வாட்ஸ்அப் மெசேஜ்களை வேவு பார்க்கிறதா மத்திய அரசு? மூன்று ‘ப்ளூ டிக்’ உண்மையா?

0
504

மத்திய அரசு உங்கள் மெசேஜை படித்தால் அதில் மூன்று டிக் இருக்கும். அதோடு இரண்டு ப்ளூ டிக், ஒரு ரெட் டிக் இருந்தால் அரசு உங்கள் மெசேஜை குறிப்பெடுத்துக்கொண்டது என்றும், மூன்று ரெட் டிக் இருந்தால் உங்கள் மெசேஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் பரவி வருகிறது.

Fact check: வாட்ஸ்அப் மெசேஜ்களை வேவு பார்க்கிறதா மத்திய அரசு? மூன்று  ‘ப்ளூ டிக்’ உண்மையா?

வாட்ஸ் அப் பயனாளர்களின் மெசேஜ் மற்றும் கால்களை மத்திய அரசு வேவு பார்ப்பதாக தகவல்கள் பரவிவரும் நிலையில், இது உண்மையா பொய்யா என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அந்த தகவலில், புதிய தொலைத்தொடர்பு விதிகளில்படி வாட்ஸ் அப் அழைப்புகள், வீடியோ அழைப்புகள் போன்றவை ரெக்கார்டு செய்யப்படும், ரெக்கார்டு செய்யப்படும் அனைத்து அழைப்புகளும் சேமிக்கப்படும், வாட்ஸ் அப், டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்படும்.

நம்முடைய செல்போன், மத்திய அமைச்சகத்துடன் இணைக்கப்படும். எனவே,  மத்திய அரசுக்கு எதிராகவோ, பிரதமருக்கு எதிராகவோ தவறான தகவல்களை பகிர வேண்டாம். அரசியல், மதத் தொடர்பான தவறான தகவல்களை பகிர்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு பகிர்வது வாரண்ட் இல்லாமல் கைது செய்வதற்கு இட்டு செல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், வாட்ஸ் அப்பில் ஒருவர் அனுப்பும் தகவல் படிக்கப்பட்டுவிட்டது என்பதை உறுதிப்படுத்த  இரண்டு ப்ளூ டிக் உள்ள நிலையில், மூன்றாவது ஒரு டிக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு உங்கள் மெசேஜை படித்தால் அதில் மூன்று டிக் இருக்கும். அதோடு இரண்டு ப்ளூ டிக், ஒரு ரெட் டிக் இருந்தால் அரசு உங்கள் மெசேஜை குறிப்பெடுத்துக்கொண்டது என்றும், மூன்று ரெட் டிக் இருந்தால் உங்கள் மெசேஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது

சமூக ஊடகங்களில் பரவும் தகவல் உண்மையா?

வாட்ஸ் அப் பாதுகாப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் உண்மையா பொய்யா என்பதை பார்ப்பதற்கு முன்பு, மற்றொரு தகவலை நாம் அறிந்துகொள்வது அவசியமாகும். ஓ.டி.டி. தளங்கள் உட்பட அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒழுங்குமுறை விதிகளை கடந்த  பிப்ரவரி மாதம் மத்திய அரசு வெளியிட்டது.

அதன்படி, ஒரு தகவலை முதன்முதலில் அனுப்பியவர் யார் என்ற விவரத்தை மத்திய அரசு கோரினால் வழங்க வேண்டும், குறை தீர்ப்பு அலுவலர்களை இந்தியாவில் நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தங்களது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிரானது என கூறி வாட்ஸ் அப்  நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில்தான், மத்திய அரசின் புதிய விதிகள் என்ற பெயரில் மேற்கூறிய தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. புதிய விதிகள் குறித்த தெளிவில்லாத சிலரும் இதனை வேகமாக பகிர்ந்து வருகின்றனர். எனவே, வாட்ஸ் அப் கால்கள் வேவு பார்க்கப்படுவதாகவும், மூன்று ப்ளூ டிக் என்றும் பரவும் தகவல் முழுக்க முழுக்க தவறான தகவல் ஆகும்.

இந்த தகவல் பரப்பப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த ஆண்டே இது போன்ற தகவல் பரப்பப்பட்டது. அப்போதே இது தவறான தகவல் என்று மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் அலுவலகம்( Press information bureau) தெளிவுப்படுத்தியது. வாட்ஸ் அப் பயனாளர்கள் இடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்தவே இதுபோன்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.