சோப்புத்தாள் சிறுகதை

0
41

B.Ed முடித்து புதிதாக வேலைக்குச் சேர்ந்த அந்த முதல் வாரம், என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

நான் வேலைக்குச் சேர்ந்த அந்தத் தனியார் பள்ளி, என் ஊரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் இருந்தது. தினமும் அலைவது கஷ்டம் என்பதால், பள்ளிக்குச் சொந்தமான ஹாஸ்டலிலேயே தங்கி, காலியாக இருந்த ‘வார்டன்’ பதவியையும் சேர்த்துப் பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தேன்.

வியாழக்கிழமை தான் பள்ளியில் சேர்ந்தேன். அந்த ஹாஸ்டல் பிரதான சாலையில் சுமார் 2 கி.மீ சுற்றளவுக்கு ஒரு வீடு கூட இல்லாத ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில் தனியாக இருந்தது. மாடியில் எனக்கான அறை ஒதுக்கப்பட்டிருந்தது. பகலில் மாடியிலிருந்து பார்த்தால் இயற்கை அழகு அள்ளும்!

முதல் நாள் இரவு மாணவர்கள் இருந்ததால் ஏதும் தெரியவில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை மாலை மாணவர்கள் அனைவரும் ஊருக்குக் கிளம்பிவிட, அந்தப் பெரிய கட்டிடத்தில் நான் மட்டும் தனியாகச் மாட்டிக்கொண்டேன்.

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது துணிகளுக்கு சோப்பு போடலாம் என்று நினைத்தேன். சரி சோப்பு மட்டும் வாங்கி வரலாம் என்று நினைத்து பைக்கை எடுத்துக்கொண்டு 2 கி.மீ தள்ளி இருந்த ஒரு சின்னக் கடைக்குச் சென்றேன். அங்கே தான் என் பயத்தின் முதல் அத்தியாயம் தொடங்கியது.

கடையில் இருந்த அந்த வயதான பெரியவர் என்னை ஒரு மாதிரி ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “தம்பி… அந்த காட்டு ஹாஸ்டல்ல தனியாவா தங்கியிருக்கே? உனக்கு ஒன்னும் தெரியலையா?” என்று பீதியைக் கிளப்பினார்.

“என்ன பெரியவரே சொல்றீங்க?” என்று நான் கேட்க…

“அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உன் ஹாஸ்டலுக்கு முன்னாடி இருக்குற மரத்துல பஸ் மோதி 21 பேரு கொடூரமா செத்துப் போனாங்க தம்பி! அப்புறம் அந்த ஹாஸ்டல் கிணத்துக்கிட்ட மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு அம்மாவை புதைச்சாங்க… அவங்க யாரும் உன் கண்ணுக்குத் தெரியலையா?” என்று குண்டைத் தூக்கிப்போட்டார்.

எனக்குத் தூக்கி வாரிப்போட்டது! இயற்கையிலேயே நான் காஞ்சனா லாரன்ஸ் மாதிரி; இரவில் படுக்கும் முன் படுக்கையை சுற்றி விபூதி தூவிவிட்டுப் படுக்கும் அளவுக்கு தைரியமானவன்! அப்படிப்பட்ட என்னை அந்த பெரியவரின் வார்த்தைகள் அப்படியே உலுக்கி எடுத்தன.

பயந்தபடியே ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்தேன். அவர் சொன்னது எதுவுமே அப்புறம் ஞாபகம் இல்லாததால், வழக்கமான வேலைகளை செய்து முடித்தேன். “சரி, துணி துவைப்போம் என்று நினைத்து, துணிகளை ஊற வைத்தேன். பின்னர் செல்போனில் இளையராஜா பாடல்களை ஒலிக்க செய்து துணிகளை துவைக்க ஆரம்பித்தேன். “மாலையில் யாரோ மனதோடு பேச” என்ற சொர்ணலதாவின் இனிமையான குரலில் பாடலை கேட்டுக்கொண்டே துணிகளை துவைத்து கொண்டிருந்தேன்.

சோப்பு போட்டுத் துவைக்க ஆரம்பிக்கும் போது… திடீரென அடர்த்தியான மல்லிகைப் பூ வாசனை வீசியது!

நடுநிசி 10 மணிக்கு மேல், காட்டுக்கு நடுவில் மல்லிகைப் பூ வாசனையா? என் தலைமுடி எல்லாம் சிலிர்த்துக் கொண்டது! லேசாக நடுங்கியபடியே வெளியே வந்து டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தேன். யாருமில்லை.

மறுபடியும் உள்ளே வந்து துவைக்கத் தொடங்கினால், வாசனை இன்னும் அதிகரித்தது! என்ன செய்வது என்று தெரியவில்லை… பயத்தின் உச்சத்திற்கே சென்ற நான், மாடியிலிருந்து டார்ச் அடித்துப் பார்த்தேன். எதேச்சையாக அந்த டார்ச் வெளிச்சம் பிரதான சாலையின் மரத்தின் மீது பட்டது. அவ்வளவுதான்… “அவங்க உன் கண்ணுக்குத் தெரியலையா?” என்ற பெரியவரின் குரல் ரீங்காரமிட்டது!

“ஐயோ!” என அலறியடித்துக்கொண்டு அறைக்குள் ஓடி கதவைப் பூட்டினேன். அறை முழுவதும் மல்லிகைப் பூ வாசனை அப்படியே ஆக்கிரமித்திருந்தது!

அந்த வாசனையை நுகர்ந்த அடுத்த கணமே, எனக்கு சந்திரமுகி படத்தில் பேய் இருக்கா இல்லையா, பேய் வருவதற்கான அறிகுறிகள் என்னவென்று வடிவேலு கேட்கும் போது ரஜினிகாந்த் சொல்லும் அந்த காட்சிகள்தான் ஞாபகத்திற்கு வந்தன! “காற்றில் திடீரென மல்லிகைப் பூ வாசனை வரும்… தூரத்தில் நாய் ஊளையிடும்… பின்னர் கதவு படபடவென தட்டும்… காற்றில் ஏதோ ஒரு வெள்ளையான உருவம் மிதப்பது போலத் தெரியும்…” என்று அவர் விவரித்த அத்தனை அறிகுறிகளும் அப்படியே என் கண்முன்னே வந்து போனது!

காற்றில் ஜன்னல்கள் ‘டப் டப்’ என அடித்துக்கொள்ள, வெளியே ஏதோ மிதப்பது போல எனக்குள் பிரமை தட்டியது. “அப்ப உண்மையிலேயே அந்தப் பேய் என் அறைக்குள்ள வந்துடுச்சா?!” எனத் திகிலின் உச்சத்தில் உறைந்து போய் நின்றேன்.

அப்போதுதான் அந்த உறைந்துபோன அமைதியைக் கிழித்துக்கொண்டு, பாத்ரூமிற்குள் இருந்து “டப்… டப்… டப்…” என ஓசை கேட்டது!

யாரோ பாத்ரூம் கதவை உள்பக்கமாக இருந்து பலமாகத் தட்டுவது போல இருந்தது அது. என் நெஞ்சு அடைப்பதே போலாகிவிட்டது. கை கால்கள் நடுங்க, “கடவுளே… இன்னைக்கு நாம அவுட்!” என்று மனதிற்குள் கதறியபடியே, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பாத்ரூம் கதவை மெதுவாகத் திறந்து பார்த்தேன்.

அங்கே… நான் துணி துவைப்பதற்காகக் கீழே வைத்திருந்த பிளாஸ்டிக் வாளிக்கு மேல், அரைகுறையாக மூடப்பட்டிருந்த குழாயிலிருந்து “சொட்டு… சொட்டு…” எனத் தண்ணீர் விழுந்துகொண்டிருந்தது! அந்த வாளியின் காலி பிளாஸ்டிக் பரப்பில், ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரும் ‘டப்… டப்…’ என விழுந்து எதிரொலித்த அந்த ஓசையைத்தான், யாரோ கதவைத் தட்டுகிறார்கள் என்று நினைத்து நான் உயிரே போகும் அளவுக்குப் பயந்திருக்கிறேன்!

“அப்பாடா…” என்று ஒரு நொடி பெருமூச்சு விட்டு இளைப்பாறினாலும், அந்த மல்லிகைப் பூ வாசனை மட்டும் இன்னும் என்னை விட்டு விலகவில்லை.

வேகவேகமாக சோப்பைப் போட்டுத் துணியை அலசி முடித்தேன். இறுதியாக, அந்த சோப்பை எடுத்து அதன் சோப்பு தாளுக்குள் (Cover) வைக்கும் போதுதான் அந்த அதிர்ச்சி வெளிச்சத்திற்கு வந்தது!

அந்த சோப்புத் தாளில் கொட்டை எழுத்தில் போட்டிருந்தது: “JASMINE FLAVOUR” (மல்லிகைப் பூ வாசனை).

அடப்பாவிங்களா! இவ்வளவு நேரமாக என்னை முச்சந்தியில் நிக்கவச்சது இந்த மல்லிகைப் பூ சோப்பு தானா?! உண்மை தெரிந்ததும் எனக்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்றே தெரியவில்லை.

அன்று மட்டும் அந்த சோப்புத் தாளை நான் பார்க்காமல் இருந்திருந்தால், அடுத்த சில நிமிடங்களில் உயிர் கூட போயிருக்கலாம் பயத்தில். அல்லது இந்த நாளை எப்படியோ சமாளித்து இரந்தாலும் அடுத்த நாளில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கு ஓடியிருப்பேன். நல்லவேளையாகக் கண்டுபிடித்ததால், அதே ஹாஸ்டலில் தொடர்ந்து 8 ஆண்டுகள் தைரியமாக வேலை பார்க்க முடிந்தது!

கதையின் நீதி :

  1. பயம் பிரமையைக் கூட்டும்: நமது மனதில் பயம் புகுந்துவிட்டால், சாதாரண விஷயங்கள் கூட பேராபத்தாகவே தோன்றும். (குழாய் தண்ணீர் சொட்டுவது கதவு தட்டுவது போலத் தெரிந்ததும், சோப்பு வாசனை பேய் வாசனை போலத் தெரிந்ததும் இதனால்தான்).
  2. ஆராயாமல் முடிவு எடுக்கக் கூடாது: எந்த ஒரு சூழ்நிலையிலும் பயத்திற்கு அடிமையாகாமல், அதன் பின்னணியில் உள்ள உண்மையை தீர ஆராய்ந்து பார்த்தால், மிகப்பெரிய பயமும் ஒரு நகைச்சுவையான சம்பவமாக மாறிவிடும்!

C.P. NARAYANAN