ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் அமீரகத்துக்கு மாற்றம்: எப்போது தொடங்குகிறது?

0
280

இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல் போட்டிகள் கடந்த ஏப்ரல் 9ம் தேதி தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக அஸ்வின் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பாதியிலேயே போட்டியில் இருந்து விலகினர்

ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் அமீரகத்துக்கு மாற்றம்: எப்போது தொடங்குகிறது?

நடப்பு ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

இந்திய பிரிமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல் போட்டிகள் கடந்த ஏப்ரல் 9ம் தேதி தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக அஸ்வின் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பாதியிலேயே போட்டியில் இருந்து விலகினர்.

மேலும், சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல் போட்டிகளை தற்காலிகமாக ரத்து செய்தது.  ஐ.பி.எல். போட்டியை நடத்தாமல் போனால் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்பதால், கொரோனா பரவலுக்கு இடையே எவ்வாறு போட்டியை நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கடந்த ஆண்டை போன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடத்தப்படலாம் என்றும் தகவல் வெளியானது. ஐபிஎல் போட்டியை நடத்துவது தொடர்பாக பி.சி.சி.ஐ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், நடப்பு ஆண்டில் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஏ.என்.ஐ. ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  பி.சி.சி.ஐ.யின் சிறப்பு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

31 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் போட்டியை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதேபோல், இந்தியாவில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.