தன்னம்பிக்கை கதை – சொல்லி அடித்த சச்சின்

0
3800
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல் 
        இக்குறளின் படி, சொல்லுவது எளிது. சொல்லிய வண்ணம் செயலை செய்யும் ஆற்றல் உடையவர்கள் ஒரு சிலரே. அந்த ஒரு சிலரில் சச்சினும் ஒருவர் என்பதற்கு பின்வரும் சம்பவமே சாட்சியாக எடுத்துக் கொள்ளலாம 2007இல் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பலத்த ஆரவாரத்திற்கு மத்தியில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பேட் செய்து 290 ரன்கள் எடுத்திருந்தது. 
       291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆட்டத்தைத் துவங்கியது இந்தியா. ஆட்டத்தின் 24வது ஓவரை வீச வந்தார் அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் பிராட் ஹாக். அந்த ஓவரின் கடைசி பந்தில் சச்சின் கிளீன் போல்டானார். 
      சச்சினை அவுட் செய்த மகிழ்ச்சியில், ஹாக் துள்ளி குதித்து ஆர்ப்பரித்த படியே பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த சச்சினை வெறுப் பூட்டினார். அதன் பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 243 ரன்கள் எடுத்து தோற்றுப்போனது. 
        பிராட் ஹாக் எப்பொழுதும் அவுட் செய்தவரிடம் ஆட்டோகிராப் வாங்கும் ஒரு பழக்கத்தை வைத்திருந்தார். அதேபோல் சச்சினை அவுட் ஆக்கியதால், அவரிடம் சென்று ஆட்டோகிராஃப் வாங்க முடிவு செய்து ஹாக் அவரது அறைக்கு சென்றிருந்தார். 
         சச்சின் இடத்தில் நாமாக இருந்திருந்தால் கிரவுண்டில் வெறுப் பூட்டியதற்கு கதவை பூட்டி நாலு சாத்து கூட சாத்தி இருப்போம். ஆனால் சச்சின் புன்னகையோடு அவரை வரவேற்றார். சிறிது நேர உரையாடலுக்கு பின்னர் ஹாக் தனது ஆட்டோகிராப் வாங்கும் பழக்கத்தை பற்றி சச்சினிடம் பேசி அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டார். 
         சச்சின், ஆட்டோகிராப் விடும்போது சிரித்துக்கொண்டே ” This will never happen again hoggy” என்று கூறினார். அதாவது “இந்த வாய்ப்பு மீண்டும் ஒருமுறை அமையாது” என்றார். ஹாக் சிரித்தபடியே அறையை விட்டு வெளியேறினார். 
      இந்த சம்பவத்திற்கு பின்னர் பல ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்த பொழுதும் சச்சின் சொன்னபடியே, ஒருமுறைகூட ஹாக் பந்து வீச்சில் அவுட் ஆகவில்லை. ஆட்டோகிராப் வாங்கும் வாய்ப்பும் கிடைக்காமல் போனது. 
        இந்த சம்பவம் மூலமாக, சச்சினிடம் இருந்து நாம், தன்னம்பிக்கை, சவால் விடும் தன்மை, எதிரியிடம் நடந்துகொள்ளும் தன்மை, அமைதி, நிதானம் , சொல்வதை முடிக்கும் திறன் போன்ற பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். 
இச்சம்பவம் பிராட் ஹாக் எழுதிய சுயசரிதை நூலில் இருந்து எடுக்கப்பட்டது.