இந்த தமிழ் புத்தாண்டில் 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும்?

0
919

.

தமிழ் புத்தாண்டு 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்? அனைத்து ராசியினருக்குமான துல்லிய கணிப்பு! சித்திரை 1 ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. சார்வரி வருடம் முடிந்து ஸ்ரீ பிலவ வருடம் ஆரம்பமாகிறது. செவ்வாய் பகவான் பிலவ வருடத்தில் சஞ்சாரம் செய்வதால் மழைக்கு பஞ்சம் இருக்காது என்று பஞ்சாங்கம் கணிப்பு தெரிவித்துள்ளது. நீரின்றி அமையாது உலகு என்பதற்கு இணங்க இவ்வருடம் செழிப்புடன் இருக்க பிரார்த்திப்போம்! பிலவ வருடம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்? இவ்வருடம் உங்களுக்கு என்னென்ன பலன்களை கொடுக்க போகிறது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள் 1.மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இவ்வருடம் நல்ல பலன்களை பெற இருக்கிறீர்கள். செப்டம்பர் மாதம் வரை குரு பகவான் உங்கள் ராசியில் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் தொழில், வியாபாரம் செழிக்கும். தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான காலமாக அமையும். வேலை தேடி அலைபவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வேலை அமையும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். தடைப்பட்டுக் கொண்டிருந்த சுபகாரிய முயற்சிகள் தடையில்லாமல் நடைபெறும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள் வலுவாகும். பணியில் ஓய்வு கிடைப்பது குறைவதால் உடல் சோர்வு ஏற்படும். சரியான திட்டமிடலுடன் பயணிக்கும் பொழுது இவ்வருடம் உங்களுக்கு ராசியான வருடமாக இருக்கும். 2.ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாக இருக்கும். யாரையும் நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பது, ஜாமீன் கையெழுத்து போடுவது, தெரியாத இடங்களில் கடன் வாங்குவது போன்ற விஷயங்களை செய்யக்கூடாது. தொழில் மற்றும் வியாபார விருத்தி பன்மடங்கு பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற விஷயங்களில் எதிர்பார்க்கும் சாதக பலன்கள் உண்டு. கணவன்-மனைவிக்குள் சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்புகள் ஒன்றுமில்லை. சுபகாரிய முயற்சிகளில் முருகப் பெருமானை வணங்கிவிட்டு ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். 3.மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் நல்ல ஆண்டாக அமைய இருக்கிறது. இதுவரை நீங்கள் பட்ட துன்பங்களுக்கு எல்லாம் விமோசனம் கிடைக்கும். செப்டம்பர் மாதம் முடியும் முன்னரே சுபகாரிய முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது. குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்பார்கள். உங்கள் ராசிக்கு குருவின் சுபப் பார்வை இருப்பதால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது மிகவும் நல்லது. செப்டம்பர் மாதத்திற்கு பிறகு உடல்நலத்தில் அக்கறை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பெரிய தொகையை ஈடுபடுத்தும் பொழுது அதிகம் யோசிப்பது உத்தமம். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்காமல் ஆலோசனை செய்து விட்டு எடுப்பது முன்னேற்றம் தரும். 4.கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் சிறப்பான வருடமாக அமைந்தாலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியமாகும். உங்கள் மீது மற்றவர்களுக்கு இருந்து வந்த போட்டி, பொறாமைகள் குறையும். ஆரோக்கியத்தில் அதிக நாட்டம் செலுத்துவது நல்லது. உணவு கட்டுப்பாடு விஷயத்தில் கவனமாக இருப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் குறித்த விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். கணவன்-மனைவிக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி ஒருவரை ஒருவர் பரஸ்பர அன்போடு புரிந்து கொள்வீர்கள். குல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். 5.சிம்மம் 
சிம்ம ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் யோக பலன்களை பெறலாம். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த கவலைகள் நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். முடியவே முடியாது என்று நினைக்கும் சில விஷயங்களை முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களுடைய பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை உருவாகும். பெரியவர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கப் பெறும். பொருளாதாரத்தில் ஏற்றமான சூழ்நிலை இருப்பதால் பணப் புழக்கத்தில் குறைவிருக்காது. 6.கன்னி
கன்னி கன்னி ராசிக்ககாரர்களுக்கு இவ்வாண்டு சுப காரிய செலவுகள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளாவிட்டால் தேவையில்லாத கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும். மேலும் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் விஷயத்தில் சாதகப் பலன் உண்டு. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர சகல நன்மைகளும் உண்டாகும். 7.துலாம் 
துலாம் ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் சனி பகவானுடைய பாதிப்பு அவ்வளவாக பெரிய பாதிப்புகளை உண்டாக்கப் போவதில்லை. மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் யோகம் உண்டாகும். குரு பார்வை உங்கள் மீது பதிவதால் சுபகாரிய முயற்சிகளில் அமோக வெற்றி பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய முதலீடுகள் செய்யும் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் தங்கள் வேலையில் கவனம் செலுத்துவது உத்தமம். பெரிய தொகையை கடனாகக் கொடுக்க முன் ஆலோசனை செய்து விட்டு கொடுப்பது நல்லது. நீங்கள் எடுக்கும் முடிவுகளில் விநாயகப் பெருமானை வழிபட்டு வாருங்கள். சனிதோஷம் நீங்க சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம். 8.விருச்சிகம் 
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த கடன் சுமைகள் நீங்கி பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் இடமாற்றம் போன்றவை ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை தலைவலியை கொடுத்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக செல்வது உத்தமம். தேவையில்லாத வீண் பேச்சுகளை குறைத்துக் கொள்ளாவிட்டால் மன அமைதி கிடைப்பதில் இடையூறு ஏற்படும். வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வர பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும். 9.தனுசு 
தனுசு ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் சனியின் ஆதிக்கத்தில் இருந்து முழுவதுமாக விடுபட இருப்பதால் கடைசி கட்ட பிரச்சினைகளை சந்திப்பீர்கள். இதுவரை உங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த இன்னல்கள் யாவும் இனி தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை நீங்கி சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். உங்கள் உடன் பணிபுரிபவர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் கொடுத்து வந்த விடா முயற்சிகளுக்கு உரிய பலன்களை அனுபவிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். பெண்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். இவ்வருடம் சிறப்பாக அமைய சிவ வழிபாடு மேற்கொள்ளுங்கள். 10. மகரம் 
மகர ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் பொருளாதார நிலையில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் அமோகமான பலன்களை பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். நீண்ட நாள் நண்பர்களை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையப் பெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். சேமிப்பின் முக்கியத்துவம் அறிந்து செயல்படுவீர்கள். 11.கும்பம் 
கும்ப ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் சனி பகவான் உங்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தாலும் திடீர் யோகம் உண்டாகும். எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்பாராத பண வரவு உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த கஷ்ட நிலை நீங்கி பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நினைத்ததை சாதிக்க கூடிய உங்களுடைய ராசிக்கு இவ்வருடம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். 12.மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இவ்வருடம் சிறப்பான வருடமாக அமைய இருக்கிறது. குறுக்கு வழியில் யோசிப்பதை நிறுத்திவிட்டு நேர்வழியில் சிந்திக்கத் தொடங்கினால் வெற்றி நிச்சயம். சுப காரிய முயற்சிகளில் தடைகள் இருந்து வந்த நிலையில் அவைகள் தகர்த்து எறிந்து முன்னேற்றத்தை காணலாம். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கூடுதல் பொறுப்பு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி அவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டு. எதிலும் நிதானத்துடன் செயல்பட்டால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் வீசும்.