கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை தொற்றுக்கு ஆளான முதல்நபர் – மருத்துவர்கள் அதிர்ச்சி.. அறிகுறிகள் என்ன?

0
263

கருப்பு, வெள்ளை பூஞ்சை நோய்களை போலவே இந்த மஞ்சள் பூஞ்சை மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை தொற்றுக்கு ஆளான முதல்நபர் - மருத்துவர்கள் அதிர்ச்சி.. அறிகுறிகள் என்ன?

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து மீண்ட சிலருக்கு கருப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை நோயால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா தொற்றுக்கு அளிக்கும் ஸ்டெராய்ட் காரணமாக நோய் தாக்குதல் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் மஞ்சள் பூஞ்சை நோயின் தாக்கமும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கருப்பு, வெள்ளை பூஞ்சை நோய்களை போலவே இந்த மஞ்சள் பூஞ்சை மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் கருப்பு, வெள்ளை, மஞ்சள் என மூன்று பூஞ்சை நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுதொடர்பாக மருத்துவர் தியாகி கூறுகையில், “சஞ்சய் நகரை சேர்ந்த 45 வயது நபர் கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை நோய் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மஞ்சள் பூஞ்சை தொற்றின் அறிகுறிகள், உடல் சோர்வு, பசி எடுக்காமல் இருத்தல் படிப்படியாக உடல் எடை குறைதல் ஆகியவை ஆகும்.


உடலில் ஏற்படும் புண்களில் இருந்து சீழ் வடிதல், காயம் மெதுவாக குணமடைதல், பார்வை மங்குதல், உடல் உறுப்புகள் செயல் இழத்தல் போன்றவை தீவிரத்தன்மையைச் சுட்டிக்காட்டும்.மஞ்சள் பூஞ்சை நோயும் உயிருக்கு ஆபத்தானது. இதன் அறிகுறிகள் வந்தவுடனே அதை கவனித்து சிகிச்சையளிக்க வேண்டும். பலரும் இதன் அறிகுறி தெரியாமல் நோய் முற்றியபின்புதான் சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்த நோய்க்கு ஆம்போடெரசின்-பி மருந்து செலுத்த வேண்டும்.” என்றார்.

மேலும், வீட்டை சுத்தமாக வைத்திருங்கள், பழைய உணவுகளை பயன்படுத்தாதீர்கள். வீட்டில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் அதிகமாக ஈரப்பதம் இருந்தால் அவை நுண்ணுயிரிகளாக பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் வளர்வதற்கு சாதகமான சூழலாக அமைந்துவிடும். கொரோனா நோயாளிகள் இந்த மஞ்சள் பூஞ்சை போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்காதபடி மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும்’ என்றார்.

இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பேசுகையில், “ கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இப்போது தான் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக அவரது முகத்தில் ஒரு பக்கம் வீக்கம் காணப்படுகிறது. அவரால் கண்களை திறக்க முடியவில்லை. மூக்கில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. அதன்பின்னர் சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வெளியேறியது இதனையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மஞ்சள் பூஞ்சை நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளார்” என்றனர்