ஆசிரியர் ராஜகோபலனை 14 நாட்கள் சிறையிலடைக்க உத்தரவு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை கே.கே.நகரில் செயல்படும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. மாணவிகளிடம் அநாகரிகமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப்பில் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் மாணவிகள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பாடகி சின்மயி, நடிகை லட்சுமி பிரியா ஆகியோரும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். இதனால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. மேலும், பாலியல் புகாருக்கு உள்ளான ஆசிரியர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து, பள்ளிக்கு சென்ற சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, பள்ளி முதல்வர் மற்றும் தாளாளரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து, நங்கநல்லூரில் வசிக்கும் ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்த, சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்திய சூழலில், அவரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
மேலும், ராஜகோபாலனின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரது மனைவி, தாய் ஆகியோரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். வீட்டில் இருந்த ராஜகோபாலனின் லேப்டாப்பையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், பத்மா சேஷாத்ரி பால பவன்பள்ளி நிர்வாகத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று, பள்ளி அறங்காவலர் குழுவில் மட்டுமே தான் இருப்பதாகவும் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார். பத்ம சேஷாத்ரி பள்ளி பாலியல் தொந்தரவு விவகாரத்தில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், கடந்த 5 ஆண்டுகளாக இதே போன்று பிளஸ் ஒன் மற்றும் பிளஸ்-டூ மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மாணவிகளின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு வாட்ஸ்அப் மூலமாக அவர்களிடம் சேட் செய்வது மாணவிகளின் அந்தரங்க புகைப்படத்தை அனுப்ப நிர்பந்திப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்ததையும், தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். வணிகவியல் பாடத்தில் மேல்நிலை பள்ளி ஆசிரியராக கடந்த 27 ஆண்டுகள் பத்மா சேஷாத்திரி பள்ளியில் வேலை பார்த்து வருகிறார் ராஜகோபாலன்,
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் உஷாராகி, தன்னுடைய செல்போனில் உள்ள ஏராளமான மாணவிகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் அவர்களுடன் பேசிய அந்தரங்க சேட் ஆகியவற்றை டெலிட் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சில ஆசிரியர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என ராஜகோபால் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், ஆசிரியர் ராஜகோபலன் மீது போக்சோ சட்டப்பிரிவு, 354(ஏ)- பாலியல் தொல்லை, தொழில் நுட்ப சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியர் ராஜகோபலன்
போக்சோ பிரிவு , தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், ராஜகோபாலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- சென்னையில் ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியரை, 14 நாட்கள் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- சென்னை கே.கேநகரில் உள்ள PSBB பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பில், ராஜகோபாலன் எனும் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரது செல்போன் மற்றும் லேப்டாப்பை பறிமுதல் செய்தனர். விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு, பாலியல் ரீதியிலான குறுஞ்செய்திகளை அனுப்புவது, போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
- இதனிடையே, முன்னாள் மாணவி அளித்த புகாரின் பேரில், போக்சோ, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், ராஜகோபாலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மகிளா நீதிமன்ற நீதிபதி, முகமது ஃபாருக் வீட்டில் இன்று காலை நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
- அங்கு ராஜகோபாலனை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னதாக ராஜகோபாலனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.