலையாக ரத்தப் பரிசோதனை – அதில் ஹீமோகுளோபின், இரும்புச்சத்து அளவுகளை தனித் தனியே சரிபார்க்க வேண்டும். சிலருக்கு கருவளையங்களுடன் சேர்ந்து, கண்களுக்கடியில் சுருக்கங்களும் இருந்தால், அவர்கள் ரத்தத்தில் புரதத்தின் அளவையும் சரிபார்க்க வேண்டும். குறைபாட்டின் அளவு தெரிந்து, அதற்கேற்ப உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி, உணவு மற்றும் சப்ளிமென்ட் என இரண்டின் மூலமும் சத்துகள் உடலுக்குள் சேரும்போது, பிரச்னை சீக்கிரமே சரியாகும்.

என்னென்ன உணவுகள் உதவும்?
ப்ளூபெர்ரி, பசலைக்கீரை, பீர்க்கங்காய், சிவப்பு முளைக்கீரை, காளான், உலர்ந்த திராட்சை, பன்னீர் திராட்சை, சப்போட்டா, அவகேடோ, கொய்யா, கொள்ளு, குதிரைவாலி அரிசி, கருப்பு உளுந்து, ராஜ்மா, ஆட்டீரல், காட்டு சீரகம் (வைல்ட் கியூமின்), சீஸ் – இவை அத்தனையும் கருவளையங்களை விரட்டும் சக்தி கொண்டவை.

மரபு வழியால் வந்திருந்தால்?
அம்மா, அப்பாவுக்கு கருவளையங்களே இல்லாமல் இருக்கலாம். ஆனால், உங்களுக்கு இருக்கும். ஆண் குழந்தைகளாக இருந்தால் அவர்களது அப்பா அல்லது தாய்மாமாவுக்கு கருவளையங்கள் இருந்தாலும், பெண் குழந்தைகளாக இருந்தால் அம்மா அல்லது அத்தைக்கு கருவளையம் இருந்தாலும் அது மரபு வழியே வரும். பொதுவாக மரபு வழிப் பிரச்னைகளை சரியாக்குவது சிரமம். ஆனாலும், நவீன மருத்துவ முன்னேற்றத்தில் அவற்றுக்கும் தீர்வுகள் உண்டு.

மரபுவழி கரு வளையம் எனத் தெரிந்தால், ஆரம்ப நிலையிலேயே அதைக் கண்டறிந்து, சிகிச்சை மற்றும் உணவு முறையின் மூலம் சரி செய்யலாம். மேலே சொன்ன உணவுகளை இவர்கள் இன்னும் சற்று அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மரபு வழியில் பிரச்னைகள் இருக்கும் போது, உணவிலோ, பராமரிப்பிலோ சின்ன அலட்சியம் வந்தாலும், அதுதான் சாக்கு என கருவளையம் எட்டிப் பார்க்கும்.

femina

தீர்வுகள்

* உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரியில் உள்ள ஸ்டார்ச் கருவளையங்களுக்கு மிக நல்ல மருந்து. அவற்றை நறுக்கிய உடனேயே கண்களின் மேல் வைத்துக் கொண்டால்தான் பலன்.

* உபயோகித்த டீ பைகளை கண்களின் மேல் வைப்பது முழுமையான பலன் தராது. திக்கான டீ டிகாக்ஷனை எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். அதில் பேப்பர் மாதிரி மெலிதாக வெட்டிய பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக்கொண்டு 5 முதல் 7 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். கிரீன் டீயாக இருந்தால் இன்னும் சிறப்பு.

* கார்போக அரிசி, கருஞ்சீரகத்தை தலா 2 டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் நன்கு வேக வைக்கவும். அது ஆறியதும் அதில் 10 மி.லி. சுத்தமான பன்னீர் கலந்து, அப்படியே 3 மணி நேரம் வைக்கவும். பிறகு வடிகட்டி. பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைக்கவும். உடனடியாக ஒரு போட்டோ செஷனுக்கு தயாராக வேண்டும், வெளியே பார்ட்டிக்கு போக வேண்டும், கருவளையங்கள் தெரியக்கூடாது என நினைக்கும் போது இந்த சிகிச்சை இன்ஸ்டன்ட் பலன் தரும்.

* 2 கைப்பிடி சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவும். 100 மி.லி. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் இந்தப் பூக்களைப் போட்டு, உடனே மூடி வைக்கவும். 24 மணி நேரம் அப்படியே ஊறட்டும். பிறகு அந்தத் தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு, அவ்வப்போது பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் கூட விரட்டும். அதிக எண்ணெய் பசையை நீக்கும்.

* பிங்க் நிற தாமரைப்பூ இதழ்களை மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைக்கவும். அதில் 10 மி.லி. விளக்கெண்ணெயும், 10 மி.லி. தேனும் கலந்து 7 மணி நேரம் வெளியே வைக்கவும். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, கண்களைச் சுற்றி பேக் போலத் தடவி, 1 மணி நேரம் கழித்துக் கழுவவும்.

* முள்ளங்கிச் சாறு, கேரட் சாறு, பீட்ரூட் சாறு (தண்ணீர் விடாமல் அரைத்துப் பிழிந்தது) இந்த மூன்றையும் கலந்து, 5 மி.லி. கிளிசரினும் 5 மி.லி. எலுமிச்சைச் சாறும் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது பஞ்சில் நனைத்துக் கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம்.

பார்லரில் என்ன செய்யலாம்?

பைட்டோதெரபி என்ற சிகிச்சை எத்தனை ஆழமான கருவளையங்களையும் போக்கும். கண்களுக்கு உகந்த தாவரங்களின் சாரங்களைக் கொண்டு செய்யப்படுகிற இந்த சிகிச்சையில் லோட்டஸ், கேமமைல், பெர்கமாட், ஜெரேனியம், யிலாங் யிலாங், சைப்ரஸ், ஃபிரான்கின்சென்ஸ் உள்ளிட்ட அரோமா ஆயில்களின் கலவை அடங்கியிருக்கின்றன. பொதுவாகவே அரோமா ஆயில்களுக்கு சருமத்தின் 2வது அடுக்கு வரை ஊடுருவும் சக்தி உண்டு. கருவளையமானது சருமத்தின் 2வது அடுக்கு வரை பரவியிருந்தால், இந்த சிகிச்சை வெறும் இரண்டே நாட்களில் 70 சதவிகித அளவுக்குப் பலனைக் காட்டும்.